வாழ்வு இனிது

எதிரணியும் பாராட்டும் பண்பாளர்! | 'டைகர்' ராஜரத்தினம் 6

டி.என் ரகு

சென்னை புளியந்தோப்பில் தன்னுடைய கபடி விளையாட்டுக்கு வலிமையான அடித்தளம் அமைத்துக் கொண்ட ‘டைகர்’ ராஜரத்தினம், அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயாரானார். சொந்த ஊரான கணபதிபுரத்துக்கு அருகில் இருக்கும் திருநயினார்குறிச்சியில் விவேகானந்தர் கபடி மன்றத்தில் சேர்ந்தார்.

அன்று முதல் இன்று வரை ராஜரத்தினத்தின் நெருங்கிய நண்பராக இருக்கும் ராஜதுரை, டைகரின் கபடி விளையாட்டைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கலாம் என்கிறார்.

“ராஜரத்தினம் விவேகானந்தர் மன்றத்துக்கு வந்தபோது, அவருக்கு பதினாறு, பதினேழு வயது இருக்கும். நான் ஏற்கெனவே அங்க விளையாடிட்டு இருந்தேன். அவரைவிட மூணு வயசு பெரியவன். ராஜரத்தினம், நான், ஸ்ரீகுமரன் ஆகிய மூவரும் மும்மூர்த்திகள் மாதிரி சேர்ந்தே இருப்போம். கபடின்னா ராஜரத்தினத்துக்கு வெறும் விளையாட்டு இல்ல, அது அவரோட சுவாசம், உயிர்” என்கிறார் ராஜதுரை.

சென்னை புளியந்தோப்பில் தன்னுடைய கபடி விளையாட்டுக்கு வலிமையான அடித்தளம் அமைத்துக் கொண்ட ‘டைகர்’ ராஜரத்தினம், அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயாரானார். சொந்த ஊரான கணபதிபுரத்துக்கு அருகில் இருக்கும் திருநயினார்குறிச்சியில் விவேகானந்தர் கபடி மன்றத்தில் சேர்ந்தார். அன்று முதல் இன்று வரை ராஜரத்தினத்தின் நெருங்கிய நண்பராக இருக்கும் ராஜதுரை, டைகரின் கபடி விளையாட்டைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கலாம் என்கிறார்.

“ராஜரத்தினம் விவேகானந்தர் மன்றத்துக்கு வந்தபோது, அவருக்கு பதினாறு, பதினேழு வயது இருக்கும். நான் ஏற்கெனவே அங்க விளையாடிட்டு இருந்தேன். அவரைவிட மூணு வயசு பெரியவன். ராஜரத்தினம், நான், ஸ்ரீகுமரன் ஆகிய மூவரும் மும்மூர்த்திகள் மாதிரி சேர்ந்தே இருப்போம். கபடின்னா ராஜரத்தினத்துக்கு வெறும் விளையாட்டு இல்ல, அது அவரோட சுவாசம், உயிர்” என்கிறார் ராஜதுரை.

ராஜதுரை - ராஜரத்தினம்

சென்னையில் முருகானந்தம் என்கிற பயிற்சியாளரிடம் கபடியின் நுணுக்கங்களை நன்றாகக் கற்றுக் கொண்ட ராஜரத்தினம், திருநயினார்குறிச்சியில் தன்னுடைய ஆட்டத்தைத் தானே செதுக்கிக் கொண்டார். “முருகானந்தம் சார் ராஜரத்தினத்தை கபடி சக்திமானாக உருவாக்கிவிட்டார்.

அதற்குப் பிறகு ராஜரத்தினம் தன்னுடைய ஆர்வத்தினால், முயற்சியினால், திறமையால் முன்னேறினார். நாங்கல்லாம் ஜெயிச்சா போதும்னு நினைப்போம்; அவரு கபடில தனக்குத் தெரியாத விஷயமே இருக்கக் கூடாதுன்னு நினைப்பார்” என்று தன்னுடைய ஐம்பது ஆண்டுக்கால நண்பரைப் பற்றிப் பெருமை பொங்கச் சொன்னார் ராஜதுரை.

கபடி விளையாடவே பிறந்தவர் ராஜரத்தினம் என்று உலகமே சொன்னாலும், அவர் இடைவிடாத பயிற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் தன்னை மெருகேற்றிக்கொள்ள எப்போதும் முயன்று கொண்டே இருந்தார். ’Some are born; many are made’ என்று சொல்வார்கள். இயற்கையாகவே அபரிமிதமான திறமை இருந்தாலும், ராஜரத்தினம் புதுப் புது நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள எப்போதும் ஆர்வமாகவே இருப்பார். அதனால்தான் அவர் கபடியில் வானளவு உயர்ந்தார் என்கிறார் ராஜதுரை.

திருநயினார்குறிச்சியில் பயிற்சி மாலை நான்கு மணிக்கு என்றால், ராஜரத்தினம் இரண்டு மணிக்கே மைதானத்தில் இருப்பார்!

“ஸ்ரீகுமரனும் நானும் அவரோட வந்துவிடுவோம். அங்க இருக்கும் ஒரு பெரிய மரத்துக்குப் பக்கத்துல ஒரு வட்டம் வரைஞ்சு வைப்போம்; ஓடி வந்து மரத்தை மிதிச்சிட்டு அந்த வட்டத்தில் லேண்ட் ஆக முயற்சி செய்வோம். ரெய்டு போயிட்டு எதிரணி வீரரை அவுட் ஆக்கிட்டுத் திரும்ப ஒரு பயிற்சி அது. ஸ்ரீகுமரனும் நானும் மரத்தை மிதிச்சிட்டு, சாதாரணமா திரும்புவோம்; ராஜரத்தினம் திசையை மாற்றி லேண்ட் ஆவாரு. எதையும் வித்தியாசமா, பார்க்கறவங்க ரசிக்கிற மாதிரி சின்ன வயசிலிருந்து செய்வாரு” என்று மலரும் நினைவுகளில் மூழ்கினார் ராஜதுரை.

“ரெய்டு செய்யும்போது ராஜரத்தினம் சர்வ சாதாரணமா நேராக டைவ் அடிப்பார். நான் எப்படியோ ரிவர்ஸ் டைவ் அடிக்கக் கத்துக்கிட்டேன். அதைப் பார்த்து, பயிற்சி எடுத்து ராஜரத்தினம் கொஞ்ச நாள்களிலேயே ரிவர்ஸ் டைவுலயும் சாம்பியன் ஆயிட்டார். யாருகிட்ட எந்த ஸ்கில் இருந்தாலும் கத்துக்க தயங்கவே மாட்டார்.”

பின்னாளில் கன்னியாகுமரி மாவட்ட கபடிக் கழகத்தின் தலைவராக இருந்த பூபதிதான் விவேகானந்தர் மன்றத்தின் பயிற்சியாளர். “அவரு மதுரை காமராஜர் யூனிவர்சிட்டி பிளேயர். தலைமைப் பண்பு உள்ளவர். எங்க அணியைக் கட்டுப்பாடோடு வழிநடத்தினார்” என்கிறார் ராஜதுரை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோயில் திருவிழாக்களில் கபடிப் போட்டிகள் ஓர் அங்கமாக இருக்கும். “அப்ப எல்லாம் ஜெயிச்சா ஒவ்வொரு பிளேயருக்கும் சோப் பாக்ஸ் பரிசாகக் கொடுப்பாங்க; பிறகு கொஞ்சம் பெரிய மனசு பண்ணி துவட்டும் துண்டைப் பரிசாகக் கொடுக்க ஆரம்பிச்சாங்க. பரிசைப் பற்றிக் கவலைப்படாமல் வெற்றி பெற வேண்டும் என்கிற வெறியோட ஆடுவோம்” என்று சொன்ன ராஜதுரை, ஒரு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

விவேகானந்தர் கபடி மன்றம் உள்ளூர்ப் போட்டிகளில் சுலபமாக வெற்றி பெறும் நிலையில் இருந்தாலும், ராஜரத்தினம் தன்னுடைய தனித்துவமான ஆட்டத்தால் சுவைகூட்டுவாராம். “எதிரணி ரொம்ப வீக்காக இருந்தால், களத்தில் மேலும் அதை அவமானப்படுத்த நினைக்க மாட்டார். சில நேரம் அந்த மாதிரி அணிகளுக்குப் போட்டியின் நடுவிலேயே பயிற்சி கொடுக்க ஆரம்பித்துவிடுவார். எதிரணியினர்கூட ராஜரத்தினத்தை நம்ம பிளேயர் என்று நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்” என்று சிரிக்கிறார் ராஜதுரை.

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், விளையாட்டு வர்ணனையாளர்.

தொடர்புக்கு: tnrags@gmail.com

SCROLL FOR NEXT