எங்கள் பகுதியில் புதிதாக ஒரு கறிக்கடை திறக்கப்பட்டது. ‘ஒரு கிலோ கோழிக்கறி வாங்கினால் 5 முட்டைகள் இலவசம். ஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் அரை கிலோ கோழிக்கறி இலவசம்’ என்கிற விளம்பரத்தைப் பார்த்து, கூட்டம் அலைமோதியது.
உடனே நானும் அந்தக் கடைக்குச் சென்று வரிசையில் நின்றபோது, கடையின் நவீனமான உள்அலங்காரத்தை ரசித்தேன். வாசலில் எழுதி இருந்த ஒரு வாசகம் என்னை ஈர்த்தது.
‘HAVE A NICE MEAT FOR YOU’ அடடா, அபாரமான கற்பனை என்று தோன்றியது. அதை ஒரு பத்திரிகைக்குத் துணுக்காக எழுதி அனுப்பினேன். பிரசுரமாகி 100 ரூபாய் சன்மானம் வந்தது.
இன்னொரு நாள் அதே கடைக்குச் சென்று வரிசையில் நின்றபோது, உள்ளே அலங்கரித்த வால்பேப்பரில் ஆங்கில வாசகங்களைப் படித்துக் கொண்டிருந்தேன்.
அதில் ஒரு தத்துவம், ‘நான் தெரிவிக்கும் கருத்துக்கு மட்டுமே நான் பொறுப்பேற்க முடியும். அதை நீ எப்படிப் புரிந்துகொண்டாய் என்பதற்கு நான் பொறுப்பல்ல.’
இதுவரை நான் அறியாத விஷயம் என்பதால், அதையும் ஒரு வார இதழுக்கு எழுதி அனுப்ப 200 ரூபாய் பரிசு கிடைத்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை அந்தக் கறிக்கடைக்குச் சென்றபோது, கல்லாவிலிருந்த முதலாளி குனிந்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார்.
வழக்கம்போல, “தோலில்லாமல் அரை கிலோ” என்றேன். குனிந்து பணத்தை எண்ணியபடியே "சிக்கனா, மட்டனா?” என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“மட்டனையும் தோலோடு கொடுப்பீங்களா?" என்று கேட்டுவிட்டேன். முதலாளி பணம் எண்ணுவதை நிறுத்திவிட்டு, ‘‘நீங்க என்ன கேட்டீங்க, தோலில்லாமல் அரை கிலோ. நான் சிக்கனா, மட்டனா என்று கேட்டேன். அதுக்கு நீங்க மட்டனையும் தோலோடு கொடுப்பீங்களான்னு கேட்டீங்க.
அடடா, நான்தான் கவனக்குறைவாகக் கேட்டுட்டேன்” என்று சிரித்துவிட்டு, “மட்டனைத் தோலோடு கொடுக்கிறது இல்லைங்க” என்றார்.
இதையும் அப்படியே ஒரு பத்திரிகைக்குக் குறுங்கட்டு ரையாக எழுதி அனுப்பினேன்.
சிறந்த நகைச்சுவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 500 ரூபாய் சன்மானம் அனுப்பினர். ஆக, உற்றுநோக்கியதால் ஒரே கடையிலிருந்து எனக்கு 800 ரூபாய் வருமானம்! ஆனால், இப்போது யாரும் அக்கம்பக்கம் பார்ப்ப தில்லை. திறன்பேசியையே கழுத்து வலிக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பல சுவாரசியமான விஷயங்களை இழந்துவிடுகிறார்கள்.
- அ. யாழினி பர்வதம், சென்னை.