வாழ்வு இனிது

வாழ்க்கையில் ஊடுருவும் மகத்தான கலைஞர்!

ஜோசப் ராஜா

அண்மையில் தமிழக அரசின் சார்பில், இசை - கவின்கலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஓவியர் சந்ருவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி, கெளரவிக்கப்பட்டது.

அவர் அங்கீகாரங்களுக்கு அப்பாற்பட்டவர்தான். அவரின் கலை விருதுகளுக்கெல்லாம் மேலானதுதான். ஆனாலும்கூட, இப்படிப்பட்ட அங்கீகாரம் எல்லாருக்கும் மகிழ்ச்சியைத் தந்துவிடுகிறது.

அவர் பெரம்பூரில் இருந்த காலத்தில் அநேக நாள்களில் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் சென்று அவரை எழுப்பியிருக்கிறேன். ஓவியத்தை, கவிதையை, தத்துவத்தை பேசியபடியே பெரம்பூரின் வீதிகளிலெல்லாம் நடந்திருக்கிறோம். கலையை வியாபாரமாக்கியவர்கள் மீது இருந்த அவருடைய கோபம், நெருப்பை நிறைத்த வார்த்தைகளால் வெளிப்படுவதை நேரில் பார்த்திருக்கிறேன். ஒரு கலைஞர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் அவர்தான்.

பதினெட்டு வருடங்களுக்கு முன்னால், ஓவியக் கல்லூரியைக் காட்டி, அந்தப் பெருங்கலைஞரைப் போய்ப் பாருங்கள் என்று அனுப்பி வைத்தார் என் குருநாதர். அப்போது அவர் கல்லூரியின் முதல்வராக இருந்தார். முதல்வர் அறையில் எங்களை உட்காரவைத்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போதெல்லாம் அவருடனான உரையாடலில் பாதி புரியாததுபோல இருக்கும். நெருங்க நெருங்க புரியத் தொடங்கியது.

என் வாழ்வின் ஒரு முக்கியமான முடிவிற்குக் காரணமாக இருந்தார் சந்ரு. குருநாதர் பேராசிரியர் அண்ணாதுரை அப்போது வேலை செய்து கொண்டிருந்த நந்தனம் கல்லூரியில் ’தணல்’ என்கிற இலக்கிய அமைப்பின் பெயரில் வாராவாரம் கவியரங்கங்கள் நடத்திக்கொண்டிருந்தார். என் கவிதை வாசிப்பு அங்கிருந்துதான் தொடங்கியது.

முதல் கவியரங்கிற்கு மக்கள் கவிஞர் இன்குலாப் வந்திருந்தார். அவர் முன்னிலையில் ‘நான் ஒரு தொழிற்சாலைத் தொழிலாளி’ என்கிற கவிதையை வாசித்தேன். மிகுந்த மகிழ்ச்சியோடு அந்தக் கவிதையையும், நான் வாசித்ததையும் பாராட்டினார்.

அந்த வரிசையில் தணல் கவியரங்கத்திற்குச் சிறப்பு விருந்தினராக சந்ரு அழைக்கப்பட்டிருந்தார். அன்றும் கவிதை வாசித்தேன். நிகழ்வு முடிந்து வழியனுப்பச் சென்றிருந்த என்னையும் என் நண்பர்களையும் பார்த்து வழக்கமான புன்னகையோடு “வாங்க டீ சாப்பிடலாம்” என்று அழைத்தார்.

அதற்காகவே காத்திருந்தவர்களைப்போல அந்தச் சின்ன வண்டிக்குள் நாங்கள் தொற்றிக்கொண்டோம். எல்லாருக்கும் தேநீர் வாங்கிக் கொடுத்தார். அவரும் நானும் நடைபாதையில் ஓரமாக நின்றுகொண்டிருந்தோம்.

என்னைப் பார்த்து, “கவிதை ரொம்ப நல்லாயிருந்துச்சு. சொந்த ஊர் எங்க?” என்றார்.

“சிவகிரி, ராஜபாளையம் பக்கம்.”

“அப்பா, அம்மா என்ன பண்றாங்க?”

“கல்லுடைக்கும் தொழிலும் விவசாயமும்.”

“நீங்க என்ன செய்யறீங்க?”

ஒருகணம்கூட யோசிக்காமல், “கவிதை எழுதுகிறேன்” என்றேன்.

அமைதியாக இருந்தார்.

“வேலைக்குப் போங்க, சம்பாதிங்க. அப்பா, அம்மாவுக்குப் பணம் அனுப்புங்க, கவிதை இன்னும் நல்லா எழுதுவீங்க” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

அவர் அமைதியாக இருந்தது, பதில் சொல்ல முடியாமல் அல்ல. என்னை அதிகமாக காயப்படுத்தாமல் வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்திருக்கிறார் என்கிற உண்மை புரிந்தது.

அவருடைய வார்த்தைகள் கிட்டத்தட்ட என் இதயத்தைக் குத்திக் கிழித்தன. புத்தகங்கள், இலக்கியக் கூட்டங்கள், இலக்கிய விவாதங்கள், கன்னிமாரா நூலகம் என்று சுற்றிக்கொண்டிருந்தவன், வாழ்க்கையைப் பற்றி யோசித்துக்கொண்டு வங்காள விரிகுடாவின் முன்னால் உட்கார்ந்திருந்தேன்.

இதோ, நான் வாழ்க்கைக்காக உழைக்கத் தொடங்கி பதினெட்டு வருடங்கள் கடந்துவிட்டன. அன்றிலிருந்து இன்றுவரையிலும் சிந்தனையிலும் எழுத்திலும் எந்தத் தொய்வுமில்லை. மேலும் மேலும் மெருகேறிக்கொண்டுதானிருக்கிறது.

என் முதல் கவிதைத் தொகுப்பான அழைப்பின் பாடல்களுக்கு அவரிடம்தான் அணிந்துரை வாங்கினேன். நேரம் எடுத்து எழுதிக் கொடுத்தார். அணிந்துரையை வாங்கிக்கொண்டு குருநாதரைச் சந்திக்க காஞ்சிபுரம் சென்றேன்.

காமாட்சி அம்மன் கோயில் மண்டபத்தில் அமர்ந்து அணிந்துரையை வாசித்துக் கொண்டிருந்தவர், ஒரு வரியை வாசித்துவிட்டு கண்கலங்கியபடி என்னைப் பார்த்தார். “ஒரு மகத்தான கலைஞரால் மட்டும்தான் இப்படி எழுத முடியும் ஜோசப்” என்றார்.

அந்த வரி, “காதலிக்க நேரமில்லை என்று சொல்கிறாள் பாலியல் தொழிலாளி” என்பதுதான்.

கலை சமூகத்திற்காக என்று விடாப்பிடியாக இயங்கிக்கொண்டு, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஊடுருவும் அந்தக் கலைஞர் வாழ்வாங்கு வாழவேண்டும்!

கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர் | தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

SCROLL FOR NEXT