சென்னை போன்ற பெருநகரம் ஒன்றில் ‘தீவு’ என்கிற சொல்லைக் கண்டவுடன் ஆச்சரியம் தொற்றுவது இயல்பு. நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றுக் கழிமுகத்தில் தீவுத்திடல் பகுதி அமைந்திருப்பதைப் போன்று, அடையாற்றுக் கழிமுகப் பகுதியில் அமைந்திருக்கிறது ‘க்விபில் தீவு’ (Quibble Island).
பட்டினம்பாக்கத்தில் இருந்து அடையாறு நோக்கிச் செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த ஆற்றுத்தீவின் எல்லையில், ஜேம்ஸ் பிராடி என்பவர் 11 ஏக்கர் பரப்பில் 1796இல் ஒரு கோட்டையைக் கட்டினார்; அது அரசு இசைக் கல்லூரியின் உள்ளே தற்போதும் உள்ளது. அதேநேரம், க்விபில் தீவு என அழைக்கப்படும் தீவின் மறு எல்லை 1816இல் காலியாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
க்விபில் தீவின் மையப்பகுதியில் 6.5 ஹெக்டேர் பரப்பில் ஓர் இடுகாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1746, அக்டோபர் 24இல் சுமார் ஆயிரம் பேர் கொண்ட பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி படை, 10,000 பேர் கொண்ட ஆர்க்காட்டு நவாப் படையை இந்தத் தீவுக்கு அருகே தோற்கடித்தது.
இந்தப் போருக்குப் பிறகே, இங்கு கல்லறைத்தோட்டம் அமைந்ததாகச் சொல்லப்படுகிறது. தற்போது இந்தப் பகுதி முழுக்கவே கல்லறை களால் நிறைந்திருக்கிறது.
அதில் பழமையானதாகக் கருதப்படுகிறது, 1884இல் எட்வர்ட், வில்ப்ரெட், அமெலியா என மூன்று குழந்தைகளின் நினைவாக அமைந்த கல்லறை; இது, ஒரு ‘மினிசர்ச்’ போல வடிவமைக்கப் பட்டுள்ளது.
இந்தக் குழந்தைகள் மூன்று வயதைத் தொடும் முன்பே இறந்தவர்கள். 1960களில் தமிழ் சினிமாவில் மேற்கத்திய பாணி நகைச் சுவையைப் புகுத்திய நடிகர் ஜெ.பி.சந்திரபாபுவின் கல்லறைக்கு மரியாதை செலுத்து வதற்காகவே, க்விபில் தீவைத் தேடி வருபவர்களும் உண்டு.
அது மட்டுமல்லாமல் எழுத்தாளர் வலம்புரிஜான், நடிகர் நாகேஷின் மனைவி ரெஜினி உள்ளிட்டோரின் கல்லறை களும் இங்கே இருக்கின்றன. சமீபத்திய ஆண்டுகளாக சாந்தோம் தேவாலய நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டுவரும் க்விபில் தீவு கல்லறைத் தோட்டத்தில் புதிதாக அடக்கம் செய்ய எவருக்கும் அனுமதியில்லை.
ஒருவருடைய குடும்பத்தில் ஏற்கெனவே யாராவது இங்கே அடக்கம் செய்யப்பட்டிருந்தால், மீண்டும் அடக்கம் செய்ய அனுமதி உண்டு. “கோயம்புத்தூர், கூடுவாஞ்சேரியில இருந்து மட்டுமல்லாமல் வெளிநாட்டுல இருந்தும் இங்க புதைக்க வர்றவங்க உண்டு.
இங்கிருக்கிற கல்லறை களைத் தேடி வர்ற குடும்பங்கள் எல்லாரையும் தெரியும்கறதால, நாங்க ‘ஓகே’ சொன்னாத்தான் சாந்தோம் சர்ச்சுக்கு பெர்மிஷன் கேட்கப் போவாங்க. ஆனா, புதுசா வர்ற யாருக்கும் இங்க இடமில்ல” என்று கண்டிப்புடன் சொல்கிறார் க்விபில் தீவுக் கல்லறையின் காவலாளி ஜான். நான்கு தலைமுறைகளாகத் தனது குடும்பம் இப்பணியைச் செய்துவருவதாகச் சொல்கிறார்.
ஒருகாலத்தில் திரைப்படப் படப்பிடிப்புகள் இங்கு நடத்தப் பட்டிருந்தாலும், தற்போது எவருக்கும் அதற்கான அனுமதி வழங்கப்படு வதில்லை என்று சொல்லும் ஜான், ‘மொபைல்ல போட்டோ, வீடியோ எடுக்கவும் கூடாது’ என்றார் கறாராக.
ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பான வரலாற்றைக் கொண்ட இவ் விடம், சென்னைக்குச் சுற்றுலா வருவோரின் ‘விசிட்டிங் ஸ்பாட்’டாக அமைவதற்கான அத்தனை தகுதிகளையும் கொண்டது.
- uthayasankaran.p@hindutamil.co.in