

லார்டு பிக்கட்டு எனும் கவர்னர் சென்னைப்பட்டணத்துத் துறைமுகத்தில் பொ.ஆ. (கி.பி.) 1775ஆம் ஆண்டு மன்மத வருஷத்தில் வந்திறங்கிய வரலாற்றை, சுதேசமித்திரன் பத்திரிகை 137 ஆண்டுகளுக்குப் பின்னர் விவரித்தது மட்டுமல்லாமல் கவர்னருக்கு நல்வரவு கூறிப் பாடிய சோபனப் பாடலைத் தனது வாசகர்களுக்கு வழங்கியுள்ளது.
அந்தக் காலத்தில் அதிவிருஷ்டி (அதிக மழை), அநாவிருஷ்டி (பஞ்சம்) என்னும் சங்கடங்களால் பயிர்கள் பாழாகிப் போய் அடிக்கடி அரிசி கிடைக்காத கோரமான பஞ்சம் நேரிடுவதும், அப்போது கோபாலபுரம் முதல் தேவனாம்பட்டணம் வரையில் இத் தேசத்து விளைபொருள்களைப் பெரிய படகில் ஏற்றிப்போவது வழக்கமாம்.
அப்போது அகவிலையைச் சரிப்படுத்த துரைத்தனத்தார் பிரவேசித்து, வர்த்தகர்களுக்குக் கட்டளையிடுவது வழக்கமாக இருந்ததாகவும் இவ்வகையான காரியங்களைப் பற்றி அச்சோபனத்தில் பெண்கள் கூறியுள்ளது விநோத மாயிருக்கும் என்கிற அறிமுகத்துடன் சோபனம் பிரசுரமாகி இருக்கிறது.
லார்டு பிக்கட்டு இங்கிலாந்திலிருந்து வந்திறங்கிய நல்வரவை 16 அடிகளில் வர்ணித்திருப்பதைக் காண முடிகிறது. சாதாரணமாக சோபனம் (மங்கல வாழ்த்து) என்பது வரவேற்கும் விதமாகப் பாடப்படுவது என்றாலும், விசேஷமாகப் பூசனை செய்யும் தெய்வங்களைப் போற்றிப் பாடப்பட்டு வரு வது மட்டுமல்லாமல் வேறுவிதமாகவும் பயன்படுத் தப்பட்டு வந்திருக்கிறது.
பெ.ஆறுமுக முதலியா ரால் சென்னை முரஹரி அச்சுக்கூடத்தில் 1921இல் பதிப்பிக்கப்பட்ட மயூரநாத சோபனத்தில் நகைக் கடைக்கு விளம்பரமாகவும் சோபனத்தின் கடவுள் வாழ்த்து அமைந்திருக்கிறது.