வாழ்வு இனிது

ஸ்விஸ் எனும் சொர்க்கம் 24:  போரைக் கடந்து வந்த இசைக் குழு

ஜி.எஸ்.எஸ்

சுவிட்சர்லாந்தின் வெவே என்கிற பகுதியில் நடந்த இசை விழாவுக்கு சென்றிருந்தோம். அந்நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசை நடனக் குழுக்கள் பங்கேற்றன. அங்கு கலந்து கொண்ட இசைக் குழுக்கள் பிரபலமானர்கள் கிடையாது. ஆனால் அங்கு இசை ரசிகர்கள் அதிகம் என்பதால் கணிசமாக பார்வையாளர்கள் வந்திருந்தார்கள்.

குறிப்பாக, பெரும் போரினால் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் உக்ரைனிலிருந்து ஒரு நடனக் குழு வந்திருந்தது. உக்ரைன் இசைக் குழுவில் சிறுவர்களும் இடம்பெற்றிருந்தனர். அழகியலோடு அமைந்திருந்தது அக்குழுவின் நடனம். இந்த நடனக் குழுவை உருவாக்கிய நடாலியா, கிரீனி ஆகியோரிடம் சிறிது நேரம் பேசினோம். தங்கள் குழுவின் பெயர் ’ஸ்வீட்நோக்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். இதன் பொருள் 'சூரிய உதயம்.’ என்று பதிலளித்தனர்.

நடனக் குழுவைச் சேர்ந்த அனைவரும் மலர்களாலான வளையங்களைத் தலையில் அணிந்திருந்தது அழகாக இருந்தது. ”இந்தக் குழுவின் இசை ஏற்கெனவே இருந்த கிராமிய இசை ஆல்பங்களில் இருந்து எடுத்து மேம்படுத்தப்பட்டதாகவும், நடன அமைப்பு முறை முழுவதும் தன்னுடையது” என்றும் கூறினார் நடாலியா.

”எங்கள் நாட்டின் தற்போதைய சூழல் மிகவும் வருத்தமளிக்கிறது. இருப்பினும் கலாச்சாரம் மிக முக்கியமானது (Culture matters) அதைப் பிரதிபலிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் இங்கு வந்தோம்” என்றார்.

வெவே இசை விழாவுக்கு வந்தவர்களில் கணிசமானவர்கள் உணவுப் பிரியர்கள். பல நாடுகளின் உணவு வகைகள் அங்குள்ள ஸ்டால்களில் காணப்படும். இந்தியர்கள் தம் கடைகளில் சமோசா, பானிபூரி, ரொட்டி போன்றவற்றை விற்றனர். வீகன் உணவுகளுக்கான தேவை அங்கு அதிகமாகவே இருந்தது.



அங்கு வித்தியாசமான முறையில் அமைந்திருந்த கடை ஒன்று மனதைக் கவர்ந்தது. எத்தியோப்பியாவை சேர்ந்த ஒரு பெண்மணி கீழே அமர்ந்து கொண்டு, சூடாகச் சில உணவுகளைச் செய்து வழங்கிக் கொண்டிருந்தார். நாம் சென்றபோது அவருக்கு உதவியாளராக இருந்த ஒரு பெண்மணி வரவேற்றார். அங்கிருந்த எளிய பெஞ்ச்சில் உட்காரச் சொன்னார். தண்ணீர் கொடுத்துவிட்டு, என்ன தேவை என்பதை நான் கூறியவுடன் சமைத்துக் கொண்டிருந்த பெண்மணியிடம் கூறினார்.

மண்பாண்டங்களில் பரிமாறப்பட்ட அந்த எளிய உணவைச் சாப்பிட்டுவிட்டு, அதற்குரிய தொகையைக் கொடுத்துவிட்டுக் கிளம்பும்போது, இருவருமாக எழுந்து நன்றி கூறிய விதம் மனதைத் தொட்டது. எங்களிடம் மட்டுமல்ல அங்கு வந்த வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் அந்தப்பெண்கள் அன்பாக நடந்து கொண்டார்கள்.

லொசான் நகரத்தைப் பெருமை கொள்ள வைக்கும் விழா ஒன்றையும் கண்டுகளித்தோம். சிட்டி மியூசிக் கார்னிவல் (City Music Carnival) என்கிற பெயரில் நடைபெறும் இந்த விழா 1968லிருந்து நடைபெறுகிறது. நான்கு நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

(பயணம் தொடரும்)

SCROLL FOR NEXT