வணிக வீதி

என் தொழில்முனைவுப் பயணம்: சுகன்யா நாகராஜன் பகிர்வு

Guest Author

நான் சுகன்யா நாகராஜன். கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் வளர்ந்த நான், எம்சிஏ முடித்து சென்னையில் விப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணியாற்றினேன். திருமணத்துக்குப் பிறகு 2013-ம் ஆண்டு கணவருடன் dependent visa-வில் அமெரிக்கா வந்தேன். dependent visa காரணமாக சில ஆண்டுகள் வேலை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. படித்து, வேலை பார்த்துவிட்டு திடீரென வேலை இல்லாமல் இருப்பது எனக்கு ஒரு பெரிய ஏமாற்றமாக இருந்தது.

2018-ல் வேலை செய்வதற்கான அனுமதி கிடைத்தபோது, மீண்டும் எனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். தொழில், வணிக பின்னணி எதுவும் இல்லாத நான், கணவரிடம் $400 (ரூ.38,000) வாங்கி, அந்தப் பணத்தில் மெழுகுவர்த்தி தயாரிப்பதற்குத் தேவையான ஆரம்பகட்ட மூலப்பொருட்களை வாங்கினேன். வீட்டிலிருந்த ஒரு பழைய coffee pot-ஐ பயன்படுத்தி, என் வீட்டிலேயே soy candles தயாரிக்கத் தொடங்கினேன் அப்படித்தான் FragrantCandlesUS நிறுவனம் உருவானது.

ஆரம்பத்தில் Etsy சர்வதேச இணைய சந்தையில் கிடைத்த ஒவ்வொரு ஆர்டரும் எனக்கு பெரிய விஷயமாக இருந்தது. வர்த்தகம் தொடங்கிய சில வாரங்களிலேயே அன்னையர் தினம் சமயத்தில் நான் உருவாக்கிய ஒரு மெழுகுவர்த்தி வாடிக்கையாளருக்கு மிகவும் பிடித்து, இரண்டு நாட்களில் சுமார் 40 ஆர்டர்கள் கிடைத்தன. அப்போதுதான் இந்தச் சிறிய முயற்சி ஒரு உண்மையான வர்த்தகமாக வளரக்கூடும் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது. கணவரிடம் வாங்கிய $400-ஐ சுமார் 5 மாதங்களுக்குள் திருப்பிக் கொடுத்தேன்.அதன்பிறகு இணையவழி வாடிக்கையாளர் போக்கு, புதிய தயாரிப்புகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் பற்றி தொடர்ந்து கற்றுக்கொண்டேன். மெழுகுவர்த்தி வர்த்தகத்தில் கிடைத்த அனுபவமும் வருமானமும் அடுத்த முயற்சியைப் பற்றி சிந்திக்க வைத்தது.

2019-ல் Coastal Wedding Decor என்ற திருமண அலங்கார வர்த்தகத்தை தொடங்கினேன். Personalized shells-ல் தொடங்கிய இந்த முயற்சி பின்னர் திருமண அலங்கார பொருட்கள் வரை வளர்ந்தது.இணைய வணிகம் மட்டுமல்லாமல் முற்றிலும் வேறுபட்ட ஒரு துறையிலும் முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், 2024-ல் இல்லினாய்ஸ் நகரில் Pour Yourself என்ற பீர் ட்ரெய்லர் வர்த்தகத்தை தொடங்கினேன்.

அதன் உரிமையாளராக பணியமர்த்தல், சரக்கு மேலாண்மை, சந்தைப்படுத்தல், கணக்கியல் மற்றும் தினசரி நடவடிக்கைகள் என பல்வேறு பணிகளிலும் நேரடியாக ஈடுபட்டு வருகிறேன். இந்தப் பயணம் எப்போதும் எளிதாக இருந்ததில்லை. வர்த்தகத்தில் வளர்ச்சியும் இருந்தது; பின்னடைவுகளும் இருந்தன. ஆனால் ஒவ்வொரு முறையும் அதிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டும் தொடங்குவது தான் என்னுடைய தொழில் முனைவு அனுபவத்தில் மிக முக்கியமான பாடமாக இருந்தது.

இன்று திரும்பிப் பார்க்கும்போது, நான் ஆரம்பித்தது பெரிய முதலீட்டிலோ, பெரிய அலுவலகத்திலோ அல்ல. $400 மற்றும் வீட்டிலிருந்த ஒரு பழைய coffee pot — அவ்வளவுதான். என்னுடைய இந்த அனுபவத்தை பகிர விரும்புவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. திருமணத்துக்குப் பிறகு dependent visa-வில் வெளிநாடுகளுக்கு வரும் பல பெண்கள், குறிப்பாக தமிழ் பெண்கள், படிப்பும் திறமையும் இருந்தும் குடும்ப சூழ்நிலை அல்லது விசா கட்டுப்பாடுகள் காரணமாக சில ஆண்டுகள் பணிக்கு செல்லாமல் இருக்க வேண்டியிருக்கலாம்.

ஒரு கனவு ஐந்து வருடம் தாமதமாகலாம்; பத்து வருடம் தாமதமாகலாம். அதனால் அந்தக் கனவு முடிந்துவிட்டதாக அர்த்தமில்லை. பெரிய முதலீடு இருந்தால்தான் தொழில் தொடங்க முடியும் என்பதும் இல்லை. நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பிலிருந்து சிறியதாக ஆரம்பித்து, தொடர்ந்து கற்றுக்கொண்டு முன்னேற முடியும்.

$400 முதலீட்டில் தொடங்கிய இந்தச் சிறிய முயற்சி, இன்று பல்வேறு தொழில்களாக வளர்ந்து, எனது ஆண்டு வருமானம் அமெரிக்க மதிப்பில் சுமார் $200,000 (இந்திய மதிப்பில் சுமார் ₹1.8 கோடி) என்ற நிலையை எட்டியுள்ளது. என்னுடைய கதையைப் படிக்கும் ஒரு பெண்ணாவது “என்னாலும் ஏதாவது தொழில் செய்ய முடியும்” என்று நினைத்தால், அதையும் என்னுடைய தொழில் முனைவுப் பயணத்தின் இன்னொரு வெற்றியாகவே நான் கருதுவேன்.

– அமெரிக்காவிலிருந்து சுகன்யா நாகராஜன்

SCROLL FOR NEXT