நடப்பு 2026-ம் ஆண்டில் இதுவரை தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி50 14.25 சதவீதமும், மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 15.6 சதவீதமும் சரிந்துள்ளன. இதனால் இந்தியா உலகளவில் மோசமான செயல்திறன் கொண்ட முக்கிய பங்குச் சந்தைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை நிலவியபோதிலும், புதிய பங்கு வெளியீடு சந்தையானது (ஐபிஓ) 2026-ம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் சாதனை படைத்துள்ளது. இந்த 3 மாதங்களில் 69 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் சுமார் ரூ.90,500 கோடியைத் திரட்டியுள்ளன. இதன் மூலம் இந்த ஆண்டில் ஐபிஓ மூலம் திரட்டப்பட்ட தொகை ரூ.12.5 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில் வெளியானதில் தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) ஐபிஓ மிகப்பெரியதாகும், இது ரூ.22,562 கோடியைத் திரட்டியது. அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மற்றும் மணிப்பால் ஹெல்த் என்டர்பிரைசஸ் ஆகியவை முதலீட்டாளர்களிடமிருந்து முறையே ரூ.9,795 கோடி மற்றும் ரூ.9,275 கோடியைத் திரட்டின. இந்த 3 ஐபிஓ-க்கள் மட்டும் ரூ.41,600 கோடிக்கும் அதிகமான நிதியைத் திரட்டி உள்ளன. இவை தவிர, மேலும் 15 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் தலா ரூ.1,000 கோடிக்கும் அதிகமான நிதியைத் திரட்டியுள்ளன.