மேற்கு ஆசியப் போர், பணவீக்க அச்சம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து இறங்கு முகமாக உள்ளன. இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் 6-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொடக்கப் பொதுப் பங்குகளை வெளியிட்டன (IPOs).
இந்த வாரம் விநாயகர் சதுர்த்தி விடுமுறை காரணமாக 4 நாட்கள் மட்டுமே சந்தை இயங்கும். எனினும், இந்த வாரமும் 6 சிறு, நடுத்தர நிறுவனங்கள் (எஸ்எம்இ) உட்பட 11 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட உள்ளன.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரூ.22,561.57 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) ஐபிஓ வெளியாகிறது. ஒரு பங்கின் விலை ரூ.1,700 முதல் ரூ.1,785 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதி முதல் 21 வரை விண்ணப்பிக்கலாம்.
24-ம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது. இதுதவிர, ஹீரோ மோட்டார்ஸ் (ரூ.1,000 கோடி), எஸ்.எஸ். ரீட்டெய்ல் (ரூ.500 கோடி), சோனாசெலக்ஷன் இந்தியா (ரூ.141.57 கோடி), ஜிண்டால் சுப்ரீம் (ரூ.124 கோடி) ஆகிய நிறுவனங்களும் ஐபிஓ வெளியிடுகின்றன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.24,328.02 கோடி.
இதுதவிர, ஆக்ஸியம் காஸ் இன்ஜினியரிங், ஸ்பெக்ட்ரா டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் உட்பட 6 சிறு, நடுத்தர நிறுவனங்களும் ஐபிஓ வெளியிடுகின்றன. இதன் மதிப்பு ரூ.246 கோடி.