

நீரின்றி உயிர்கள் இல்லை. உயிர் இன்றி அறிவு இல்லை. இது உயிர்க்கோள விதி. இதில் செய்யறிவுகள் வேறுபடுகின்றன. செய்யறிவுக்கு உயிரில்லை. ஆயினும் அறிவு உண்டு. உயிர்களுக்குப் பசியும் தாகமும் உண்டு.
செய்யறிவுக்கு உண்டா? இக்கேள்வி பொருளற்றது போலத் தோன்றும். சற்றே சிந்தித்தால் மிகவும் ஆழமானதொரு கேள்வி என்று புரியும். செய்யறிவுகள் இயங்க மின்சாரம் தேவை. மின்சாரமே அவற்றின் அடிப்படை ஆகாரம். செய்யறிவுகளின் பசி எல்லைகளற்றது. அவற்றின் மின் நுகர்வு மிகப் பெரிய சிக்கல்களைக் கொண்டுவந்துள்ளது. ஒரு மாடலைப் பயிற்றுவிக்கவே 70 ஜிகா வாட்ஸ் வரை மின்னாற்றல் தேவைப்படுவதாகக் கூறுகிறது ஐ.நா. பல்கலைக்கழக அறிக்கை.
செய்யறிவுகளுக்குத் தேவையான மின் உற்பத்தியும் பகிர்மானமும் இன்றைய சூழலில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியச் சவாலாக உருவெடுத்துள்ளது. இச்சிக்கல்கள் நிறுவனங்கள் என்னும் எல்லைவரை மட்டுமே நின்றுவிடுவதில்லை. அரசுகளும் இச்சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வந்துள்ளது.
செய்யறிவுகளின் பசிக்கு மின்சாரம். அவற்றின் தாகத்துக்கு நீர். ஒவ்வோர் ஆண்டும் நீர்த்தேவையும் அதிகரித்து வருகிறது. அடுத்த சில வருடங்களில் செய்யறிவுகளின் நீர்த்தேவை 130 கோடி மக்களின் நீர்த்தேவையை ஒத்திருக்கும் என்கிறார்கள். இது நீர், சுற்றுச்சூழல், சுகாதாரத்துக்கான ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் (United Nations University Institute for Water, Environment and Health (UNU-INWEH)) வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு.