சென்னை குரோம்பேட்டை பகுதியில் இருக்கும் பச்சைமலை குன்றுக்குத் தினமும் காலை முதல் மாலை வரை நிறைய பேர் மலையேற்றம் செய்யவும், கோயிலைக் காணவும் செல்வது வழக்கம்.
பெருநகரத்தின் மத்தியில் இருக்கும் இந்தப் பச்சைமலையில் செருந்தி, மோதிரக்கண்ணி, குகமதி, காட்டு ஆதொண்டை, முல்லை, வேம்பு, புங்கன், ஒதியன், பூவந்தி, வெப்பாலை, பிடவம், களா, மிளகரணை, காட்டு எலுமிச்சை, நிலக்குமிழ், ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி வகை என்று பல வகையான தாவரங்கள் உள்ளன. அவற்றைச் சார்ந்த தேனீக்கள், நிறைய வண்ணத்துப்பூச்சி வகைகள், பல பறவை வகைகள், தட்டான்கள், மேலும் பல உயிரினங்கள் வாழும் பல்லுயிர் சூழல் நிறைந்த இடமாக இம்மலை உள்ளது.
தேன்துளிச் சிறகன் (Amber winged Marsh Glider)
பச்சைமலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மிகவும் அரிதான இரண்டு தட்டான் வகைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு அரிதான தட்டான் தேன்துளிச் சிறகன் என்று அழைக்கப்படும் Amber-winged Marsh Glider. இதன் அறிவியல் பெயர் Hydrobasileus croceus. இது சென்னையில் முதன் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு தட்டான் நீலக் கண் தும்பி என்று அழைக்கப்படும் Common Torrent Hawk (Epophthalmia vittata). தமிழ்நாட்டில் 2023இல்தான் முதன்முதலில் இது கண்டறியப்பட்டது. சென்னையில் கிண்டி தேசியப் பூங்கா, மூன்று - நான்கு இடங்களில் மட்டுமே இது பதிவு செய்யப்பட்டுள்ளது. பச்சைமலையில் முதன் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலக் கண் தும்பி (Common Torrent Hawk Dragon fly)
அதேநேரம் இந்த மலைப் பகுதியை சுற்றி வாழும் மக்களில் சிலர் காலைக் கடன்களை இங்குதான் கழிக்கின்றனர். பச்சைமலை பல்லுயிர் சூழலைக் கருத்தில் கொண்டு மலையில் மனிதர்கள் மலம்கழிப்பது, பிளாஸ்டிக் குப்பைகளை போடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க அரசும் அந்த பகுதியைச் சேர்ந்த மக்களும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இந்தப் பகுதியின் சூழலியல் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
- கட்டுரையாளர், மா.அழகப்பன், இயற்கை ஆர்வலர்.