உயிர் மூச்சு

'ஈரோடும் சூழல் பாதுகாப்பும்’ கருத்தரங்கு

செய்திப்பிரிவு

‘ஈரோடும் சூழல் பாதுகாப்பும்’ கருத்தரங்கு கடந்த ஞாயிறு திண்டல் ‘VET’ கல்லூரியில் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் அன்றும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முக்கியமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்புகள் குறித்த இக்கருத்தரங்கில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

வல்லுநர்களின் உரைகள், புத்தக வெளியீடு, தமிழ்நாட்டில் சமகாலத்தில் நிகழ்ந்துவரும் முக்கியமான சூழல் பாதுகாப்பு முன்னெடுப்புகள், ஆவணப்பட வெளியீடு, ஒளிப்படக் கண்காட்சி, கலந்துரையாடல் எனச் சூழல் பாதுகாப்பு சார்ந்து பல்வேறு நிகழ்வுகள் இக்கருத்தரங்கில் நடைபெற்றன.

முன்னாள் தலைமை ஆசிரியர் ஜி. பரமசிவனின் முயற்சியால், ஈரோடு மாவட்டத்தின் முதல் பறவைகள் சரணாலயமாக வெள்ளோடு ஏரி 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. இச்சரணாலயம் குறித்த பாதுகாப்பு வரலாற்றையும் முன்னெடுப்புகளையும் விளக்கும் வகையில், எழுத்தாளர் கலைக்கோவன், ஜி. பரமசிவனுடன் நிகழ்த்திய உரையாடல் வடிவில் உருவான 'சிறகுகள் விரிந்த கனவு' எனும் நூல் வெளியிடப்பட்டது. சமீபத்தில் வெள்ளோடு குளத்தின் பல்லுயிர் சூழல் குறித்து, கானுயிர் ஒளிப்படக் கலைஞர் ஜனார்த்தனன் உருவாக்கிய ஆவணப்படமும் திரையிடப்பட்டது

2022இல் ஈரோடுக்கு அருகிலுள்ள திருப்பூரில், நஞ்சராயன் குளமானது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. சமகாலத்தில் சரணாலயம் எவ்வாறு அறிவிக்கப்பட்டது என்பது குறித்தும், அவர்கள் என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றினர் என்பது குறித்தும் திருப்பூர் இயற்கை கழகத்தைச் சேர்ந்த, பறவைகள் - சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவீந்திரன் காமாட்சி விரிவாக விளக்கினார். நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் குறித்த சிறிய ஆவணப்படமும் திரையிடப்பட்டது.

30 ஆண்டுகளுக்கு முன்னர் மாசடைந்த பவானி ஆற்றை, மருத்துவர் சத்தியசுந்தரி, பலருடன் இணைந்து ஒரு மக்கள் இயக்கமாக, அறிவியல் - சட்ட ரீதியாக மீட்டெடுத்தார். அந்த வரலாற்றைப் பதிவு செய்யும் வகையில், ஈரோடு சர்மிளா எழுதிய 'வானி - பவானியை மீட்ட வரலாறு' எனும் இளையோர் நாவல் வெளியிடப்பட்டது. அத்துடன் இது குறித்த ஆவணப்படமும் திரையிடப்பட்டது.

மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த ரவீந்திரன் நடராஜன், கார்த்திகேயன் பார்கவிதை ஆகியோர், வைகை ஆற்றில் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்ட கள ஆய்வுகள் குறித்து உரையாடினர். வைகை ஆறு தொடங்கும் இடம் முதல் கடலில் கலக்கும் இடம் வரை நேரில் கள ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள சூழலியல் மாற்றங்கள், மாசுபாடு, பல்லுயிர்கள் குறித்து அறிவியல் அடிப்படையில் ஆவணப்படுத்திய தரவுகளைத் தீர்வுகளுடன் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

மேட்டூர் பண்ணவாடி அருகே காவிரி ஆற்றின் உயிர்ச்சூழல் எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும் அதன் கரைக்காடுகள், புல்வெளிகள், மண்மேடுகள், மணல்மேடுகள், அங்கு வாழும் உயிரினங்களையும் ஆவணப்படுத்தும் முயற்சியை ஷாஜன், செந்தில், அவர்களின் நண்பர்கள் முன்னெடுத்தனர். கடந்த 8 ஆண்டுகளாகக் காவிரியில் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகள் கொண்டு, 'பண்ணவாடி - காவிரியின் சூழல் அறிவோம்' எனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆவணப்படம் ஒன்றும் திரையிடப்பட்டது.

எழுத்தாளர் நக்கீரன், 'சூழல் பாதுகாப்பு - அன்றும் இன்றும்' என்கிற தலைப்பில் உரையாற்றினார். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளச் சமகாலத்தில் முன்வைக்கப்படும் தீர்வுகள், அவற்றின் உண்மைத் தன்மை, அவற்றின் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

சூழல் பாதுகாப்பில் உள்ளூர் மக்களின் பங்களிப்பு, அனைத்துச் சமூக மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது ஒரு தொடர் செயல்பாடு' என்பதையும் முன்வைத்தார். மேலும், 'கார்பன் சேமிப்பு வங்கியாக' (Carbon Sink) கடல்கள் ஆற்றிவரும் முக்கியப் பங்கு குறித்தும், அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விவரித்த அவர், 'நீலம் இல்லாமல் பச்சயம் இல்லை' என்கிற கருத்தையும் பதிவுசெய்தார்

ஆய்வாளர் பிரவீன்குமார், ஈரோடு மாவட்ட குன்றுகளில் அரிதாகக் காணப்படும் முள்ளெலி போன்ற சிறு பாலூட்டிகள் குறித்து உரையாற்றினார். முனைவர் தணிகைவேல், தாமிரபரணி ஆற்றின் உயிர்ச்சூழல் தற்போது எவ்வாறு பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து உரையாற்றினார்.

இந்த ஆண்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள எலத்தூர் குளம், நாகமலை குன்று ஆகியவற்றைத் தமிழ்நாட்டின் மூன்றாவது, நான்காவது பல்லுயிர்ப் பாரம்பரியத் தலங்களாக (Biodiversity Heritage Sites) தமிழ்நாடு அரசு அறிவித்தது. இவை ஈரோடு மாவட்டத்தின் முதல் இரண்டு பாரம்பரியத் தலங்களாகும். சூழல் அறிவோம் தீபக் வெங்கடாசலம், இவ்விரு இடங்களும் எந்தெந்த வழிமுறைகளின் கீழ், எந்தத் தரவுகளின் அடிப்படையில் முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன, பல்லுயிர் மேலாண்மைக் குழுவின் (BMC) முக்கியத்துவம், உள்ளூர் மக்களின் பங்களிப்பு குறித்தும் விரிவாக விளக்கினார்.

இந்தக் கருத்தரங்கம், 90களில் ஈரோடு மாவட்டத்தில் நிலவிய சூழலுக்கேற்பவும் அன்றைய சட்டதிட்டங்களுக்கு உள்பட்டும் முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான பாதுகாப்பு முயற்சிகளையும், இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் சூழல் பாதுகாப்பு முன்னெடுப்புகளையும் ஒருசேர மக்களிடம் கொண்டு சேர்த்தது. மேலும், காலநிலை மாற்றத்தின் பின்னணியில் இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சூழல் அங்கங்களை அறிந்து, அவற்றை அறிவியல் பூர்வமாக ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.

இத்தகைய ஆவணப்படுத்துதலோடு மக்கள் பங்களிப்பையும் ஒருங்கிணைத்துச் சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மக்களிடையே ஆழமாக விதைத்துள்ளது. இக்கருத்தரங்கில் தாவர ஆராய்ச்சியாளர் நரசிம்மன், கல்வி நிறுவனர் சந்திரசேகர், மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன், அக்னி தங்கவேலு, திரைக் கலைஞர் ரோகினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT