

மகாராஷ்டிரத்தின் தடோபா புலி சரணாலயத்தின் நவேகாவ்வில் ஒரு இடப்பெயர்வு | படங்கள்: செந்தில்குமரன் |
இந்திய புலிக் காப்பகங்கள், புலிகள் பாதுகாப்பையும் உள்ளூர்ப் பழங்குடிகளின் வாழ்வாதாரத்தையும் சமநிலைப்படுத்தும் வகையில் காட்டின் மையப்பகுதி (Core Zone), இடைநிலைப் பகுதி (Buffer Zone) என்று பிரிக்கப்பட்டுள்ளன.
காட்டின் மையப்பகுதி என்பது புலிகளின் வாழிடப் பகுதி. இது முழுமையாகப் பாதுகாக்கப்பட்டது. இங்கு மனித இடையூறுகள், வேளாண்மை, கால்நடை மேய்ப்பு, நிரந்தரக் குடியிருப்புகள் போன்றவை அனுமதிக்கப்படாது. காரணம், புலிகள் இனப்பெருக்கம் செய்ய, குட்டிகளை வளர்க்க, தொந்தரவு இல்லாத காட்டுப் பகுதிகளில் வாழ்வதற்குத் தேவையான முழு அமைதியையும் இடத்தையும் தருவதற்கு உருவாக்கப்பட்ட பகுதி இது.
காட்டின் மையப்பகுதியைச் சூழ்ந்துள்ள இடைநிலைப் பகுதி பல்வகைப் பயன்பாட்டுப் பகுதி. இங்கு கிராமங்கள், வேளாண் நிலங்கள், சமூகக் காடுகள், அரசு-சமூக இணைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.