ஈரோடு மாவட்டத்திலுள்ள பல்லுயிர் பாரம்பரியத் தலமான எலத்தூர் குளம், சிலர் சட்டவிரோதமாக மீன் பிடித்தல், பறவைகளை வேட்டையாடுதலில் ஈடுபடுவதன் காரணமாகச் சுற்றுசூழல் சீரழிவுக்கு ஆளாகியுள்ளது. அந்த பாதிப்பில் இருந்து இப்பகுதியை மீட்க உடனடி நடவடிக்கைகள் தேவை என்று அவ்வட்டாரத்தில் வசிப்பவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள எலத்தூர் குளம், கடந்த 2025 செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசால் மாநிலத்தின் மூன்றாவது பல்லுயிர் பாரம்பரியத்தலமாக அறிவிக்கப்பட்டது. இது ஈரோடு மாவட்டத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத்தலமான இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பறவை வகைகள், 695க்கும் மேற்பட்ட உயிரினங்கள் வாழ்வதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வலசை காலங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் தங்குவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், எலத்தூர் குளம் பகுதியில் பறவைகள் வேட்டை, மீன்பிடித் தடையை மீறிச் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்திருந்தது சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுக்களால் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு வனத்துறை தற்காலிக வேட்டை தடுப்புப் பாதுகாவலரை அங்கு நியமித்தது. மேலும், எலத்தூர் பல்லுயிர் மேலாண்மைக் குழு மற்றும் எலத்தூர் பேரூராட்சி இணைந்து தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாழ்விடத்தைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி, வனத்துறையால் தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்ட வேட்டை தடுப்புப் பாதுகாவலரின் பணி நிறுத்தப்பட்டது. அந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு முடிவடைந்ததே அதற்குக் காரணமென்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் பின்னர், மீண்டும் வேட்டையும் மீன்பிடியும் அதிகமாகத் தொடங்கியுள்ளது.
கோடை காலம் தொடங்கியுள்ளதால், குளத்தின் நீர் குறைந்துள்ளது. இதனால் பறவைகள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தங்குகின்றன. குளத்தில் பரவலாகத் தரையில் கூடமைக்கும் பறவைகளும் மரத்தில் கூடமைக்கும் பறவைகளும் இனப்பெருக்கம் செய்து வருகின்றன.
கடந்த நான்கு நாட்களாக, அனுமதியின்றிச் சில நபர்கள் குளத்திற்குள் இறங்கி வலை விரித்து மீன் பிடிப்பதும் பறவைகளை வேட்டையாடுவதும் அதிகரித்துள்ளது. சிலர் குழுவாக இரவில் மது அருந்திவிட்டு மீன்கள், பறவைகளை வேட்டையாடி அங்கேயே சமைத்துச் சாப்பிடுகின்றனர்.குடிநீர் தொட்டியில் மீன்களை சுத்தப்படுத்துவதால், மக்கள் பயன்படுத்தும் குடிநீர் வீணடிக்கப்படுகிறது.
மீன்பிடித் தடையை மீறி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பவர்களால் நிறைய மீன்கள் சேற்றில் சிக்கி இறக்கின்றன. வலையில் பிடிபட்ட சீமை மீசை கெழுத்தி (African catfish) போன்ற உணவுக்குப் பயன்படாத மீன்களைக் கொன்று குளத்தில் வீசிச் செல்வதால் துர்நாற்றம், நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மீன்பிடித்தலுக்கு இடையூறாக இருக்கும் நீர்வாழ் பாம்புகள், பறவைகளைக் கொல்வதும் நிகழ்கின்றன.
இதன் காரணமாக, பல ஆண்டுகளாகக் குளத்தைப் பாதுகாத்துவந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உள்ளூர் மக்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. ஆதலால், அரசு உடனடியாகத் தலையிட்டுச் சட்டம் ஒழுங்கு, சுற்றுச்சூழல் சீர்கேடுகளைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“எலத்தூர், நாகமலை குன்று பல்லுயிர் பாரம்பரியத்தலங்களில் நிரந்தர வேட்டை தடுப்புப் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். தற்போது குளத்தில் இறந்துகிடக்கும் மீன்கள் எலத்தூர் பேரூராட்சியால் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இறந்த மீன்களைத் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் உரமாக்கிப் பயன்படுத்தும் வாய்ப்பையும் பரிசீலிக்கலாம்.
இங்கு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பறவைகள் வேட்டை, மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஊழியர்கள் மூலம் அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் குளத்தில் மது அருந்திவிட்டுத் தங்குவதைத் தவிர்க்கக் காவல்துறை கடுமையான கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பல்லுயிர் பாரம்பரியத்தலமாக அறிவிப்பு வெளியாகி ஆறு மாதங்கள் கடந்தும், இங்கு அது தொடர்பான பெயர்ப்பலகை வைக்கப்படவில்லை எனவும், இது தொடர்பாக அரசு விரைவில் நடவடிக்கைகளைக் கையாள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.