மருத்துவம் சார்ந்து அதிவேகமாக வளர்ந்துவரும் துறைகளில் ஒன்று உயிரி புள்ளியியல் எனப்படும் ‘Biostatistics’. ஒரு மருந்து, நோயாளரின் உடலில் வேலை செய்கிறதா, புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் ஒரு தடுப்பூசி எவ்வளவு பேரைக் காப்பாற்றும், புற்றுநோய்க்கான புதிய சிகிச்சை உண்மையிலேயே பயனுள்ளதா என மருத்துவத் துறையில் உருவாகும் புதிய கேள்விகளுக்கு மருத்துவர்களோடு சேர்ந்து பதில் கண்டறிபவர்கள்தான் உயிரி புள்ளியியல் நிபுணர்கள்.
முதல் முறையாக...
கரோனா தடுப்பூசியின் செயல்திறனை உலகுக்கு அறிவிக்கும் முன், லட்சக்கணக்கான தரவுகளை ஆராய்ந்து இறுதிசெய்தவர்கள் இந்த உயிரி புள்ளியியல் நிபுணர்கள்தான். இன்றைய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப மருத்துவ ஆராய்ச்சிகளிலும் மக்கள் நலத் திட்டங் களிலும் இந்தத் துறை நிபுணர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.
ஆச்சரியமான உண்மை என்ன வெனில், இந்தத் துறையில் இந்தியாவி லேயே முதன்முதலில் படிப்பை அறிமுகப்படுத்தியது நம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கல்வி நிறுவனம்தான். அந்தப் பெருமையைப் பெற்ற நிறுவனம், வேலூர் சி.எம்.சி. கல்லூரி. உயிரி புள்ளியியல் என்றால் என்ன?
கணிதம், உயிரியல், மருத்துவம் ஆகிய மூன்றும் சேர்ந்த துறைதான் உயிரி புள்ளியியல். மருத்துவம், பொதுச் சுகாதாரம், சுற்றுச்சூழல் நலம், மரபியல் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் புள்ளியியல் முறைகளை உருவாக்கு வதும் பயன்படுத்துவதும் இந்தத்துறையின் உள்ளடக்கம்.
ஆய்வுகளை வடிவமைப்பது, தரவுகளைப் பகுப் பாய்வு செய்வது, கண்டுபிடிப்புகளை வெளியிடுவது, புதிய சவால்களை எதிர்கொள்ள புதிய முறைகளை உருவாக்குவது ஆகியவை உயிரி புள்ளி யியல் வல்லுநர்களின் பணியாகும்.
1918இல் அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் புளூம்பர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனம் இத்துறையை முதன்முதலில் நிறுவி யது. இன்றும் உலக அளவில் சிறந்த உயிரி புள்ளியியல் பல்கலைக்கழகமாகத் தரவரிசையில் இது முதல் இடம் வகிக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் முன்னணி அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உயிரி புள்ளியியல் படிப்பு கள் உருவாகின.
தமிழ்நாட்டில் படிக்க...
1964இல் இந்தப் படிப்பு இந்தியாவுக்கு வந்தது. வேலூர் சி.எம்.சி. கல்லூரி, பெங்களூரு நிம்ஹான்ஸ், எய்ம்ஸ் உள்ளிட்ட நிறுவனங் களில் இதற்கெனத் தனித்துறை உள்ளது. சி.எம்.சி.யில் இத்துறையில் முதுகலைப் படிப்பும் முனைவர் பட்டப் படிப்பும் வழங்கப் படுகிறது. உலகச் சுகாதார நிறுவனம் இந்தப் படிப்பை அங்கீகரித்துள்ளது.
உயிரி புள்ளியியல் துறையில் பட்டப்படிப்பைப் படிக்க வாய்ப்பில்லாத மாணவர்களுக்குக் குறுகிய காலச் சான்றிதழ் படிப்புகளை வேலூர் சி.எம்.சி. கல்லூரி வழங்குகிறது. மருத்துவர்கள் (எம்.பி.பி.எஸ்./எம்.டி), செவிலியர் (பி.எஸ்சி., நர்சிங்), மருந்தாளுநர்கள் (பி.ஃபார்ம்.) இந்தக் குறுகிய காலப் பயிற்சி மூலம் இந்தத் துறையில் நுழையலாம்.
கணிதம், புள்ளியியல், உயிரியல், பொதுச் சுகாதாரம் படித்தவர்கள், ஆய்வகப் பணியாளர்கள் நேரடியாக எம்.எஸ்சி., எம்.பி.எச். (மாஸ்டர் இன் பப்ளிக் ஹெல்த்) படிப்பில் சேரலாம். வேலூர் சி.எம்.சி., ஐஐடி சென்னை, எய்ம்ஸ், நிம்ஹான்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் இந்தப் பாடத்திட்டங்களை வழங்குகின்றன. சி.எம்.சி. கல்லூரி சர்வதேசத் தரத்தில் இந்தப் படிப்பை வழங்குகிறது.
பயன்பாடு
கரோனா தடுப்பூசி முதல் புற்றுநோய் மருந்துகள்வரை, ஒவ்வொரு மருந்தும் சந்தைக்கு வருவதற்கு முன் மருந்து சோதனைக் கட்டத்தின்போது இந்தப் பகுப்பாய்வு கட்டாயம் தேவை. டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் எங்குப் பரவுகின்றன, யாரையெல்லாம் அதிகம் பாதிக்கின்றன என்பதைக் கண்டறிந்து அரசுக்கு வழிகாட்டுவது இந்தத் துறைதான்.
மரபணு ஆராய்ச்சியில் (Genomics) ஒவ்வொருவரின் மரபணுவுக்கு ஏற்பமருந்தளவை நிர்ணயிப்பது (Precision Medicine) இத்துறையின் நவீன முன்னேற்றம். சுற்றுச்சூழல் ஆராய்ச்சியில் காற்று மாசு, நீர் மாசு உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை அளவிட்டுக் கொள்கை வகுக்க உதவுகிறது. செயற்கை நுண் ணறிவு மருத்துவ அமைப்புகளுக்குத் தரவுகளை வழங்கி, மாதிரிகளைச் சரிபார்ப்பதும் இந்தத் துறையின் பணியே.
வாய்ப்புகள் என்னென்ன?
இந்தியாவில் மருத்துவச் சோதனை துறையில் அடுத்த ஐந்து ஆண்டு களில் 20 லட்சத்துக்கும் அதிகமான உயிரி புள்ளியியல் நிபுணர்கள் தேவைப்படுவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
உலகச் சுகாதார நிறுவனம், ஐ.நா., முன்னணி மருந்து நிறுவனங்கள், அரசாங்க சுகாதாரத் துறைகள், சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் அதிக ஊதியத்துடன் கூடிய முதன்மைப் பதவிகள் இந்தப்படிப்பைப் படித்தவர்களுக் குக் காத்திருக் கின்றன.
எந்தவொரு புதிய ஏ.ஐ. கண்டுபிடிப்பும் புள்ளியியல் சரிபார்ப்பு இல்லாமல் மருத்துவப் பயன்பாட்டுக்கு வர முடியாது. ஏ.ஐ. இயந்திரக் கற்றல் மருத்துவத்துடன் இணையும் போது, கோடிக்கணக்கான உயிரியல் தரவுகளைப் புரிந்துகொள்ள உயிரி புள்ளியியல் நிபுணர்கள் தேவைப் படுவார்கள்.
எண்களையும் கணிதத்தையும் நேசிக்கும், அதேநேரம் மருத்துவத் துறையில் சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கு இத்துறை ஒரு மிகச்சிறந்த நுழைவுவாயில். அந்த நுழைவு வாயிலின் சாவி தமிழ்நாட்டி லேயே இருக்கிறது, வேலூர் சி.எம்.சி.யில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org