கல்வி - வேலை வழிகாட்டி

வேலை வேறு ‘பர்சனல்’ வேறு! | தீயா வேலை செய்யணும் ப்ரோ - 6

‘கெம்பா’ கார்த்திகேயன்

ராகேஷைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் யாராவது ஒரு ஜென் ஸீ யுவன் அல்லது யுவதியுடன் மதிய உணவு அருந்துவதை வழக்கமாகக் கொள்ளத் தொடங்கினார் ராஜன். முதலில் தயக்கமும் சந்தேகமும் பெருவாரியாகத் தெரிந்தாலும், திட்டம் மெல்லக் கைகொடுத்தது.

அலுவலக சமாச்சாரங்களைப் பெரிதும் தவிர்த்து பொது விஷயங்களைப் பேசத் தொடங்கினாலும், எப்படியோ சுழன்று சுழன்று ஆபீஸ் கதைக்குத்தான் உரையாடல் வந்துசேரும்.

இதைக் கேள்விப்பட்டபோது டாக்டர் கே.கே. சொன்ன ஒரே யோசனை: “போதனை செய்யாமல் பேசுங்கள், கூடிய மட்டும். கேட்டால் மட்டும் அறிவுரை கொடுங்கள். அதுவும் ரத்தினச் சுருக்கமாக”.

கடினமாகத்தான் இருந்தது. சரியான நேரத்துக்கு அவர்கள் வந்து காத்திருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பொய்யாகும் போது, ஏதாவது சொல்லத் தோன்றும். அடக்கிக் கொள்வார்.

சாப்பிடும்போது சதா திறன்பேசியை அவர்கள் நோண்டிக் கொண்டிருந்தால் கோபம் வரும். ஆனால், தானும் திறன்பேசியைச் சதா பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம் என்கிற எண்ணம் அதைச் சமன்படுத்தும்.

தனக்குக் கிடைத்த நேரத்தைப் பயன் படுத்தி தன் அனுபவத்தை கசக்கிப் பிழியும் வண்ணம் கேள்விகள் வரும் என்று எதிர் பார்த்தால், எதிர் மேஜையிலோ சுவாரசியமே இருக்காது. பலர் கூப்பிட்டதற்காக மட்டுமே வருகிறார்கள், அவர்களுக்கு இதில் பெரிய ஈடுபாடெல்லாம் இல்லை என்று தோன்றும்.

வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஒரு முறை அந்த கம்பெனி எம்.டி., ராஜன் குழுவினரை அழைத்துத் தேநீர் விருந்து அளித்தார். 15 பேர் உடன் இருந்தாலும் தானும் அந்த வைபவத்தில் கலந்துகொண்டோம் என்கிற பெருமிதம் இன்றுவரை மனதில் உள்ளது.

“குட் ஜாப்” என்று ராஜன் முதுகில் தட்டியது அன்று பேசுபொருள் ஆனது. ஒரு பெரிய சாதனை செய்ததுபோல உணர்ந்தார். இன்று டவுன் ஹால் மீட்டிங்கில் எல்லா கம்பெனி பெரிசுகளும் பி.பி.டி. போட்டு காண்பிப்பதால் யாருக்கும் யாரைப் பார்ப்பதிலும் பெரிய பரவசம் எல்லாம் இல்லை.

இதில் தான் லஞ்சுக்கு அழைப்பதில் அவர்களுக்கு என்ன குதூகலம்? தன் சுயநலத்துக்கு இதைச் செய்வதாக நினைத்துக்கொண்டு நிம்மதி அடைந்தார்.

பளீரென மின்னல் வெட்டுபோல சில கேள்விகள் அவரின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டும். பழைய பாணியில் சமாளிக்கத் தோன்றும்.

ஆனால், தெரியவில்லை என்று கையை விரித்தால் புதிய கோணங்களைப் புரிந்துகொள்ளலாம். தொழில்நுட்பம் மட்டுமல்ல உலக அரசியல் வரை இவர்களில் சிலர் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

தட்பவெப்பநிலை மாறுதல்கள் அடுத்த தசாப்தத்தில் நம்மை எங்கு நிறுத்தும் என்று விளக்கிய பெண்ணுக்கு வயது 22 தான் இருக்கும்.

இரவு ஏழுக்கு மேல் அலுவலக அழைப்புகளை எடுப்பதில்லை என்று சொன்ன இளைஞன் இன்னமும் பணி நிரந்தரம் செய்யப்படாதவன்.

ஒரு பெரிய நிர்வாகப் பள்ளியிலிருந்து வந்த பகுதி நேர மாணவி, எந்த சிஸ்டத்தையும் ஹாக்கிங் செய்ய முடியும் என்று வாதிட்டாள்.

“பிடித்த உணவு வகைகள் எவை?” என்று கேட்ட போது அந்த ஈரோடு பையன் சொன்ன பட்டியலில் பாதிக்கு மேல் பெயர் தெரியாத அயிட்டங்களாக இருந்தன. ராஜன் தன்னை டைனோசர்போல உணர்ந்த தருணம் அது.

இவ்வளவு இருந்தும் இவர்களில் பலர்தன் வேலைகளில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்பது தெரி கிறது. “நீ எதிர்பார்ப்பதைச் செய்கிறேன். எனக்கு உண்டானதைக் கொடு.

வேறு எந்த பந்த பாசமெல்லாம் தேவையில்லை என்று அவர்கள் சொல்வதுபோலத் தோன்றும். ராஜன் பார்த்து வளர்ந்ததெல்லாம், “நான் ரயில்வே. நான் டைட்டன் தலை முறை. இப்படிப் பெயரோடு கம்பெனி பெயரும் சேர்ந்தே இருக்கும். இன்று திருமண அழைப்பிதழ்களில்கூட நிறுவனங் களின் பெயர்கள் மெல்ல மறையத் தொடங்கி விட்டன.

“அது என் பர்சனல் ஸ்பேஸ் சார். என் படிப்போ வேலையோ என் முழு அடையாளம் இல்லை. இதெல்லாம் மாறக்கூடியவை” என்று கண்ணசைக்காமல் சொன்னதைக் கேட்ட ராஜனுக்கு, எதிர் இருக்கை உளவியல் புரியத் தொடங்கியது.

இப்படி எங்கேஜ்மெண்ட் இல்லாத ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு கம்பெனியை நடத்துவது எப்படி? சார்லஸை அழைத்து இது பற்றி விவாதிக்க வேண்டும். சார்லஸ் மனித வள முதன்மை நிலை அலுவலர்.

6,000 பேரைக் கட்டி மேய்ப்பவர் என்றும் சொல்லலாம். இண்டஸ்டரியில் மற்றவர்கள் எப்படிக் கையாள்கி றார்கள் என்று அவரிடம் கேட்க வேண்டும்.

மாலையில் அழைத்து போனிலேயே விஷயத்தை உடைத்தார்? “இப்படி கம்பெனி மேல் விசுவாசம் இல்லாத ஒரு தலைமுறை எப்படி உருவானது?”, சார்லஸ் சிரித்தவாறு கூறினார் “நாமதான் அவங்களை இப்படி ஆக்கி வச்சிருக்கோம்!” “நாளை உங்ககூட லஞ்ச் சாப்பிட நான் வர்றேன். பேசுவோம்!” என்றார் ராஜன்.

(பேசலாம்)

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT