ஜென் ஸீ பற்றித் தான் புரிந்து கொள்ளவில்லையா அல்லது தன்னை ஜென் ஸீ புரிந்துகொள்ளவில்லையா என்று ராஜன் யோசித்தார்.
விஷால் இன்று வரவில்லை, கதிர் வேலையை விட்டுப் போவது உறுதி. அடுத்து செய்யவேண்டிய பணிகளை மனம் மின்னல் வேகத்தில் பட்டியல் போட்டது.
எதிரில் கதிர் காத்திருப்பது தெரிந்தது. “40 வயசில் ரிட்டையர் ஆகணுங்கறது ஒரு பேன்ஸி ஐடியா கதிர். நம்ம ஆயுள் எல்லாம் இப்ப எண்பது, தொண்ணூறுன்னு நீண்டுக்கிட்டு இருக்கு.
பாதி வாழ்க்கையில ரிட்டையர் ஆயிட்டு மீதி வாழ்க்கைய என்ன பண்ணுவீங்க?” “அதுக்கப்புறம்தான் முழுமையா வாழணும் சார். எந்தச் சமரசமும் இல்லாம ஒரு தரமான வாழ்க்கை. அதுக்குள்ள ஆயுசுக்கும் வேண்டியதைச் சேர்க்கணும். அது ஒரு கம்பெனியில் உக்காந்து வேலை பார்த்தா முடியாது...”
“இது பெரிய ரிஸ்க் இல்லையா?” “ரிஸ்க் எடுக்காம இருக்கறதுதான், பெரிய ரிஸ்க்கா தோணுது.” “நூத்துல அஞ்சு பேர்தான் தொழில் தொடங்கி ஜெயிக்கறாங்க.” “அந்த அஞ்சுல ஒண்ணா இருக்கத்தான் முயற்சி பண்றோம். ஒரே ஒரு வாழ்க்கை சார். அதை நினைச்ச மாதிரி வாழ நினைக்கிறோம்.”
நினைத்ததுபோல் தன் வாழ்க்கையை வாழ்கிறோமா என்று ராஜன் ஒரு கணம் யோசித் தார். அந்த எண்ணம் தந்த அயர்ச்சியைத் தவிர்க்க, வேறு கோணத்திலிருந்து தொடங்கினார். “ஆபீஸ்ல வேற ஏதாவது இஷ்யூஸ் இருக்கா? திடீர்னு பேப்பர் போட்டதால கேக்கறேன்...
எக்ஸிட் இன்டர்வியூ எல்லாம் ஹெச்ஆர்ல நடக்கும். என்கிட்ட சொல்லு, வேலையில் என்ன பிரச்சினை?” “ஏன் இந்த வேலை செய்யறோம்னு யோசனை வந்தா, சரியான பதில் இல்லை.
சம்பளம் ரொம்ப முக்கியம். ஆனா, அதைத் தாண்டி ஒரு பர்பஸ், நோக்கம் இந்த வேலைல இல்லை. நான் வாழ நினைக்கிற வாழ்க்கைக்கு, இது எந்த அளவு உதவும்னு யோசிச்சதால எடுத்த முடிவு இது.”
ராஜன் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார். சின்ன வயதிலிருந்து தனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது ஒன்றுதான். படிப்புக்கும் வேலைக்கும் வெளியே பெரிய போட்டி இருக்கிறது. அதனால் கடினமாக உழைத்து, மற்றவர்களை முந்த வேண்டும்.
கிடைக்கிற பெரிய வாய்ப்புகளைக் கொண்டு வாழ்க்கையைப் பொருளாதாரரீதியில் திடமாக்க வேண்டும். அதைத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டும். இதைத் தாண்டி பெரிதாக யோசித்ததில்லை. விரக்தி அடையும்போது வாழ்க்கையைப் பற்றி யோசித்தது உண்டு.
ஆனால், வாழ்க்கையின் நோக்கத்தோடு வேலையை எல்லாம் இணைத்துச் சிந்தித்ததே இல்லை. இந்தத் தலைமுறை மட்டும் முளைச்சு மூணு இலை விடுவதற்குள் வேலையில் வேதாந்தம் பேசுகிறார்கள்.
“ஹ்ம்ம்.” அடுத்து என்ன பேச என்று எண்ணுவதற்குள் திறன்பேசி அழைத்தது. விஷால்தான். “லீவ் அப்ரூவல் இல்லாம லீவ் எடுக்கக் கூடாதுன்னு தெரியாதா விஷால்?” - நேரடியாகவே வெடித்தார் ராஜன்.
“மெசேஜ் பண்ணிட்டேன். ஒரு மெடிக்கல் எமர்ஜென்சி.” “இ மெயில் பண்ணணும். பேசணும். கடைசி நிமிஷத்துல சொல்லாம லீவ் போடக் கூடாது.
ஓ.கே? “நீங்கதான் எதுவா இருந்தாலும் எனக்கு ஒரு சின்ன மெசேஜ் பண்ணுங்க, போதும். நான் பாத்துக்குறேனு சொன்னீங்க...”
“எப்ப சொன்னேன்?” “இண்டக்ஷன் அப்ப?” “ஆபீஸ்ல யாருக்கு என்ன பிரச்சினைனாலும் எங்கிட்ட நேரடியா சொல்லலாம்கற அர்த்தத்துல சொன்னது அது. அதுக்காக லீவ் அப்ளிகேஷன் போட வேண்டாம்னா சொன்னேன்?” போனை வைத்தவுடன் கதிர் பேச ஆரம்பித்தான்.
“சார், இதுவும் நம்ம கம்பெனியில் ஒரு பிரச்சினைதான். இந்த நிர்வாகம் வளர்க்க நினைக்கற கலாச்சாரம் ஒண்ணு. நடைமுறையில் இருக்கறது இன்னொண்ணு. ஓபன் டோர் பாலிசின்னு பேசுவீங்க. ஆனா, அது நிஜத்துல இல்லை. எங்களுக்கு இந்தக் குழப்பமான கம்யூனிகேஷன் ஒரு பிரச்சினைதான் சார்.”
கதிர் தொடர்ந்து நிறைய பேசினான். ஒன்று புரிந்தது. இந்தத் தலைமுறைக்கு எல்லாவற்றிலும் தெளிவு அவசியம். தெளிவற்ற சூழலைத் தாங்கும் மனோதிடம் அவர்களிடம் இல்லை. “மாறி வரும் சூழ்நிலையில எல்லாவற்றிலும் தெளிவைக் கொடுக்க முடியாது கதிர்!”
“உண்மைதான் சார். அதுக்குதான் தொடர்ந்து பேசணும். விளக்கணும். ஆனா, இங்க யாருக்கு நேரம் இருக்கு? ஒருத்தன் வேலையை விடும்போதுதானே நேரம் கொடுத்துப் பேசறோம்? வேலையில் இருக்கும்போது பேசறோமா?” ராஜன் அமைதியாக ஒப்புக்கொண்டார், “கண்டிப்பா நிறைய பேசணும்!”
(பேசலாம்)
- தொடர்புக்கு: director@gemba.co.in