கடந்த வாரம் மக்கள்தொகை அறிவியல் ஏன் முக்கியமான துறை என்பதைப் பற்றிப் பார்த்தோம். இந்த வாரம், அந்தத் துறை சார்ந்து எங்கு படிக்கலாம், உலக அளவில் உயர்கல்விக்கான வாய்ப்பு கள் என்னென்ன, படிப்பை முடித்த பிறகு என்னென்ன வேலைவாய்ப்புகள் காத்திருக் கின்றன என்பதைப் பார்ப்போம்.
மும்பையில் கல்வி வாய்ப்பு இந்தியாவில் மக்கள்தொகை அறிவியல் கல்வி, ஆராய்ச்சியில் முன்னணி நிறுவன மாக விளங்குவது மும்பையில் உள்ள சர்வதேச மக்கள் தொகை அறிவியல் நிறுவனம் (Inter national Institute for Population Sciences – IIPS).
1956ஆம் ஆண்டு இந்திய அரசு, சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை, ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது மத்தியச் சுகாதாரம் - குடும்ப நலத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல் படும் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உள்ளது.
தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு (NFHS), இந்தியாவில் முதுமை குறித்த நீண்டகால ஆய்வு (Longitudinal Ageing Study in India - LASI) போன்ற நாட்டின் முக்கியமான கணக்கெடுப்புகளை நடத்தும் நிறுவனமும் இதுவே.
1872 முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் மின்வடிவில் பாதுகாக்கப் பட்டுள்ள 88,000க்கும் மேற்பட்ட நூல்கள் கொண்ட சிறப்பு நூலகம், தேசிய அளவிலான தரவுத் தொகுப்புகள், மாணவர் களுக்கான கணினி ஆய்வகங்கள், விடுதி வசதி, வேலைவாய்ப்பு அமர்வுப் பிரிவு உள்ளிட்ட வசதிகள் இங்கே உள்ளன.
SPSS, STATA, SAS, ArcGIS போன்ற உலக அளவில் பயன்படுத்தப்படும் புள்ளியியல், தரவுப் பகுப்பாய்வு மென்பொருள்களைப் பயன்படுத்தி, மாணவர்கள் கணக்கெடுப்புத் தரவுகளை ஆய்வு செய்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஐ.ஐ.பி.எஸ்ஸுக்கு மேலும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆசியா–பசிபிக் (ESCAP) பிராந்தியத்தின் மக்கள் தொகைப் பயிற்சி, ஆராய்ச்சிக்கான மையமாக ஐக்கிய நாடுகள் அவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்நிறுவனம், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாண வர்களுக்கும் பயிற்சி அளிக்கிறது. இதனால், இங்கே படிக்கும் மாணவர் களுக்கு சர்வதேச ஆராய்ச்சி உலகத் துடன் தொடர்பு ஏற்படுகிறது.
உலக அளவில் கற்க...
மக்கள்தொகை அறிவியலில் உலக அளவில் முன்னணியில் உள்ள நிறு வனங்களிலும் இந்திய மாணவர்கள் தொடர்ந்து இடம்பிடித்து வருகின்றனர். அமெரிக்காவின் பிரின்ஸ் டன் பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம்–பெர்க்லி, இங்கிலாந்தின் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் (LSE), லண்டன் சுகாதாரம் - வெப்பமண்டல மருத்துவப் பள்ளி (LSHTM), ஆஸ்திரேலிய தேசியப்பல்கலைக்கழகம் (ANU), ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் மக்கள்தொகை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இத் துறையில் உலகப் புகழ்பெற்றவை. குறிப்பாக, IIPSஇல் முதுகலைப் படிப்பை முடித்த பல மாணவர்கள் இந்நிறுவனங் களில் மேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புக்குத் தேர்வாகிவருகின்றனர்.
வேலைவாய்ப்புகள்
மக்கள்தொகை செயல்பாடுகளுக் கான ஐ.நா. நிதியம் (UNFPA), உலகச் சுகாதார நிறுவனம் (WHO), ஐ.நா. குழந்தைகள் நிதியம் (UNICEF), உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளில் மக்கள்தொகை நிபுணர், கொள்கை ஆய்வாளர், கண்காணிப்பு - மதிப்பீட்டு (Monitoring & Evaluation) அலுவலர், ஆராய்ச்சி யாளர் போன்ற பணிகளில் சேரலாம்.
இந்திய மக்கள்தொகைக் கணக் கெடுப்பு இயக்ககம் (Registrar General & Census of India), நிதி ஆயோக், மத்திய-மாநில அரசுகளின் சுகாதாரம், குடும்ப நலம், திட்டமிடல், புள்ளியியல் துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளன.
மேலும் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், சந்தை ஆய்வு, தரவுப் பகுப்பாய்வு நிறு வனங்கள், சுகாதாரத் தொழில்நுட்ப நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட பல துறைகளிலும் பணி யாற்றலாம்.
கணக்கெடுப்பை வடிவமைத்தல், புள்ளியியல், தரவுப் பகுப்பாய்வு மென்பொருள்களைப் பயன்படுத்துதல், தரவுகளை ஆய்வுசெய்து கொள்கை முடிவுகளுக்கு ஏற்ற பரிந்துரைகளை வழங்குதல் போன்ற திறன்களை வளர்த்துக்கொண் டால் அரசு, தனியார், சர்வ தேச நிறுவனங்கள் எனப் பல்வேறு துறைகளில் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெற முடியும்.
மக்கள்தொகை அறிவியல் என்பது வெறும் எண்களையும் புள்ளிவிவரங் களையும் பற்றிய பாடம் அல்ல. நாட்டின் எதிர்காலக் கொள்கைகள், மக்கள் நலம், வளர்ச்சித் திட்டங்களை வடிவமைக்கும் அறிவியல். இந்தியாவில் தொடங்கும் இந்தக் கல்விப் பயணம், உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள்வரை உங்களை அழைத்துச் செல்லக்கூடிய திறன் கொண்டது.
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org