கல்வி - வேலை வழிகாட்டி

வேலைவாய்ப்பை அள்ளித் தரும் சுற்றுலாப் படிப்புகள்! | வெற்றி உங்கள் கையில்

இரா.நடராஜன்

நான் இப்போ பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு வேதியியல் படிக்கிறேன். எனக்கு மேற்கொண்டு எம்.எஸ்சி. வேதியியல் படிக்க ஆசை. அதில் பல பிரிவுகள் இருப்பதாகச் சொல்கின்றனர். அவற்றைப் பற்றித் தெரிவிக்க முடியுமா? - சிவசங்கரன், புத்தானாம்பட்டி.

முதுகலைப் படிப்பான எம்.எஸ்சி. வேதியியலில் இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. அவற்றில் சில. எம்.எஸ்சி. கெமிஸ்ட்ரி, அனலிடிகல் கெமிஸ்ட்ரி, பிசிக்கல் கெமிஸ்ட்ரி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, பயோ கெமிஸ்ட்ரி, டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி, பார்மசூட்டிக்கல் கெமிஸ்ட்ரி, நியூக்ளியர் கெமிஸ்ட்ரி, பெட்ரோ கெமிக்கல் கெமிஸ்ட்ரி, பாலிமர் கெமிஸ்ட்ரி, இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி, மெடிசினல் கெமிஸ்ட்ரி, மெட்டீரியல் சயின்ஸ் கெமிஸ்ட்ரி, அப்ளைடு கெமிஸ்ட்ரி, டாக்சிகாலஜி, என்விரான்மென்டல் சயின்ஸ், ஃபுட் டெக்னாலஜி, சுகர் டெக்னாலஜி, ஆல்கஹால் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் முதுகலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

          

அது மட்டுமன்றி ஓராண்டு முதுகலை டிப்ளமோ படிப்பாகவும் பல படிப்புகள் வழங்கப்படுகின்றன. அதில் ஒன்றுதான் பி.ஜி. டிப்ளமோ இன் குவாலிட்டி கண்ட்ரோல். இதைப் போல பி.ஜி. டிப்ளமோ இன் சுகர் டெக்னாலஜி படித்தாலும் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் எம்.எஸ்சி. முடித்துவிட்டு ஆண்டுதோறும் அணுசக்தித் துறை நடத்தும் ஆராய்ச்சியாளர்களுக்கான தேர்வை எழுதிப் பணியில் சேரலாம். நீங்கள் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர அணுசக்தித் துறை வழிவகை செய்கிறது.

நான் சொந்தமாக டாக்சி, ஒரு வேன் வைத்திருக்கிறேன். எங்கள் பகுதிக்கு நிறையச் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்களுக்கு வண்டிகளை ஏற்பாடு செய்து முக்கிய இடங்களைக் காண்பிக்கிறேன். என் மகனை இத்துறையில் தொழில் முறையாக ஈடுபடுத்த உள்ளேன். அதற்கு என்ன படிக்க வேண்டும்? அவன் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்துவருகிறான். - சட்ட நாதன், செம்பனார் கோவில்.

தங்களின் முயற்சி சரியான பாதையில் செல்கிறது. இன்று இந்திய அளவில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மேலும் சுற்றுலாவுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் நன்றாகவே உள்ளன. சுற்றுலாத் துறை இன்று அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. அது மட்டுமன்றி, அதன் பல பிரிவுகள் மேலும் சிறப்புப் பிரிவுகளாக விரிவடைந்துகொண்டே செல்கின்றன.

பாரம்பரியச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா, சூழலியல் சுற்றுலா, சாகசச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா, விளையாட்டுச் சுற்றுலா, இயற்கைச் சுற்றுலா என வளர்ந்துகொண்டே செல்கிறது. இதில் முதன்மையாக இருப்பது மருத்துவச் சுற்றுலா.

மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக (அறுவைசிகிச்சை உள்பட) வெளிநாடுகளில் இருந்து அதிகமானோர் கடந்த சில ஆண்டுகளாக, தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். எனவே, உங்கள் மகனை பி.ஏ. டூரிசம் ஸ்டடீஸ், பி.பி.ஏ. டிராவல் அண்ட் டூரிசம் மேனேஜ்மென்ட், பேச்சிலர் ஆஃப் டிராவல் அண்ட் டூரிசம், பி.ஏ. ஹிஸ்டரி அண்ட் டூரிசம் போன்றவற்றில் ஏதாவது ஒரு படிப்பைப் படிக்க வைக்கலாம்.

இப்படிப்புகளை நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. இதற்கான மத்திய அரசுக் கல்வி நிறுவனம் ஐந்து இடங்களில் உள்ளது. அவை ஐ.ஐ.டி.டி.எம். குவாலியர், புவனேஸ்வர், நொய்டா, நெல்லூர், கோவா ஆகிய இடங்களில் உள்ளன. இங்குப் பட்டப்படிப்பு முதல் முதுகலைப் படிப்புகள்வரை வழங்கப்படுகின்றன. அது மட்டுமன்றி ஏராளமான தனியார் கல்வி நிறுவனங்களும் சுற்றுலாத் துறை தொடர்பான படிப்புகளை வழங்குகின்றன.

SCROLL FOR NEXT