கல்வி - வேலை வழிகாட்டி

10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு... | பொதுத் தேர்வுக்குத் தயாரா?

ராகா

20 – 20 – 20 முறை

பொதுத் தேர்வுக்காக ஒரு பாடத்தைப் படிக்கும்போது, 20 நிமிடங்களுக்கு முழுக் கவனத்தோடு படியுங்கள். கவனச் சிதறலோடு நாள் முழுவதும் படிப்பதற்கும் 20 நிமிடங்களாகப் பிரித்து முழுக் கவனத்தோடு படிப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

அப்படி ஒரு பாடத்தை எடுத்து 20 நிமிடங் களுக்குப் படித்துவிட்டு, அடுத்து 20 நொடிகள் இடைவேளை எடுத்துக் கொள்ளலாம். அந்த இடைவேளைக்குப் பிறகு 20 படிகள் நடந்து விட்டுவந்து மீண்டும் படிக்க அமரலாம். 20 படிகள் நடக்கும்போது படித்ததை நினைவுகூரலாம். ஒரே இடத்தில் உட்கார்ந்து படிக்கும்போது சோர்வாக உணரலாம். இதைத் தவிர்க்க 20–20–20 படிக்கும் முறையை முயற்சி செய்துபாருங்கள்.

          

பதில் மறந்துவிட்டதா, கவலை வேண்டாம்!

தேர்வு எழுதும்போது ஏதாவது ஒரு கேள்விக்கான பதில் சட்டென நினைவுக்கு வராமல் போகலாம். அப்போது அச்சம் கொள்ளத் தேவையில்லை. பதில் தெரியாமல் இருக்கும் அதே கேள்வியில் நேரத்தை வீணடிக்காமல், 3 நிமிடங்களுக்கு வேறொரு கேள்விக்கான பதிலை எழுதத் தொடங்கலாம்.

வேறொரு கேள்விக்கான பதிலை எழுதும்போதுகூட முன்பு மறந்துபோன பதில் உங்களுக்கு மீண்டும் நினைவுக்கு வரலாம். அதனால் பதற்றம் அடையாமல் தேர்வை எழுதுங்கள்.

‘The Feynman Technique’

தேர்வுக்குத் தயாராகும்போது உங்களுக்குப் பிடித்த பாடத்தை எப்படியும் நீங்கள் நன்றாகப் படித்து விடுவீர்கள். ஆனால், கடினம் என்று நினைக்கும் பாடத்தை எடுத்துப் படித்துவிட்டு, ‘ஃபைன்மன் டெக்னிக்’ பயன்படுத்தி, தேர்வுக்கான திருப்புதலை முயற்சி செய்யுங்கள். இது ஒரு தனித்துவமான கற்றல் முறை.

நான்கு படிகள்

முதல் படி: பாடத்தைப் படித்ததற்குப் பிறகு ஒரு தாளை எடுத்து, அப்பாடம் தொடர்பாக நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பட்டியலிடுங்கள். இரண்டாம் படி: அந்தப் பாடத்தை வேறொருவருக்கோ நண்பருக்கோ விளக்கிச் சொல்லுங்கள்.

ஒருவேளை தனியாகப் படிக்கும் வழக்கம் உள்ளவர் என்றால், உங்களுக்கே பாடம் எடுப்பதுபோல அந்தப் பாடத்தை விளக்கிச் சொல்லிக்கொள்ளுங்கள். மூன்றாம் படி: விளக்கிச் சொல்லும்போது எந்த இடத்தில் தடுமாற்றம் ஏற்படுகிறது, எப்போது புத்தகத்தை எடுத்துப் பார்க்கத் தோன்றுகிறது என்பதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

நான்காம் படி: சுய மதிப்பாய்வு செய்து தடுமாற்றம் ஏற்பட்ட பகுதியை மட்டும் மீண்டும் நன்கு படித்துத் தெளிவு பெறவும். இப்படிச் செய்வதால் ஒரே பாடத்தை மீண்டும் மீண்டும் படித்து நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கலாம்.

மறந்து போகிற அல்லது விடுபடுகிற பகுதியை மட்டும் படித்து, தெளிவு பெறலாம். நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் ரிச்சர்ட் ஃபைன்மன் அறிமுகப் படுத்தியுள்ள இந்தப் படிப்பு முறை உங்களுக்கும் பயனுள்ள தாக இருக்கலாம்!

SCROLL FOR NEXT