

நான் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது (1964ஆம் ஆண்டு), ஒரு நாளிதழில் தலைப்புச் செய்தியாகப் பிரசுரமாகியிருந்த ‘தங்கம் விலை கிடுகிடு உயர்வு’ என்கிற செய்தி இன்றைக்கும் நினைவில் உள்ளது. பறந்துபோகும் தங்கக் காசைக் கிராமத்து மனிதர் ஒருவர் சோகத்துடன் வேடிக்கை பார்ப்பது போன்ற கேலிச்சித்திரமும் வெளியாகியிருந்தது.
10 கிராம் தங்கத்தின் விலை 90 ரூபாயிலிருந்து இரண்டு ரூபாய் அதிகரித்த செய்தி அன்றைக்கு முக்கியமானதாக இருந்தது. இன்று அதே அளவான தங்கத்தின் விலை ரூ.1.6 லட்சம். பூமியில் இருந்து கனிமமாகப் பெறப்படுகின்ற உலோகமான தங்கத்தின் விலை ஏன் இந்த அளவு உயர்ந்திருக்கிறது என்கிற கேள்வி தோன்றுகிறது.
ஆளும் உலோகம்
மனித வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர் போன்றவற்றைத் தர இயலாத உலோகமான தங்கம், இன்று சமூக மதிப்பீட்டில் உச்ச நிலையை அடைந்துள்ளது. ஒப்பீட்டளவில் உறுதித்தன்மை குறைந்த உலோகமான தங்கம், அதிகப் பொருளாதார மதிப்பைக் கொண்டிருப்பது நகைமுரண். நடுத்தரவர்க்கக் குடும்பத்தில் நடைபெறும் திருமணத்தில்கூட 50 பவுன் தங்க நகைகள் தேவைப்படுகின்றன.
பொருளாதார ஏற்றத்தாழ்வையும் சமூக மதிப்பீட்டையும் தங்க நகைகள் தீர்மானிக்கின்றன. தங்கத்தின் விலை பல மடங்கு அதிகரித்த போதிலும், தங்க நகைகளை வாங்குவதும் தங்கக் கட்டிகளைச் சேமிப்பதும் குறையவில்லை. தங்கம் என்கிற மஞ்சள் பிசாசு மனிதர்களை இடைவிடாமல் துரத்தி, பொருளாதாரரீதியில் ஆளுகை செலுத்திக்கொண்டிருக்கிறது.
வரலாற்றில் தங்கம்
தங்கம் என்றால் ‘சொத்து’ என்ற கருத்து பழங்காலத்திலிருந்தே தமிழர்களிடையே வழக்கில் உள்ளது. தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குக் கூடுதலாகத் தங்கம் புழங்கிவருகிறது.
சங்க இலக்கியத்தில் ‘பொன்’ பற்றிய குறிப்பானது பல்வேறு பாடல்களில் இடம்பெற்றுள்ளது. இடைக்காலத்தில் ரசவாதம் மூலம் இரும்பைத் தங்கமாக்கும் ரகசியத்தைச் சித்தர்கள் அறிந்திருந்ததாக நம்பி, அவர்கள் பின்னால் பித்துப் பிடித்ததுபோல அலைந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
தங்க வேட்கையில் மக்கள் அலைக்கழிக்கப்படுவதற்குப் ‘பணம்’ என்கிற நிலையில் தங்கத்துக்கு ஏற்பட்டிருக்கும் மதிப்புதான் காரணம். ஒப்பீட்டு அளவில் அதிகமான முரண்பாடுகளைக் கொண்ட உலோகமாகவும், சிக்கலான சமூகத்தன்மை உடையதாகவும் தங்கம் மாறியது எப்படி என்கிற கேள்விக்கான விடை வரலாற்றில் பொதிந்துள்ளது.