ஒரு கோப்பை தேநீருக்குப் பின்னாலும் கல்வித் துறை ஒன்று இயங்கிவருகிறது. தேயிலையை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படும் உலகின் முதல் பல்கலைக்கழகத் துறை இந்தியாவில்தான் உள்ளது.
அசாம் மாநிலத்தில் இயங்கிவரும் புகழ்பெற்ற அசாம் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், கடந்த 1968ஆம் ஆண்டில் 'தேயிலை வளர்ப்பு - தொழில்நுட்பத் துறை' (Tea Husbandry & Technology) தொடங்கப்பட்டது.
தேயிலை சார்ந்த படிப்புகளுக்கு உலகளாவிய முன்னோடியாகத் திகழும் இத்துறை தேயிலைச் சாகுபடி செய்யும் நவீன முறைகள், உயர்தர தேயிலைத் தயாரிப்பு, அதன் தரத்தை மதிப்பிடுதல், தேநீர் சுவை மதிப்பாய்வு (Tea Tasting), தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள், தேயிலைத் தோட்டங்களை நிர்வகிக்கும் வழிமுறைகள், சர்வதேச அளவில் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறது.
இப்பல்கலைக்கழகத்தில் தேயிலை சாகுபடி, அதன் வணிகம் சார்ந்து இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவை தவிர, இத்துறையின் மூலம் தேயிலை உற்பத்தித் தொழில்நுட்பம், மேலாண்மை சார்ந்த 6 மாத காலச் சிறப்புச் சான்றிதழ் படிப்பும் வழங்கப்படுகிறது.