புவி உயிரியல் என்றால் என்ன, அது எப்போது தோன்றியது, அதன் முக்கியப் பயன்பாடுகள் என்ன என்பதைப் பற்றிக் கடந்த வாரம் பார்த்தோம். இத்துறையில் கிடைக்கும் கல்வி வாய்ப்புகள், உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள், எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
வெளிநாடுகளில் கல்வி வாய்ப்புகள்
புவி உயிரியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உலகின் பல முன்னணிப் பல்கலைக்கழகங்களில் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்காவின் கலிஃபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் (Caltech) நுண்ணுயிர்கள், பாறைகள், பூமியில் உயிரின் தோற்றம், பிற கோள்களில் உயிர் இருக்குமா என்பது போன்ற சுவாரசியமான தலைப்புகளில் படிக்கலாம். ஆய்வகப் பயிற்சியும் ஆராய்ச்சி அனுபவமும் இந்தப் படிப்பின் முக்கிய அம்சங்கள்.
யேல், ஹார்வர்டு, எம்.ஐ.டி., கொலம்பியா போன்ற பல்கலைக்கழகங்களிலும் புவி உயிரியல் தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக, பாறைகளையும் பூமியின் சூழலையும் நுண்ணுயிர்கள் எவ்வாறு மாற்றுகின்றன என்பது போன்ற தலைப்புகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ், அரிசோனா மாகாணப் பல்கலைக்கழகம், தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், வாஷிங்டன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் புவி உயிரியல் துறையில் சிறப்புப் பயிற்சியையும் ஆராய்ச்சி வாய்ப்புகளையும் வழங்குகின் றன. வெளிநாட்டில் படித்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பும் மாணவர் களுக்கு இந்தத் துறை புதிய வாய்ப்புகளை வழங்கும்.
இந்தியாவில் கல்வி வாய்ப்புகள்
இந்தியாவில் தற்போது ‘புவி உயிரியல்’ என்கிற பெயரில் தனித்த முழுநேரப் பட்டப்படிப்பு இல்லை. ஆனால் புவியியல், சுற்றுச்சூழல் அறிவியல், புவி அறிவியல் போன்ற படிப்புகள் மூலம் இந்தத் துறைக்குத் தேவையான அடிப்படை அறிவைப் பெறலாம்.
ஐ.ஐ.டி. (இந்தியச் சுரங்கப் பள்ளி) தன்பாத், ஐ.ஐ.எஸ்சி. பெங்களூரு, வாடியா இமயமலை புவியியல் ஆய்வு நிறுவனம், பீர்பால் சாஹ்னி தொல்தாவரவியல் நிறுவனம், தேசியப் புவி அறிவியல் ஆய்வு மையம் (NCESS) ஆகிய நிறுவனங்களில் புவி அறிவியல் தொடர்பான முக்கிய ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.
புவி உயிரியல் துறை யில் ஆர்வமுள்ள மாண வர்கள் இந்தியாவில் புவி அறிவியல் அல்லது தொடர்புடைய படிப்புகளை முடித்த பிறகு, வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் சிறப்புப் படிப்புகளைத் தொடரலாம். அதற்கான தகவல்களை அதிகார பூர்வ கல்வி வழிகாட்டல் மையங்கள், பல்கலைக்கழகங்களின் இணைய தளங்கள் மூலம் பெறலாம்.
வேலைவாய்ப்புகள்
புவி உயிரியல் என்பது வகுப் பறை படிப்பைத் தாண்டி கள ஆய்வு, ஆய்வக ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட துறையாகும். அமெரிக்காவின் கால்டெக், யுஎஸ்சி போன்ற பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு நேரடி களப்பணி அனுபவம் அளிக்கும் சர்வதேசப் பயிற்சித் திட்டங்களை நடத்துகின்றன.
பூமியில் உயிர் எப்படித் தோன்றியது, பிற கோள் களில் உயிர் இருக்குமா என்பது போன்ற கேள்விகளுக்கான ஆராய்ச்சி களுக்கு நாசா உள்ளிட்ட பல அமைப்புகள் நிதியுதவி வழங்கு கின்றன.
இந்தத் துறையில் படித்தவர்கள் எண்ணெய் - எரிவாயு ஆய்வு நிறுவனங்கள், சுற்றுச்சூழல் ஆலோ சனை நிறுவனங்கள், சுரங்கம் - புவிவள ஆய்வு மையங்கள், பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் போன்ற இடங்களில் பணியாற்றலாம். நாசா, இஸ்ரோ போன்ற விண்வெளி நிறுவனங்களில் விண்வெளி உயிரியல், கோள் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிகளில் புவி உயிரியல் நிபுணர் களுக்கான தேவை அதிகரித்துவருகிறது.
எதிர்காலம்
காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பூமியில் உயிரின் தோற்றம், வேற்றுக்கோள்களில் உயிர் இருக்குமா என்கிற தேடல் போன்றவை இன்றைக்கு உலகளவில் முக்கியமான ஆய்வுத் துறை களாக மாறியுள்ளன.
இதனால் புவி உயிரியல் போன்ற துறைகளுக்கு எதிர்காலத்தில் அதிக தேவை இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். உயிரியல், புவியியல், வேதியியல் ஆகிய பாடங்களில் பள்ளிப் பருவத்திலேயே நல்ல அடித்தளம் அமைத்துக் கொள்ளும் மாணவர்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் புவி உயிரியல் துறையில் உயர்கல்வி, ஆராய்ச்சி, வேலை வாய்ப்புகளில் சிறந்த வாய்ப்புகளைப் பெற முடியும்.
எதிர்காலத்தில் பூமியையும் விண்வெளியையும் ஒரே பார்வையில் புரிந்துகொள்ள உதவும் புதிய தலைமுறை அறிவியலாளர்களை உருவாக்கும் துறையாகப் புவி உயிரியல் உருவெடுத்து வருகிறது.
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்.