கல்வி - வேலை வழிகாட்டி

காலத்துக்குத் தேவையான விளையாட்டுச் சட்டப் படிப்பு - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 13

நெடுஞ்செழியன்.தா

உலகளவில் மிகப் பெரிய வர்த்தகம் விளையாட்டை நம்பி நடக்கிறது. இந்தச் சந்தையின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.37,50,000 கோடி. கிரிக்கெட்டில் மட்டும் 2025இல் சட்டபூர்வமாகப் புரண்டது ரூ.34,560 கோடி. உலகளவிலான இந்த வருவாயில் பிசிசிஐ, 62 சதவீதத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் எனப் புதிதான விளையாட்டுத் தொடர்கள், ஒளிபரப்பு உரிமை, விளம்பரங்கள், டிக்கெட் விற்பனை, வியாபாரம் என இதில் ஏகப்பட்ட வருமானப் பிரிவுகள் இருக்கின்றன. அதேபோல 2023 முதல் 2026 வரையிலான ஃபிஃபா கால்பந்தின் மொத்த வருவாய் ரூ.1,17,000 கோடி. ஒருகாலத்தில் பொழுதுபோக்காக இருந்த விளையாட்டு, இன்று பல லட்சம் கோடிகள் புரளும் உலகளாவிய வணிகமாக உருவெடுத்துவிட்டது.

எங்கு படிக்கலாம்? - இவ்வளவு பெரிய துறை, பணம் புரளும் வணிகத்தில் எவ்வளவு பிரச்சினைகள் எழும். அதற்காகவே ‘Sports Law' என்கிற விளையாட்டு சார்ந்த சட்டப் படிப்பு உலகளவில் மிகப்பெரும் கவனத்தை ஈர்த்துவருகிறது.

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களான ஆக்ஸ்ஃபோர்டு, ஹார்வர்டு, மெல்பர்ன் போன்றவற்றில் எல்லாம் இந்தப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டன. சர்வதேச மாணவர்கள் இந்தப் படிப்பின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள். இது தவிர, விளையாட்டுத் துறையில் உலகத்தரம் வாய்ந்த சட்டப் படிப்புகளை வழங்கும் சிறந்த பல்கலைக்கழகங்கள் சில:

ISDE பிசினஸ் ஸ்கூல், ஸ்பெயின்: இங்கு வழங்கப்படும் 'சர்வதேச விளை யாட்டுச் சட்ட மாஸ்டர்' படித்தவர்கள், ஃபிஃபா, விளையாட்டு நடுவர் நீதிமன்றம் (Court of Arbitration for Sport) போன்ற அமைப்புகளில் வேலை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.

நேச்சடெல் பல்கலைக்கழகம், சுவிட்சர்லாந்து: இங்கிருக்கும் 'ஃபிஃபா மாஸ்டர்' படிப்பு, விளையாட்டு மேலாண்மைச் சட்டத்தில் உலகின் முதன்மையான படிப்பாகக் கருதப்படுகிறது.

          

ஸூரிச் பல்கலைக்கழகம், சுவிட்சர்லாந்து: சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு, யூ.இ.எஃப்.ஏ போன்ற சர்வதேச அமைப்புகளுக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கு பயிலும் மாணவர்களுக்கு நேரடித் துறைசார் அனுபவம் கிடைக்கிறது.

ரியல் மாட்ரிட் பட்டதாரிப் பள்ளி, ஸ்பெயின்: இப்பள்ளி ரியல் மாட்ரிட் கிளப் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதால், உலகப் புகழ்பெற்ற விளையாட்டு நிர்வாகிகளிடம் கற்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

எப்படிப்பட்ட படிப்பு? - விளையாட்டுச் சட்டப் படிப்பு என்பது சட்டப் படிப்பின் ஓர் அங்கம் தான். மருத்துவத்தில் எப்படி இன்று ஏராளமான சிறப்புப் பிரிவுகள் உருவாகி

யுள்ளனவோ, அப்படித் தேவைக்கேற்பச் சட்டத்தில் ஏராளமான பிரிவுகள் வந்துவிட்டன. விளையாட்டுச் சட்டப் படிப்பு என்பதும் அப்படியான ஒரு பிரிவுதான். முதுநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டயப் படிப்புகளாகச் சர்வதேசப் பல்கலைக்கழகங்கள் கொண்டுவந்து விட்டன.

விளையாட்டுத் துறையில் முதலீடு: அதிகமாகிவருகிறது. நாள்தோறும் விளை யாட்டு சார்ந்து ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ஏலம் மூலம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஏதாவது ஒரு வகையில் இத்துறையில் விளையாட்டு சார்ந்து ஏகப்பட்ட வழக்குகள் அன்றாடம் பதிவாகின்றன.

பெருநிறுவனங்கள், இம்மாதிரி யான வழக்குகளுக்குச் சாதாரண வழக்கறிஞர்களைத் தேடாமல், விளையாட்டுச் சட்டப் படிப்பில் நிபுணத்துவம் பெற்ற சட்ட வல்லுநர்களைத் தேடத் தொடங்கியுள்ளன. அதனால் இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் இருக்கின்றன.

விளையாட்டுச் சட்டப் படிப்பின் சிறப்பு: விளையாட்டு ஒப்பந்தச் சட்டம் (Sports Contract Law): விளையாட்டு வீரர்கள், அணிகள், கிளப்புகளுக்கு மத்தியிலான ஒப்பந்தங்கள் பற்றிய பிரிவு இது. வீரர்களின் ஊதியம், இடமாற்ற விதிகள் (Transfer Rules) ஆகியவற்றோடு ஒப்பந்தம் மீறப்படும்போது, எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தப் பிரிவில் மாணவர்கள் விரிவாகப் படிப்பார்கள்.

அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights): விளையாட்டுப் போட்டி களின் ஒளிபரப்பு உரிமம், வணிக முத்திரைகள், லோகோ பயன்பாடு ஆகியவை இதில் அடங்கும். உதாரண மாக, ஒலிம்பிக் சின்னம் அல்லது ஒரு புகழ்பெற்ற கால்பந்து கிளப்பின் லோகோவை அனுமதியின்றிப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டங்கள் இதில் கற்பிக்கப்படுகின்றன.

ஊக்க மருந்து தடைச் சட்டம் (Anti – doping Law): விளையாட்டுச் சட்டப் படிப்பில் மிக முக்கியமான பிரிவு இது. சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தின் (WADA) விதிமுறைகள், வீரர்களிடம் நடத்தப்படும் சோதனைகள், ஊக்கமருந்து பயன்படுத்திய வீரர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் பற்றிய சட்டக்கூறுகள் இதில் கற்பிக்கப்படும்.

விளையாட்டு நிர்வாகம் (Sports Governance) - சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC), ஃபிஃபா, ஐசிசி போன்ற அமைப்புகள் எவ்வாறு இயங்குகின்றன, அவற்றின் உள்நாட்டு, சர்வதேசச் சட்ட அதிகாரங்கள் என்ன என்பது பற்றி இந்தப் பிரிவில் பயிற்றுவிக்கப்படும். பிரச்சினைக்கான தீர்வும் நடுவர் மன்றமும் (Dispute Resolution & CAS) - சர்வதேச அளவில் விளையாட்டுகளில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க சுவிட்சர்லாந்தில் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் இயங்குகிறது.

ஒரு நாடு இன்னொரு நாட்டில் விளையாட மறுப்பது, இழப்பீடு கோருவது போன்ற பல விவகாரங்கள் இந்த நடுவர் மன்றத்தில் தீர்க்கப்படும். ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் ஒரு வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அந்த வீரர் இந்த நடுவர் மன்றத்தில் முறையிட்டு நீதிபெற முடியும்.

இணைய விளையாட்டுச் சட்டம் (eSports Law): இன்று இணைய விளை யாட்டுகள் பெருமளவில் வளர்ந்துள்ளன. பெரிய நிறுவனங்கள் எல்லாம் இத்துறையில் ஆர்வம் காட்டுகின்றன. இணைய விளையாட்டுப் போட்டிகள், சட்ட விரோதமான பந்தயம், சூதாட்டம் தொடர்பான சட்டங்கள் இந்தப் பிரிவில் பயிற்றுவிக்கப்படும், இவை தவிர, சர்வதேச விளையாட்டுச் சட்டம், ‘Lex Sportiva’ எனப்படும் விளையாட்டிற்கே உரிய தனித்துவமான விதிகள் போன்றவற்றையும் இந்தப் படிப்பில் மாணவர்கள் படிப்பார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை மத்தியப் பல்கலைக்கழகங்களில் குறுகிய காலப் படிப்பாகத்தான் விளையாட்டுச் சட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தப் படிப்பை இளங்கலை, முதுநிலை பட்டப் படிப்பாகக் கொண்டுவந்தால் இந்திய இளைஞர்களும் இந்த பில்லியன் டாலர் சந்தைக்குள் நுழைந்து சாதிக்க முடியும்.

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org

SCROLL FOR NEXT