எனக்கு ஆசிரியராக வேண்டும்என்கிற ஆசை அதிகம். மாற்றுத் திறனாளிகளுக்குக் கற்றுக்கொடுக்கப் படிப்புகள் உள்ளதை அறிகிறேன். அதைப் படிக்கலாமா? விவரங்களை வழங்குங்கள். - மு. ரஞ்சிதம், பனப்பாக்கம்
ஆசிரியர் பணி என்பது வருங்காலச் சமுதாயத்தைச் செம்மைப்படுத்தும் பணியாகும். அதை மேற்கொள்ள விரும்புவது பாராட்டுக்குரியது. அதைவிடச் சிறப்பு மிக்கது மாற்றுத்திறனாளிகளுக்குப் பயிற்றுவிப்பது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியப் பணியைப் படிக்க ஆர்.சி.ஐ. எனப்படும் ‘ரீஹாபிலிடேஷன் கவுன்சில் ஆஃப் இந்தியா’வால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ், பட்டயம், பட்டம், பட்ட மேற்படிப்பு ஆகியவற்றைப் படித்தால் மட்டுமே சிறப்புப் பள்ளிகளில் பணி வாய்ப்பைப் பெறலாம்.
அத்தகைய படிப்புகளைப் பற்றிய சிறிய அறிமுகம். முக்கியமாக ‘DCBR’ - டிப்ளமோ இன் கம்யூனிட்டி பேஸ்டு ரீஹாபிலிடேஷன், ‘DECSE’ - டிப்ளமோ இன் எர்லி சைல்டுஹுட் ஸ்பெஷல் எஜுகேஷன், ‘DISL’ - டிப்ளமோ இன் இந்தியன் சைன் லாங்குவேஜ் இன்டர்பிரடேஷன், ‘CCCG’ - சர்டிஃபிகேட் கோர்ஸ் இன் கேர்கிவிங், ‘PGDCP’ - போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் கிளினிக்கல் சைக்காலஜி, டிப்ளமோ இன் ஸ்பெஷல் எஜுகேஷன் ஃபார் விஷுவலி இம்பேர்டு, டிப்ளமோ இன் ஸ்பெஷல் எஜுகேஷன் ஃபார் ஹியரிங் இம்பேர்டு, டிப்ளமோ இன் இன்டலெக்சுவல் டிஸ்எபிலிட்டி போன்றவை உள்ளன.
உங்களுக்குப் பட்டப் படிப்பாகப் படிக்க வேண்டு மென்றால் விஷுவலி இம்பேர்டு, ஹியரிங் இம்பேர்டு, லேர்னிங் டிஸ்எபிலிட்டி, டெஃப் பிளைன்டட்னெஸ் போன்றவற்றில் தனியே வழங்கப்படும் பி.எட். ஸ்பெஷல் எஜுகேஷன் படிப்புகளைத் தேர்வு செய்ய லாம். இப்படிப்புகளைப் படிக்க நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் சிறப்புக் கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்யலாம்.
அடல் பிகாரி வாஜ்பாய் டிரெயினிங் சென்டர் ஃபார் டிஸ்எபிலிட்டி ஸ்போர்ட்ஸ் (குவாலியர்), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எம்பவர்மென்ட் ஆஃப் பர்சனல் வித் விஷுவல் டிஸ்எபிலிட்டி (டேராடூன்), அலி யவர் ஜுங் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பீச் அண்டு ஹியரிங் டிஸ்எபிலிட்டி (மும்பை), இதன் 4 மண்டல மையங்கள்; நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் எம்பவர்மென்ட் ஆஃப் பர்சனல் வித் இன்டலெக்சுவல் டிஸ்எபிலிட்டி (செகந்திராபாத்), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் எம்பவர்மென்ட் ஆஃப் பர்சனல் வித் மல்டிபிள் டிஸ்எபிலிட்டி (சென்னை), பண்டிட் தீனதயாள் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் பர்சனல் வித் பிசிகல் டிஸ்எபிலிட்டிஸ் (புதுடெல்லி), சுவாமி விவேகானந்தா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ரீஹாபிலிடேஷன் டிரெயினிங் அண்டு ரிசர்ச் (ஒடிசா), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் லோகோமோட்டர் டிஸ்எபிலிட்டிஸ் (கொல்கத்தா), இந்தியன் சைன் லாங்குவேஜ் ரிசர்ச் அண்டு டிரெயினிங் சென்டர் (புதுடெல்லி), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் மென்டல் ஹெல்த் அண்டு ரீஹாபிலிடேஷன் (செஹோர், மத்தியப் பிரதேசம்).
இவை தவிர அனைத்து மாநிலங்களிலும் பட்டயம், பட்டம், முதுகலைப் படிப்புகளை வழங்கக்கூடிய சிறப்புத் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் சில கல்வி நிறுவனங்களில் சேர நுழைவுத் தேர்வும் உண்டு. மதுரையில் காம்போசிட் ரீஜனல் சென்டர் ஆஃப் ஸ்கில் டெவலெப்மென்ட், ரீஹாபிலிடேஷன் அண்டு எம்பவர்மென்ட் ஆஃப் பர்சனல் வித் டிஸ்எபிலிட்டிஸ் உள்ளது. இங்கு கன்டினுயிங் ரீஹாபிலிடேசன் எஜுகேசன் பயிற்சி, பெற்றோருக்கான சிறப்புப் பயிற்சி ஆகியவை அளிக்கப்படுகின்றன. இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. அது மட்டுமன்றி அவர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு https://crcmadurai.nic.in/ என்கிற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.