பல தலைமுறைகளாகப் பணியிட கலாச்சாரத்தில் சில மாற்றங்கள் இருந்தாலும், பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வந்துள்ளது.
ஆனால், ஜென் இசட் காலத்தில் ஒரு வேலையை அணுகும் முறை தொடங்கிப் பணியிட கலாச்சாரம்வரை பெரும் மாற்றம் வந்திருக்கிறது. அந்த வரிசையில் பணியிடத்தில் ஜென் இசட் பயன்படுத்தும் சில சொற்றொடர்களைப் பார்ப்போம்.
Quiet Quitting
கொடுக்கப்பட்ட வேலையைத் தவிரகூடுதல் பொறுப்பு களுக்கு ‘நோ’ சொல்வதை இப்படி அழைக் கிறார்கள். எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால், ‘எக்ஸ்ட்ரா’ வேலைகளை செய்ய முடியாது என்பதைத்தான் இப்படி ‘டீசன்டாக’ சொல்கிறார்கள்.
Career Cushioning
ஒரு வேலையில் இருந்து கொண்டே அமைதியாக வேறு வேலை அல்லது வேறுதுறையில் ஒருவர் தன்னை மெருகேற்றிக் கொள்வது. ‘பேக்-அப்’ வேலை என்றும் வைத்துக்கொள்ளலாம்.
Coffee Badging
அலுவலகம் செல்வது, வீட்டில் இருந்து வேலை செய்வது என மாறி மாறி இருக்கும் ‘ஹைபிரிட்’ கலாச்சாரத்தில், அவ்வப் போது அலுவலகத்துக்குச் சென்று தலையைக் காட்டி விட்டு வருவதற்கு இதுதான் பெயராம்!
Task Masking
வேலையே இல்லாமல் வெட்டியாக இருந்தாலும், வேலை செய்வது போல ‘பாவ்லா’ காட்டுவதாம்!
Bare Minimum Monday
திங்கள்கிழமை காலை என்றவுடன் அரக்கபறக்க வேலைப் பளுவைச் சுமந்து சிரமப்படாமல், ‘Bare Mini mum Monday’ என்றால் அன்றைய நாள் காலையில் இதமான ஏதாவது ஒரு வேலையோடு அந்த வாரத்தைத் தொடங்க வேண்டுமாம்!
Polyworking
ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைச் செய்வது. ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து வருமானம் ஈட்டுவதே ‘Polyworking’
Hustle Culture
கடின உழைப்பும் சாதிப்பதுமே வாழ்க்கை என நினைப்பது. இதுபோதும் என நில்லாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருப்பதற்கு பெயர் 'Hustle Culture’
Digital Nomad
வெவ்வேறு ஊர்க ளுக்குப் பயணம் செய்து விருப்பப்பட்ட இடத்தில் இருந்து கொண்டு அலுவலக வேலையைச் செய்பவர்கள் ‘Digital Nomad’ எனப்படுகிறார்கள்.