

நீலகிரி மாவட்டத்தில் இருவேறு காட்டுப் பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்களில் இரண்டு சிறுத்தைக் குட்டிகளும் ஒரு புலிக் குட்டியும் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது.
பல்வேறு வகையான காட்டு விலங்குகள் அழிந்துவரும் நிலையில், காட்டுயிர்ப் பாதுகாப்பில் நாம் கவனத்துடன் செயல்பட வேண்டிய அவசியத்தை இந்த இழப்புகள் உணர்த்துகின்றன.
அண்மையில், நீலகிரியின் தேவாலா – பந்தலூர் சாலையைத் தாயுடன் கடக்க முயன்ற ஐந்து மாதங்களே ஆன இரண்டு சிறுத்தைக் குட்டிகள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தன.
இதே மாவட்டத்தில், முதுமலை அருகே மசினகுடி வனச்சரகத்துக்கு உள்பட்ட மாயாறு அணைப் பகுதியில் புலிக்குட்டி ஒன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. நாடு முழுவதுமே மனிதர் - காட்டுயிர் எதிர்கொள்ளல் அண்மைக்காலமாகத் தீவிரமடைந்துவருவதன் எதிரொலிதான் இதுபோன்ற உயிரிழப்புகள்.
‘காடுகளில் வசிக்கும் உயிரினங்கள் சந்திக்கும் மிக மோசமான பிரச்சினை மனிதர் - காட்டுயிர் எதிர்கொள்ளல்’ என்கிறது உலக இயற்கை நிதியமும் ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டமும் இணைந்து வெளியிட்டிருக்கும் ஆய்வு.