கல்வி - வேலை வழிகாட்டி

நகரத்தை விரும்புபவர்களுக்கு சில பிரத்யேக வேலைகள் | சென்னை 387

செய்திப்பிரிவு

ஒரு நகரத்தின் வளர்ச்சி என்பது நவீன வசதிகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றோடு முடிந்துவிடுவதில்லை.

நகரத்தின் வளர்ச்சி யைத் திட்டமிடுவது, போக்குவரத்தை மேம் படுத்துவது, பழமையான கட்டிடங்களைப் பாதுகாப்பது, வரலாற்று ஆவணங்களைச் சேமிப்பது போன்ற முக்கிய வேலைகளிலும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

ஒரு நகரத்தினுடைய வளர்ச்சியின் மீது ஆர்வமும் அதற்குப் பங்காற்றவும் விரும்பும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய சில துறைகள்:

மரபுக் கட்டிடக்கலை நிபுணர் (Conservation Architect)

பழமையான கோயில்கள், தேவால யங்கள், குடியிருப்புகள், மரபுப் பெரு மையைத் தாங்கி நிற்கும் கட்டிடங்கள் உள்ளிட்டவற்றின் தனித்துவம் மாறாமல் பாதுகாத்து, தேவையான மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது மரபுக் கட்டிடக்கலை நிபுணரின் பணி.

கட்டிடக்கலை அறிவுடன் வரலாறு, மரபு குறித்த புரிதலும் அவசியம். பழைய கட்டிடங்களைப் பாதுகாக்கும் அரசுத் திட்டங்கள், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறலாம்.

ஆவணக் காப்பாளர் (Archivist)

பழைய செய்தித்தாள்கள், ஒளிப்படங்கள், கடிதங்கள், வரைபடங்கள், அரசு ஆவணங்கள் உள்ளிட்ட வரலாற்றுப் பதிவுகளைச் சேகரித்து, அவற்றை வகைப்படுத்திப் பாதுகாப்பது ஆவணக் காப்பாளரின் முக்கியப் பணி.

டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றும் பணிகளும் தற்போது அதிகரித்துவருகின்றன. நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வேலை கிடைக்கலாம். வரலாறு, ஆவணங்களை ஆராய்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஏற்ற துறை இது.

அருங்காட்சியகக் காப்பாளர் (Museum Curator)

அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்படும் பொருள்களைத் தேர்வுசெய்வது முதல், அவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, பார்வையாளர்களுக்குப் புரியும் வகையில் காட்சிப்படுத்துவதுவரை காப்பாளர்களின் பணி முக்கியமானது. வரலாறு, கலை, தொல்லியல் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர் இத்துறையில் பணியாற்றலாம்.

நகரமயமாக்கல் திட்டமிடுபவர் (Urban Planner)

மக்கள்தொகை வளர்ச்சி, போக்கு வரத்து, குடியிருப்புகள், பசுமைப் பகுதிகள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளைக் கணக்கில் கொண்டு நகரத்தின் எதிர்கால வளர்ச்சியைத் திட்டமிடுவது இவர்களின் முக்கியப் பணி.

வேகமாக நகரமயமாகி வரும் பகுதிகளில் இவர்களின் பங்கு முக்கியமானது. நகர வளர்ச்சி, சுற்றுச்சூழல், பொதுப் போக்குவரத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இந்தத் துறையைத் தேர்வுசெய்யலாம்.

கல்வெட்டு ஆய்வாளர் (Epigraphist)

கோயில்கள், பாறைகள், தூண்கள் உள்ளிட்டவற்றில் காணப்படும் கல்வெட்டுகளைப் படித்து, அவற்றில் உள்ள வரலாற்றுத் தகவல்களை ஆய்வுசெய்பவர்கள் கல்வெட்டு ஆய்வாளர்கள்.

வரலாறு, தொல்லியல், மொழி ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு இது மிகவும் சுவாரசியமான ஆனால், சவாலான துறையும்கூட.

SCROLL FOR NEXT