

பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் 24 வாரங்களுக்கு உட்பட்ட கருவைக் கலைக்க நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. கூடவே, கருக்கலைப்புச் சட்டம் குறித்து, சட்டம் - நீதிவழங்கல் துறையினரிடம் புரிதலின்மை நீடிப்பதும் இந்த வழக்கின் மூலம் தெரியவந்திருக்கிறது.
பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டுக் கருவுற்ற மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமியின் வயிற்றில் வளரும் 18 வாரக் கருவைக் கலைக்க அனுமதிக்கும்படி அந்தச் சிறுமியின் தந்தை அம்மாநில உயர் நீதிமன்ற இந்தூர் அமர்வை நாடினார்.
அந்தக் கருவால் தன் மகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சந்தீப் என்.பட், இதே போன்ற ஒரு வழக்கில் ஜபல்பூர் உயர் நீதிமன்றம் கடந்த 20 பிப்ரவரி, 2025இல் வழங்கிய தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.
உஜ்ஜைன் மாவட்டம் மேதிப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது வயிற்றில் வளரும் கருவைக் கலைப்பது தொடர்பான வழக்கில் இரண்டு விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன.