கல்வி - வேலை வழிகாட்டி

வேளாண் துறை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை

ராகா

வேளாண் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பயிலும் மாணவர்களின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR), தேசிய திறன் உதவித்தொகையை (National Talent Scholarship – NTS-UG) வழங்குகிறது. 2026–27 கல்வியாண்டுக்கான உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

உதவித்தொகை விவரம்:

தேர்வாகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும். கல்லூரியில் சேரும் மாதம் முதல் படிப்பு முடியும் வரை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். தகுதிகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்பவர்களுக்கு அவர்களின் கல்வி நிறுவனத்தின் மூலம் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப் பரிமாற்ற முறையில் உதவித்தொகை செலுத்தப்படும்.

தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வேளாண்துறை படிப்புகளில் சேர்ந்து, தங்கள் சொந்த மாநிலத்துக்கு வெளியே உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைப் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் முழுநேரமாகப் படிப்பவர்களாக இருக்க வேண்டும்.

படிப்புக் காலத்தில் முழுநேரம் அல்லது பகுதிநேரமாக எந்த வேலையிலும் ஈடுபடக் கூடாது. படிப்பைத் தொடரும் காலத்தில் வேறு எந்த உதவித்தொகையையும் பெறக் கூடாது. தொடர்ந்து உதவித்தொகையைப் பெற, மாணவர்கள் ஒவ்வொரு பருவத் தேர்விலும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 7.00/10.00 OGPA/CGPA பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தபட்சம் 6.50/10.00 OGPA/CGPA பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த உதவித்தொகைக்குத் தேசிய உதவித்தொகை இணையத்தளம் (NSP) மூலம் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் One-Time Registration (OTR) முறையில் பதிவு செய்ய வேண்டும்.

‘OTR’ நடைமுறையை நிறைவு செய்த பிறகு, ‘Apply for Scholarship’ எனும் பகுதியில் குறிப்பிட்ட இந்த உதவித்தொகையைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் பல்வேறு அரசு கல்வி உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்க உதவும் ஒரே தளமாக தேசிய உதவித்தொகை இணையதளம் (National Scholarship Portal - NSP) செயல்படுகிறது.

மத்திய, மாநில அரசுகள், பல்வேறு அரசுத் துறைகள் வழங்கும் உதவித்தொகை தொடர்பான திட்டங்களை ஒரே இடத்தில் தெரிந்துகொண்டு எளிமையான முறையில் தேர்வுசெய்து மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய உள்துறை அமைச்சகம், மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை, சமூக நீதி - அதிகாரமளித்தல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் விவரங்கள் இதில் பகிரப்படுகின்றன.

கடைசி நாள்: அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: [https://scholarships.gov.in/home]

SCROLL FOR NEXT