

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தொடர்பாக ஏற்பட்ட குழு மோதலில் 15க்கும் மேற்பட்ட பதின்மவயதுச் சிறார் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது.
இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட ரீல்ஸ் தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தின் சேடப்பாளையம், அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவர்கள் இரண்டு பேருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரண்டு தரப்பினரும் நண்பர்களை அழைத்துச் சென்று தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் ஒரு சிறுவன் பலத்த காயமடைந்தார். பல்லடம் காவல் துறையினர் அந்தச் சிறுவனை மீட்டு விசாரணை நடத்தி, 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்தனர். சமூக வலைத்தளங்களைச் சிறுவர்கள் பயன்படுத்துவதைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது தொடர்பாகப் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்படுவது, 18 வயதுக்குக் கீழானவர்கள் சமூக வலைத்தளங்களில் வன்முறைக் காட்சிகளையும் தகாத படங்களையும் பதிவேற்றுவது, ஆயுதங்களோடு படமெடுத்து அவற்றைப் பதிவிடுவது உள்ளிட்ட சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துவருகின்றன.