கல்வி & வேலை வழிகாட்டி

இந்தப் படிப்பு பற்றித் தெரியுமா? - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 10

நெடுஞ்செழியன்.தா

ரியல் எஸ்டேட் என்றால் நிலம் அல்லது வீடுகளை வாங்கி விற்பது மட்டுமல்ல. இது உலகள வில் ரூ.3.59 லட்சம் கோடி மதிப்புள்ள மாபெரும் தொழில்துறை. குடியிருப்பு, வணிகம், தொழிற்சாலை, சில்லறை விற்பனை எனப் பல பரிமாணங்களைக் கொண்ட இத்துறை, நாம் நினைப்பதைவிட மிகப் பெரியது.

வேகமான நகரமயமாக்கல், வணிக வளாகங்களின் விரிவாக்கம், குடியிருப்புகளுக் கான தேவை அதிகரிப்பு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்கள். ஸ்மார்ட் நகரங்கள், நிலைத்தன்மைக்கான தேவை ஆகியவை இந்தச் சந்தையை முன்னோக்கி நகர்த்துகின்றன. நிறுவன முதலீட்டாளர்கள், தனியார் நிறுவனங்களின் பெரும் முதலீடு களும் முக்கியப் பங்காற்றுகின்றன.

வீட்டுக் குடியிருப்புகள் இந்தச்சந்தையில் முதன்மைப் பங்கைக் கொண்டுள்ளன. நியூயார்க், லண்டன், டோக்கியோ, ஹாங்காங் போன்ற உலக நகரங்கள் இத்துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. வலுவான உள்கட்டமைப்பு வசதிகள், அதிக மக்கள்தொகை, தொடர்ச்சி யான தேவை ஆகியவை இந்த நகரங்களை நோக்கி முதலீட்டாளர் களின் கவனத்தை ஈர்க்கின்றன.

உதாரணமாக, இந்தியாவில் உள்ள புணே நகரம் ‘டெக்கான் டைனமோ’ என அழைக்கப்படும் அளவுக்குக் கல்வி, ஐ.டி. துறை, பல்துறை தொழில்களில் வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. பெங்களூருவுக்கு அருகில் உள்ள ஓசூர், தொழிற்பேட்டைகளின் வளர்ச்சியால் வீடு, வேலை, முதலீடு எனப் பல வாய்ப்புகளைக் கொண்ட முக்கிய நகரமாக உருவெடுத்து வருகிறது.

உலகளாவிய வாய்ப்பு: Jones Lang LaSalle (1783, சிகாகோ, 90,000+ பணியாளர்கள்), Savills PLC (1855, லண்டன், 38,000+ பணியாளர்கள்), CBRE Group (1906, லாஸ் ஏஞ்சலஸ், 1,00,000 பணியாளர் கள்) போன்று நூற்றாண்டு பழமை யான நிறுவனங்கள் இந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. எம்.ஐ.டி. ரியல் எஸ்டேட் மையம் (MIT/CRE) நகர்ப்புறப் பொருளியல், சொத்து விலை மாற்றங்கள், ரியல் எஸ்டேட் மாற்றம் போன்று ஐந்து முக்கியத் துறைகளில் கவனம் செலுத்துகிறது.

எம்.ஐ.டி., ஹார்வர்டு, டொரண்டோ போன்று 50+ முன்னணிப் பல்கலைக்கழகங்கள் பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் படிப்பை முதுநிலைப் படிப்பாக வழங்கிவருகின்றன.

இத்துறை சார்ந்து இயங்க விரும்பும் மாணவர்கள், முதலீட்டுப் பகுப்பாய்வு, சொத்து மதிப்பீடு போன்ற நிதிக் கருவிகளைக் கையாளும் நிபுணர்களை உருவாக்குதல், ‘PropTech’, பிளாக் செயின் மூலம் நடைபெறும் சொத்து பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருதல், நகர்ப்புறத் திட்டமிடல், வீட்டுவசதிக் கொள்கைகள், சுற்றுச்சூழல் விதிமுறைகளை ஆய்வு செய்து சிறந்த கொள்கைகளை உருவாக்குதல், ஏ.ஐ., 3டி மாடலிங், வெர்சுவல் ரியாலிட்டி போன்ற நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் போன்ற திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் ரியல் எஸ்டேட் படிப்பு: உலகம் முழுவதும் முக்கியக் கல்வி நிறுவனங்களில் சிறப்புப் பாடங்களாக ரியல் எஸ்டேட் படிப்பு கற்பிக்கப்படுகிறது. இந்தியாவில் இது பெரும்பாலும் விருப்பத்தேர்வாக (elective) மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டில் இந்தத் துறை சார்ந்த முதுகலைப் பட்டப் படிப்புகள் அல்லது ஆராய்ச்சிப் படிப்புகள் கவனம் பெறவில்லை.

மாணவர்களுக்கு இந்தத் துறை சார்ந்து சரியான பயிற்சி அளித்தால், உலகளாவிய ரியல் எஸ்டேட் சந்தைக்குத் தரமான மனிதவளத்தை இந்தியாவில் இருந்து அனுப்ப முடியும். முன்னணி நிறுவனங்களில் இந்தியர்கள் பங்காற்ற முடியும். இளைய தலைமுறையினர் இந்தத் துறையைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொண்டு, தகுந்த கல்வி பெற்றால் அளப்பரிய வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

உலகளாவிய வாய்ப்புகளின் கதவுகளைத் திறக்கும் இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கல்விக் கொள்கை வகுப்பாளர்களும் கல்வி நிறுவனங்களும் இதில் கவனம் செலுத்தத் தொடங்கினால் மாணவர்களுக்கு வழிகாட்டுதலாக அமையும்.

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org

SCROLL FOR NEXT