2025ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமைப்பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் இரண்டாம் இடம்பிடித்துச் சாதனை படைத்துள்ளார் மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்வரி சுவி.
சென்னையைச் சேர்ந்த டாக்டர் ராஜா மொய்தீன் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் குடிமைப்பணிகளுக்கான தேர்வுகளில் முதல் 10 இடங்களுக்குள் தமிழ்நாட்டு மாணவர்கள் இம்முறைதான் இடம்பிடித்திருக்கிறார்கள். இந்த முறை 60 பேர் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
கல்வியே முதன்மை
தேசிய அளவில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த 3 பெண்களில் ராஜேஷ்வரியும் ஒருவர். பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது குடிமைப்பணித் தேர்வுகளுக்கான பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
தந்தை முருகதாஸ், தாயார் நாக ராணியின் வழிகாட்டுதலின்படி இப்பயணத்தைத் தொடங்கிய தாகச் சொல்கிறார். “பொறியியல் இறுதியாண்டுப் படிப்பின்போது அப்பாவும் அம்மா வும் குடிமைப்பணித் தேர்வு களுக்கு முயன்று பார்க்கலாமே என வழிகாட்டினார்கள்.
உடனே தகவல்களைச் சேகரித்தேன். குடிமைப்பணித் தேர்வுகளுக் காகத் தயாராகும்போதும் தேர்வு பெற்றுப் பணியாற்றும்போதும் ஒருவர் சுயமாக முன்னேறுவது மட்டுமன்றி, சமூக மாற்றத்துக் கும் உதவ முடியும் என்பதைத் தெரிந்துகொண்டேன். தொடர்ந்து படிப்பதில் எனக்கு ஆர்வம் இருந்ததால் இதைத் தேர்வுசெய் தேன்.
அப்பா முருகதாஸ் பட்டப் படிப்பு முடித்துவிட்டுத் தொழில் செய்து வருகிறார். அம்மா நாகராணி கல்லூரியில் பேராசிரியர். திருமணத்துக்குப் பிறகுதான் அம்மா முனைவர் பட்டம் பெற்றார். என் தம்பி மருத்துவம் படிக்கிறார். எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் தரும் குடும்பத்தில் இருந்து வந்ததாலும் அவர்களின் ஆதரவும் ஊக்கமும் இருந்த தாலும் தேர்வில் வெற்றி பெற, இடைவிடாமல் முயன்றேன்” என்கிறார் ராஜேஷ்வரி.
சரியான திட்டமிடல்
2019ஆம் ஆண்டு முதல் யுபிஎஸ்சி தேர்வுக்காகத் தயாராகிவந்தவர், 2024இல் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றுத் துணை ஆட்சியர் ஆனார். அதைத் தொடர்ந்து சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் படிக்கத் தொடங்கியவர், 2025இல் நடை பெற்ற குடிமைப்பணித் தேர்வுகளுக்கான தேர்வில் வெற்றி கண்டுள்ளார்.
நான்கு முறை தேல்வியைத் தழுவி ஐந்தாவது முயற்சியில்தான் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் ராஜேஷ்வரி. முதல் நான்கு முறை தவறவிட்டதை ஐந்தாவது முயற்சியில் பிடித்ததற்கான முக்கியக் காரணத்தை விளக்கினார்.
“முதல் நான்கு முயற்சியிலும் முதல்நிலைத் தேர்வில்கூட வெற்றி பெறவில்லை. யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற என்னதான் தேவை என்பது குறித்து நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தேன்.
முந்தைய ஆண்டுகளின் தேர்வு வினாத்தாள்களை எழுதிப் பார்ப்பது, அதிலிருந்து தேவையான விஷயங்களை எடுத்துக்கொண்டு நான் பின்தங்கியிருந்த பகுதிகளைப் படித்துத் தெளிவாவது எனத் திட்ட மிட்டுப் படிக்கத் தொடங்கினேன். இதுபோன்று மாற்றங்களை மேற்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினேன்.
தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்திலும், அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்திலும் வழிகாட்டியது தேர்வில் வெற்றிபெற பெரும் உதவி யாக இருந்தது. தோல்வியைச் சந்திக்கும்போது நம் உழைப்பைப் பற்றிச் சந்தேகம் ஏற்படலாம்.
சரியாகத் தான் பயணிக்கிறோமா என்கிற கேள்வியும் எழலாம். இது போன்ற எண்ணம் இயல்பானதுதான் என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிறிய இடை வேளைக்குப் பிறகு, மீண்டும் முயன்றுபார்க்கத் தொடங்கவேண்டும். பலவீன மாக உணரும்போது அது அப்படியே நம்மிடம் தங்கிவிட அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்” என்றார்.
கவனச்சிதறலைக் கையாளுதல்
சமூக வலைத்தளத்தில் இருந் தாலும் கட்டுக்கோப்பாகப் பயன் படுத்த வேண்டும் என்கிறார் ராஜேஷ்வரி. “சமூக வலைத்தளக் கணக்குகள் ஒருபோதும் என் நேரத்தை ஆட்கொள்ள நான் அனுமதித்தது இல்லை. நேர்காணலுக்குத் தேர்வான மாணவர் களுக்கு என வாட்ஸ்-அப் குழு இயங்குகிறது.
அதில் தேர்வு தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்வது உதவியாக இருந்தது. அதனால் முற்றிலுமாகச் சமூக வலைத்தளத்தை ஒதுக்கி வைக்காமல் என்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டதால், தேர்வுக்குத் தயாராகும்போது இடையூறாக இருந்ததில்லை” என்று விளக்குகிறார்.
குடிமைப்பணிகளைப் பொறுத்தவரை, எந்தத் துறையாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற இருப்பதாகச் சொல்கிறார் ராஜேஷ்வரி. எனினும் கல்வி, பெண்கள் முன்னேற்றம் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்த ஆர்வம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
“ஒரு தலைமுறையையே மாற்றும் வலிமை கல்விக்கு உண்டு. சமூக முன்னேற்றத்துக்குப் பெண்கள் முன்னேற்றம் மிக அவசியம் என்பதால், இந்த இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்துவேன்” என்கிறார் உறுதியுடன்.
வெற்றிச் சூத்திரங்கள் மூன்று
யுபிஎஸ்சி தேர்வில் இரண்டாம் இடம் பிடித்த ராஜேஷ்வரி சுவி முன்வைக்கும் வெற்றிச் சூத்திரங்கள்:
1. யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் ஒருவர் முதலில் தன்மீது நம் பிக்கை கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையோடு தயாராக வேண்டும். அதேபோன்று கவனச் சிதறலைக்கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம்.
2. முதல்நிலைத் தேர்வானாலும் முதன்மைத் தேர்வானாலும் முந்தைய ஆண்டுகளின் தேர்வு வினாத் தாள் களை எழுதிப் பார்க்க வேண்டும்.
3. ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். விடா முயற்சியையும் கடின உழைப்பையும் கோரும் இத்தேர்வில் வெற்றி பெற உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம்.
- karthiga.rajendran@hindutamil.co.in