கல்வி - வேலை வழிகாட்டி

பல்துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் ‘குவான்ட்ஸ்’ வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 34

நெடுஞ்செழியன்.தா

கணிதம் என்பது வெறும் வகுப்பறை பாடமாக மட்டும் இல்லா மல், இன்று உலக பொருளா தாரத்தை இயக்கும் மறைமுக சக்தியாக மாறியுள்ளது. அந்த சக்திக்குப் பின்னால் செயல்படுவது 'கம்ப்யூட்டேஷ னல் ஃபைனான்ஸ்' துறை.

வங்கி முதல் விவசாயம் வரை, பங்குச் சந்தை முதல் விளையாட்டு உலகம் வரை தரவு, கணிதம், கணினி அறிவியல் ஆகியவற்றை இணைத்து முடிவுகளை எடுக்க இந்தத் துறை உதவுகிறது.

உலகம் முழுவதும் ‘குவான்ட்ஸ்’ (Quants) எனப்படும் நிபுணர்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், பல துறைகளின் மையமாக கம்ப்யூட்டேஷனல் ஃபைனான்ஸ் உருவெடுத்துள்ளது.

வங்கி - நிதி சேவைகள்

ஒருவருக்கு கடன் வழங்குவதற்கு முன், அந்த நபர் பணத்தை சரியாக திருப்பிச் செலுத்துவாரா என்பதை வங்கிகள் ‘கிரெடிட் ஸ்கோரிங்’ முறையின் மூலம் கணிக்கின்றன.

வங்கிகளில் நடைபெறும் மோசடிகளை கண்டறிதல், வரவு-செலவு சமநிலையை பராமரித்தல், ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றுதல் போன்ற முக்கிய பணிகளில் கம்ப்யூட்டேஷனல் ஃபைனான்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.

பங்குச் சந்தை & வர்த்தகம்

தேசிய பங்குச் சந்தை (NSE) பம்பாய் பங்குச் சந்தைகளில் (BSE) பங்குகள், முதலீட்டு ஒப்பந் தங்களின் விலையை கணிக்கவும், ஆபத்து களை மதிப்பிடவும் கணித அடிப்படையிலான சிறப்பு கணக்கீட்டு முறைகள் பயன்படுத்தப் படுகின்றன.

காப்பீடு

ஒரு நபரின் வயது, உடல்நிலை, அவருக்கு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு போன்ற தகவல் களை ஆய்வு செய்து காப்பீட்டு தொகை, மாத தவணையை நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இயற்கை பேரிடர்கள், மருத்துவச் செலவுகள் போன்ற ஆபத்துகளை முன்கூட்டியே கணிக்கவும் கணித அடிப்படையிலான கணக்கீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

சுகாதாரம் - மருத்துவம்

புதிய மருந்துகளை உருவாக்க எவ்வளவு செலவாகும், மருத்துவச் செலவுகள் எவ்வாறு அதிகரிக்கும், மருந்து களின் விலையை எப்படி நிர்ணயிக்கலாம் என்பதைக் கணிக்க இந்தத் துறை உதவுகிறது. கரோனா காலத்தில் தடுப்பூசிகளின் விலை, விநியோகத் திட்டங்களை முடிவு செய்வதிலும் இந்த கணக்கீட்டு முறைகள் முக்கிய பங்கு வகித்தன.

ஆற்றல் - சுற்றுச்சூழல்

மின்சாரம், எரிபொருள், கார்பன் வெளியேற்றம் போன்றவற்றின் செலவையும் முதலீட்டு வாய்ப்பு களையும் கணிக்க இந்தத் துறை உதவுகிறது. சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதையும் கணித அடிப்படையிலான கணக்கீடுகள் தீர்மானிக்கின்றன.

ரியல் எஸ்டேட்

நிலம் அல்லது கட்டிடத்தின் சரியான சந்தை மதிப்பை கணினி அடிப்படையிலான கணக்கீட்டு முறைகள் மூலம் கணிக்க முடிகிறது. வீட்டு கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் பெறுபவரின் நம்பகத்தன்மை, ஆபத்துகளை மதிப்பிட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

விவசாயம்

விளைபொருட்களின் விலை திடீரென குறையும் போது விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க முன்கூட்டியே விலை பாதுகாப்பு திட்டங்கள் உதவுகின்றன. பயிர் காப்பீடு, விவசாயக் கடன் வழங்கல், வறட்சி அல்லது வெள்ளம் போன்ற ஆபத்துகளை கணிப்பதிலும் இந்தத் துறை பயன்படுகிறது.

அரசு - பொது சேவை

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மாற்றுவது, பங்குச் சந்தையை கண் காணிப்பது, அரசின் வரவு செலவு திட்டங்களை திட்டமிடுவது போன்ற பணிகளில் கணித அடிப்படையிலான கணக்கீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. வரி வருவாய் எவ்வளவு வரும், அரசு நிதியை எப்படி நிர்வகிக்கலாம் என்பதையும் இந்தத் துறை கணிக்க உதவுகிறது.

தொழில்நுட்பம்

போன்பே, பேடிஎம் போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை மதிப்பிடவும் ஆன்லைன் மோசடிகளை கண்டறியவும் இந்தத் துறையை பயன் படுத்துகின்றன. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஃபின் டெக் துறையின் முக்கிய அடித்தளமாக கம்ப்யூட்டேஷனல் ஃபைனான்ஸ் உள்ளது.

விளையாட்டு - பொழுதுபோக்கு

ஐபிஎல் போன்ற போட்டிகளில் வீரர்களின் மதிப்பை கணிக்கவும், அணிகளின் வெற்றி வாய்ப்புகளை மதிப்பிடவும் தரவு, கணித மாதிரிகள் பயன்படுத்தப் படுகின்றன. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற நிறுவனங்களும் எந்த திரைப்படம் அல்லது தொடரில் முதலீடு செய்யலாம் என்பதை தரவுகள் அடிப்படையில் முடிவு செய்கின்றன.

கப்பல் போக்குவரத்து

கப்பல் சரக்கு கட்டணம், வெளிநாட்டு நாணய மாற்று விகிதம், கடல் காப்பீடு போன்றவற்றில் கணினி அடிப்படையிலான கணக்கீட்டு முறைகள் பயன்படுகின்றன. ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் நாணய மதிப்பு மாற்றத்தால் ஏற்படும் இழப்பு களை குறைக்க இந்தத் துறையின் உதவியை பெறுகின்றன.

கல்வி - சமூக நிதி

மாணவர்களுக்கு கல்விக் கடன், உதவித்தொகை வழங்கும் திட்டங்களை சிறப்பாக நிர்வகிக்க இந்தத் துறை உதவுகிறது. எந்த மாணவர்களுக்கு நிதி உதவி அதிகம் தேவைப்படுகிறது, கல்வி செலவுகள் எவ்வாறு அதிகரிக்கின்றன, வேலைவாய்ப்பு வாய்ப்புகள் எப்படி மாறுகின்றன என்பதையும் தரவுகள் அடிப்படையில் கணிக்க முடிகிறது. கிராமப்புற மக்களுக்கு சிறு கடன்கள் வழங்கும் நிறுவனங்களும் நிதி ஆபத்துகளை மதிப்பிட இந்தக் கணக்கீட்டு முறைகளை பயன்படுத்துகின்றன.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் குவான்டிடேட்டிவ் அனலிஸ்ட், அல்காரதமிக் டிரேடர், ரிஸ்க் மேனேஜர் போன்ற பணி களுக்கு உயர்ந்த ஊதியமும் உலகளாவிய வாய்ப்புகளும் இருக்கின்றன. இதனால் கணிதம் - தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள மாணவர்கள் கம்ப்யூட்டேஷனல் ஃபைனான்ஸ் துறையை தவறவிடாதீர்கள்!

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org

SCROLL FOR NEXT