மதுரையில் நான் பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்துவருகிறேன். அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் வேலை செய்ய வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? - காந்திமதி, திருநெல்வேலி.
வெளிநாடுகளில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் செவிலியர் தேவை உள்ளது. அங்கு பணிபுரிய வெறும் நர்சிங் படிப்பில் பட்டம் பெற்றிருந்தால் மட்டும் போதாது. அதற்கான தகுதித் தேர்வு, ஆங்கில மொழி தகுதித் தேர்வுகளில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களை நீங்கள் பெற்றிருக்க வேண்டும்.
அமெரிக்காவில் பணிபுரிய நீங்கள் ‘CGFNS’ எனப்படும் ‘The Commission on Graduates of Foreign Nursing Schools’ தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வு ‘TruMerit' என்றும் அழைக்கப்படு கிறது. இந்த அமைப்பு 1977இல் தொடங்கப்பட்டது.
அமெரிக்காவில் அதிக அளவில் துணை மருத்துவம் பயின்றவர்கள், அதிலும் குறிப்பாகச் செவிலியர்களின் தேவை இருந்த தால், வெளிநாடுகளில் நர்சிங் பயின்றவர்களை இத்தகுதித் தேர்வுக்கு உட்படுத்தி அந்நாட்டில் பணிபுரிய அனுமதிக்கப்பட்டது. கொள்குறி வகையில் அமைந்துள்ள இத்தேர்வு 3 மணி நேரம் கணினி அடிப்படையில் நடத்தப்படும்.
வெளிநாட்டில் நர்சிங் பயின்ற மாணவ மாணவிகளின் செவிலியர் திறனில் உள்ள ஆழ்ந்த அறிவு அமெரிக் காவில் பணிபுரிவதற்குப் போதுமான அளவில் உள்ளதா என்பதை அறிவதே இத்தேர்வின் அடிப்படை நோக்கம். அமெரிக்காவில் பணியாற்று வதற்கான உரிமம் பெறத் தேவைப் படும் அளவில் அந்த நபரின் திறன் இருக்கிறதா என்பதைச் சோதிக் கவும், குழந்தைகள், பெரியவர், கர்ப்பமடைந்தவர்கள், உளவியல், மன ஆரோக்கியம், சமூக நலம் ஆகியபாடப்பிரிவுகளில் சோதிக்கும் வகை யில் இத்தேர்வு அமைந்திருக்கும்.
ஆண்டுதோறும் 3 அல்லது 4 முறை இத்தேர்வு உலகம் முழுவதும் உள்ள சுமார் 50 நகரங்களில் நடத்தப்படும். அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களும் இத்தேர்வை (CGFNS) செவிலியர் பணிக்கான தகுதியாகக் கோருவதில்லை. மூன்றில் இரண்டு பங்கு மாகாணங்கள் இத னைத் தகுதியாக கொண்டுள்ளன. இத்தேர்வுடன் உங்களின் ஆங்கில அறிவுக்கான தேர்வுகளாக TOEFL / IELTS (Test of English as Foreign Language / International English Language Testing System) தேர்வுகளில் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை TOEFL தேர்வு மதிப்பெண்கள் போதும். TOEFL தேர்வில் குறைந்தபட்சம் 83/84 மதிப்பெண் பெற்றி ருக்க வேண்டும். இங்கிலாந்து அல்லது இதர ஆங்கிலம் பேசும் நாடுகள் குறிப்பாக கனடா, நியூசி லாந்து, ஆஸ்திரேலியாவில் IELTS தேவை. இத்தேர்வில் குறைந்த பட்சம் 6.5 புள்ளிகள் தேவை.
நர்சிங் உரிமம் பெற... இத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற தற்குப் பிறகு அமெரிக்க நர்சிங் உரிமம் பெற நீங்கள் ‘NCLEX-RN’ (National Council Licensure examination for Registered Nurses) தேர்வைத் தனியே எழுத வேண்டும். இத்தேர்வு NCSBN (National Council of State Border of Nursing) அமைப்பால் நடத்தப்படுகிறது. இரண்டு தேர்வு களுமே செவிலியர்களாகப் பணிபுரிய உதவும் என்கிறபோதும் இந்தப் பணிகளில் சிறிய வேறுபாடு உள்ளது.
ஜெர்மனியில் நர்சாகப் பணிபுரிய உங்களின் பட்டப்படிப்பு, B-2 லெவல் ஜெர்மன் மொழியில் தேர்ச்சி அவசியம். உங்களின் கல்வித் தகுதி ஜெர்மனியில் பணியாற்றுவதற்காகத் தேவைப்படும் கல்வித் தகுதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். தேவை இருப்பின் தகுதித் தேர்வு எழுத வேண்டும். குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டு கால வேலை அனுபவம் கட்டாயம் தேவை.
இவை தவிர ஆங்கிலம் பேசும் நாடுகளில் பணிபுரிய ‘OET’ எனப்படும் ‘Occupational English Test’ தேர்வு மருத்துவத் துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்காக மட்டும் நடத்தப் படுகிறது. எனவே, உங்களின் தகுதித் திறனை மேற்கூறிய தேர்வுகளின் வழி மேம்படுத்தி வெளிநாட்டில் நல்லதோர் பணி வாய்ப்பைப் பெற நன்கு உழைக்க வேண்டும்.