அக்டோபர் 21ஆம் தேதி வெளியான ‘வெற்றி உங்கள் கையில்’ பகுதியின் தொடர்ச்சியாக மேலும் சில முக்கிய MOOC (Massive Open Online Course) தளங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
NPTEL (National Programme on Technology Enhanced Learning):
இந்தியாவின் முக்கியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களான ஐஐடி பாம்பே, டெல்லி, கான்பூர், கரக்பூர், குவாஹாட்டி, சென்னை, ரூர்க்கி, இந்திய அறிவியல் கழகம் (IISc) பெங்களூரு ஆகியவை இணைந்து இந்தத் தளத்தை உருவாக்கியுள்ளன.
இதில் பொறியியல், சமூக அறிவியல், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன.
தற்போது, சுயமாகக் கற்றுக்கொள்வதற்காக 3,200க்கும் மேற்பட்ட தனித்துவமான பாடப்பிரிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், 70,000 மணி நேரத்துக்கும் அதிகமான காணொளிப் பாடங்கள் உள்ளன.
SWAYAM (Study Webs of Active-learning for Young Aspiring Minds):
மத்திய கல்வி அமைச்சகத்தின் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையத்தளம், பள்ளிக் கல்வி முதல் முதுகலைப் படிப்புவரை பல்வேறு நிலைகளில் இணையவழிப் படிப்புகளை வழங்குகிறது.
9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள், இளநிலை, முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இதில் பயன்பெறலாம்.
யுஜிசி, என்சிஇஆர்டி, இக்னோ (IGNOU), ஐஐஎம் பெங்களூரு, என்ஐஓஎஸ் (NIOS), என்ஐபிடிஇஎல் உள்ளிட்ட தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் பல்வேறு துறைகளுக்கான படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இவற்றில் பெரும்பாலான படிப்புகளைக் கட்டணமில்லாமல் கற்கலாம். சான்றிதழ் பெற விரும்புவோர், சம்பந்தப்பட்ட படிப்புக்கான இறுதித் தேர்வில் பங்கேற்க வேண்டும். இதற்கான தேர்வுக் கட்டணம் படிப்புக்கு ஏற்ப மாறுபடும்.
UDACITY:
தொழில்நுட்பத் துறையில் திறன்களை வளர்த்துக் கொள்ள விரும்புவோருக்கு இந்தத் தளம் பயனுள்ளதாக இருக்கும். கோடிங், தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), சைபர் பாதுகாப்பு, கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு நிலைகளிலான படிப்புகளை வழங்குகிறது. செய்முறைப் பயிற்சிகள், செயல்திட்டங்கள் மூலம் மாணவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளலாம்.
FUTURELEARN:
உலகம் முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் தளம் செயல்படுகிறது.
வணிகம், மேலாண்மை, சுகாதாரம், தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், உளவியல், சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறுகிய காலப் படிப்புகளை வழங்குகிறது.
1,400க்கும் மேற்பட்ட குறுகிய காலப் படிப்புகளைக் கட்டணமில்லாமல் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது. முழுமையான பாட உள்ளடக்கம், சான்றிதழ் உள்ளிட்ட கூடுதல் வசதிகளைப் பெற முறை யான கட்டணத் திட்டங்களையும் தேர்வு செய்யலாம்.
edX:
இது அமெரிக்காவின் ஹார்வர்டு, மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர்களால் 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இணையவழிக் கல்வித் தளமாகும். கணினி அறிவியல், பொறியியல், வணிகம், மேலாண்மை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படிப்புகளை வழங்குகிறது.
இதில் பல படிப்பு களைக் கட்டணமில்லாமல் கற்கலாம். ஆனால், சான்றிதழ் பெறவும் மதிப்பீட்டுத் தேர்வுகள் உள்ளிட்ட கூடுதல் வசதிகளைப் பயன்படுத்தவும் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், பல்கலைக்கழகங்கள் மூலம் வழங்கப்படும் இளநிலை, முதுகலைப் பட்டப் படிப்புகளையும் தேர்வுசெய்யலாம்.
COURSERA:
குறுகிய காலப் படிப்புகள், சிறப்புப் படிப்புகள், தொழில்முறைச் சான்றிதழ்கள் மட்டுமன்றி இளநிலை, முதுகலைப் பட்டப் படிப்புகளும் இந்தத் தளத்தில் வழங்கப்படுகின்றன. இதில் சில படிப்புகளுக்குக் கட்டணம் செலுத்தாமலும் முழுமையான பாட உள்ளடக்கம், மதிப்பீட்டுத் தேர்வுகள், சான்றிதழ்களைப் பெறுவதற்குக் கட்டணம் செலுத்தியும் படிக்கலாம்.
SWAYAM Plus:
மத்திய கல்வி அமைச்சகத்தின் முன்னெடுப்பில், ஐஐடி மெட்ராஸ் செயல்படுத்தும் இந்தத் தளம், முன்னணித் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களை வளர்க்கும் படிப்புகளை வழங்குகிறது.
தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, உற்பத்தித் துறை, மேலாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்தப் படிப்புகள் 12 இந்திய மொழிகளில் கிடைக்கின்றன. குறிப்பிட்ட சில படிப்புகள் தேசியக் கடன் கட்டமைப்பின் (National Credit Framework – NCrF) கீழ் கல்விக் கடன் பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ளன.