என் மகள் பதினோராம் வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்துள்ளார். அவரை அறிவியலாளராக ஆக்க வேண்டும். அதற்கு என்ன படிக்க வேண்டும்? நம் நாட்டிலுள்ள பெரிய ஆராய்ச்சி நிறுவனங்கள் பற்றித் தெரிவிக்கவும். - சென்றாயன், தேன்கனிக்கோட்டை.
மகளைப் பெரிய அறிவியலாளர் ஆக்கிப் பார்க்க வேண்டு மென்கிற உங்கள் ஆசையை வரவேற்கிறேன். அறிவியலாளர் ஆவதற்கு எனத் தனியே படிக்க வேண்டுமென்பதில்லை.
பொறியியல், மருத்துவம், கால்நடை, உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய படிப்புகளில் ஒன்றில் முதுகலை பயின்று அதன் பின்னர் விருப்பத்துக்கு ஏற்ப ஆராய்ச்சிப் படிப்பினை நாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.எஸ்.இ.ஆர்., ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., பல்கலைக் கழகங்கள், சிறப்புக் கல்வி நிறுவனங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றில் பயின்று முதன்மை ஆராய்ச்சி நிலையங்களில் பணி வாய்ப்பு பெற்று ஆராய்ச்சிப் பணியைத் தொடரலாம்.
உங்களுக்காக நாட்டின் முக்கிய ஆராய்ச்சிக் கல்வி நிறுவனங்கள், அதன் கீழ் செயல்படும் ஆராய்ச்சித் துறைகள் பற்றிய சிறிய அறிமுகப் படலம் (முழுமையான தொகுப்பு அல்ல): முக்கியத் துறைகளாக சி.எஸ்.ஐ.ஆர், ஐ.சி.எம்.ஆர், டி.எஸ்.ட்டி, ஐ.சி.ஏ.ஆர், டி.ஏ.இ, ஐ.எஸ்.ஆர், ஸ்பேஸ் சயின்ஸ் ஆகியவை உள்ளன.
வேளாண்மைத் துறையின் கீழ் சுமார் 66 நிலையங்களும், உயிரியல்சார் மருத்துவ அறிவியல் துறையில் 60 நிலையங்களும், வேதியியல் அறிவியல் துறையின் கீழ் 9 நிலையங் களும், இயற்பியல் - கணித அறிவியல் துறையின் கீழ் 16 நிலையங்களும், புவி அறிவியல் துறையின் கீழ் 16 நிலையங்களும், பொறியியல் அறிவியல் துறையின் கீழ் 23 நிலையங் களும், மெட்டீரியல் சயின்ஸ், மெட்டலர்ஜி துறையின் கீழ் 9 நிலையங்களும், மல்ட்டி டிசிப்ளினரி துறையின் கீழ் 17 நிலையங்களும் செயல்படுகின்றன.
துறை வாரியாக சில முக்கிய ஆராய்ச்சி நிலையங்கள்:
சி.எஸ்.ஐ.ஆர் (அறிவியல்) - புணேவில் நேஷனல் கெமிக்கல் லேபரட்டரி, பெங்களூருவில் நேஷனல் ஏரோஸ்பேஸ் சென்டர், ஹைதராபாத்தில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி, புது டெல்லியில் நேஷனல் பிசிக்கல் லேபரட்டரி (மெட்டியரோலஜி), நாக்பூர் நீரியில் நேஷனல் என்விரான்மென்டல் இன்ஜினீயரிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், லக்னோவில் சென்ட்ரல் டிரக் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்.
ஐ.சி.எம்.ஆர் (மருத்துவம்) - ஹைதராபாத்தில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியுட்ரிஷன், சென்னையில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எப்பிடமாலஜி, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டியூபர்குளோசிஸ், அகமதாபாத்தில் நேஷனல் இன்ஸ்டி டியூட் ஆஃப் ஆக்குபேஷனல் ஹெல்த், புதுச்சேரியில் வெக்டர் கண்ட்ரோல் இன்ஸ்டிடியூட்.
டி.ஏ.இ (அணுசக்தி) - மும்பையில் பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டர், கல்பாக்கத்தில் இந்திரா காந்தி சென்டர் ஃபார் அட்டாமிக் ரிசர்ச், இந்தூரில் ராஜா ராமண்ணா சென்டர் ஃபார் அட்வான்ஸ்டு டெக்னாலஜி.
டி.எஸ்.ட்டி (அறிவியல் தொழில்நுட்பம்) - உத்தராகண்ட் நைனிடாலில் ஆர்யபட்டா ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் அப்சர்வேஷனல் சயின்ஸ் (அஸ்டிரானமி), பெங்களூருவில் நேஷனல் பிரயின் ரிசர்ச் சென்டர், மும்பையில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆஸ்ட்ரோ பிசிக்ஸ், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச், காரைக்குடியில் சென்டரல் எலக்ட்ரோகெமிகல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - சி.இ.சி.ஆர்.ஐ.
விண்வெளி ஆராய்ச்சி - அகமதாபாத்தில் பிசிக்கல் ரிசர்ச் லேபரட்டரி, பெங்களூருவில் யு.ஆர்.ராவ் சாட்டிலைட் சென்டர் திருவனந்தபுரத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், இந்தியன் இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்சஸ்.
ஐ.சி.ஏ.ஆர் (வேளாண்மை) - கட்டக்கில் சென்ட்ரல் ரைஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், கோவையில் சென்ட்ரல் சுகர்கேன் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், சிம்லாவில் சென்ட்ரல் உருளைக்கிழங்கு ரிசர்ச் இன்ஸ்டிடியூட், ராஜமுந்திரியில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ரிசர்ச் ஆன் கமர்சியல் அக்ரிகல்சர், கான்பூரில் நேஷனல் சுகர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், ஹரியாணா கர்னாலில் டயரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட், சென்னையில் சென்ட்ரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், மைசூருவில் ஃபுட் டெக்னலாஜிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்.