‘யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டும்’ என்று சொல்கிற அனுபவப் பகிர்தலைப் போலவே, அதிகாரியாகப் பணியாற்றிய கணங்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. அத்தேர்வு குறித்துச் சிறிதும் அறியாதவர்களையும்கூட அதன் பக்கம் ஈர்க்கிற வல்லமை அவற்றுக்கு உண்டு என உணர்த்துகிறது க.நந்தகுமார் ஐ.ஏ.எஸ்.ஸின் ‘அதற்குத் தக’ நூல்.
தற்போது இவர் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளராகப் பணியாற்றுகிறார். விஷ்ணுபுரம் சரவணன், க.துளசிதாசன் தொகுத்த இந்த நூலை எஸ்ஆர்வி தமிழ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நந்தகுமாரின் தந்தை லாரி ஓட்டுநர். நாடு முழுவதும் பயணித்த அனுபவம் உள்ளவர். வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்கிற பொறுப்பை தாய் ஏற்றுக்கொண்டார்.
சக மனிதர்கள் மீதான பார்வை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தன் பெற்றோர்களிடம் இருந்தே இவர் பெற்றிருக்கிறார். படிப்பில் முதல் மாணவராக இருப்பவரே ஐஏஎஸ் விருப்பத்தை நோக்கி நகர முடியும் என்பதை உடைத்தெறிகிறது இவரது வாழ்க்கை. அரசுப் பள்ளியில் சராசரிக்கும் மேலான மதிப்பெண் பெறுகிற மாணவராக இருந்த நந்தகுமார், எந்தவித நாட்டமும் இல்லாமல் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்.
ஆனால், அதற்கு முன்பும் பின்பும் நல்ல நண்பர்கள் சிலரால் இவரது வாழ்வு நல்திசைக்குத் திரும்பியிருக்கிறது. சத்தீஸ்கர் மாவட்டத்தில் பணி யாற்றும் ஐஏஎஸ் அதிகாரியான தேவா என்பவர்தான், யுபிஎஸ்சி தேர்வுகளை எப்படி அணுக வேண்டுமென்று தனக்கும் இதர நண்பர்களுக்கும் வழிகாட்டிய தாக இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் நந்தகுமார் குறிப்பிடு கிறார்.
“யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற, ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் படித்தால் போதுமானது; அதற்கிடையே உடற்பயிற்சி, தூக்கம், நடைப்பயிற்சி, பாடங் களைத் தாண்டிய புத்தக வாசிப்பு என்று சில மணித்துளிகளை ஒதுக்கினோம்” என்று சொல்கிறார் நந்தகுமார். திரும்பத் திரும்பப் படிப்பதைவிட எழுதிப் பார்ப்பதும் அவற்றைத் திருத்துவதும் கேள்விகளை உருவாக்கிப் பார்த் தலும் விவாதித்தலும் சிறப்பான பலன்களைத் தரும் என்பது இவரது அனுபவப் பாடம்.
பழைய கேள்வித்தாள்களைப் பயன்படுத்திப் படிக்க வேண்டியவற்றைத் திட்டமிட்டது, கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதுவதைவிடத் தமிழில் எழுத முடிவுசெய்தது, முதன்மைத் தேர்வுகளில் தமிழ், புவியியல் இரண்டையும் தேர்ந்தெடுத்தது, அவற்றைத் தமிழில் எழுதியது எனப் பலவற்றைக் குறிப்பிடும் இவர், நேர்காணலை ஆங்கி லத்தில் எதிர்கொள்வது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். அதற்கான காரணத்தையும் இந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
‘ஐஏஎஸ் ஆவது முக்கியமல்ல, ஆனபிறகு என்ன செய்கிறீர்கள் என்பதே முக்கியம்’ என்பதே ‘அதற்குத் தக’வின் மையம். அதற்கேற்ப, கோவை மாவட்ட சார் ஆட்சியராக இருந்தபோது, ஆட்சியராக இருந்த பழனிக்குமார் வழி காட்டுதலில் பணியாற்றியது இவரது சிறப்பான செயல்பாடு களுக்கு அடித்தளம் அமைத்தி ருக்கிறது.
ராமநாதபுரம் ஆட்சியராக இருந்தபோது, சாயல்குடி அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவரை வாடகைக்குப் பணியமர்த்தியது, மாதிரி அரசுப் பள்ளிகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது, சாதியப் பதற்றத்தைத் தவிர்க்கப் புத்தகக் கண்காட்சியை நடத்தியது எனப் பல அனுபவங்களை இதில் சொல்லியிருக்கிறார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாநிலத் திட்ட இயக்குநர் - அரசுப் பணியாளர் தேர்வாணையச் செயலாளர் பணிகளைப் பற்றிய நந்தகுமாரின் விவரிப்புகள், ஒரு புனைவு நூல் அல்லது திரைப்படம் தருகிற காட்சியனுபவத்திற்கு அப்பாற் பட்டவையாக இருக்கின்றன.
‘அதற்குத் தக’
க.நந்தகுமார் I.A.S.
வெளியீடு: எஸ்.ஆர்.வி
தமிழ்ப் பதிப்பகம்
விலை: ரூ. 130
தொடர்புக்கு: 044 24332924