ஆஸ்திரேலியாவின் காடுகளில் குதித்துத் திரியும் கங்காருகள், வட துருவத்தின் பனிப்பரப்பில் வேட்டையாடும் துருவக் கரடிகள், அமேசான் காடுகளின் மர உச்சிகளில் சுதந்திரமாக வாழும் குரங்குகள் என ஒவ்வோர் உயிரினமும் பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஏன் வாழ்கிறது? சஹாரா பாலைவனத்தில் ஏன் அமேசானின் பல்லுயிர் வளம் இல்லை? இமயமலையின் உயரமான மலை உச்சிகளில் மட்டும் எப்படிச் சிலவகை தாவரங்களால் வாழ முடிகிறது?
இந்த எளிமையான கேள்விகளின் பின்னால் பூமியின் கோடிக்கணக்கான ஆண்டுகால வரலாறு, கண்டங்களின் நகர்வு, காலநிலை மாற்றம், பரிணாம வளர்ச்சி, உயிரினங்களின் போராட்டம் ஆகியவை பின்னிப் பிணைந்துள்ளன. இந்த மர்மங் களை விடுவிக்கும் அறிவியல் துறைதான் ‘பயோஜியோகிரபி' (Biogeography) அல்லது ‘உயிரினப் புவியியல்'.
இது வெறும் உயிரியல் (Biology) அல்ல, வெறும் புவியியல் (Geography) அல்ல, இரண்டின் அற்புதமான சங்கமம். காலநிலை மாற்றம் (Climate Change) சூழலியல் நெருக்கடிகள் மிகுந்த இந்தக் காலக்கட்டத்தில், உலக நாடுகள் அனைத்தும் கூர்ந்து கவனிக் கும் மிக முக்கியமான அறிவியல் துறையாக இது உருவெடுத்துள்ளது.
பயோஜியோகிரபி என்றால் என்ன? - பயோஜியோகிரபி என்பது தாவரங்கள், விலங்குகள், பிற உயிரினங் கள் பூகோளரீதியாக எங்கு, எப்படி, ஏன் பரவியுள்ளன என்பதை ஆராயும் அறிவியல். இது உயிரினங்களின் பரவலை இடரீதியாகவும் காலரீதி யாகவும் ஆழமாக ஆய்வு செய்கிறது.
வரலாற்று உயிரினப் புவியியல் - (Historical Biogeography): கண்டங்கள் நகர்ந்து பிரிந்தபோது உயிரினங்கள் தனித்தனியாகப் பரிணாமம் அடைந்தன. 20 கோடி ஆண்டுகளுக்கு முன் எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்திருந்த ‘பாஞ்சியா' (Pangaea) காலத்தில் டைனசோர்கள் எல்லா இடங்களிலும் வாழ முடிந்தது. தென் அமெரிக்கா, ஆப்ரிக்காவில் ஒரே மாதிரி புதைபடிவங்கள் (Fossils) கிடைப்பது இதற்குச் சான்று.
தீவு உயிரினப் புவியியல் (IslandBiogeography): மடகாஸ்கர், கலபகஸ் போன்ற தனித்தீவுகளில் பரிணாம வளர்ச்சி தனித்துவமாக நடக்கிறது. டார்வினின் பரிணாமக் கோட்பாட்டைத் தூண்டியது இதுதான். இன்று துண்டாடப்பட்ட காடுகளில் உயிரினங்கள் எப்படி வாழும் என்பதைப் புரிந்துகொள்ள இது அவசியம்.
பைலோஜியோகிரபி (Phylogeography): மரபணு மூலம் உயிரினங்களின் மூதாதையர் எந்தப் பாதையில் பய ணித்தார்கள் என்பதைக் கண்டறியும் நவீனத் தொழில்நுட்பம். மனித இன இடப்பெயர்வு முதல் கரோனா பரவல்வரை இது ஆராய்கிறது. இந்தியப் புலிகளின் மரபணு ஆய்வு மூலம் அவற்றைப் பாதுகாக்கத் திட்டமிடலாம்.
ஏன் இன்று இது மிக முக்கியம்? - பூமி வெப்பமடைவதால், உயிரி னங்கள் குளிர்ந்த பகுதிகளைத் தேடித் துருவங்களை நோக்கி நகர்கின்றன. உதாரணமாக, இமயமலையில் வாழும் சில தாவரங்கள் இப்போது அதிக உயரத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது விவசாயத்தையும், மனித வாழ்க்கை முறையையும் எப்படிப் பாதிக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க ‘Biogeographers' தேவைப்படுகிறார்கள்.
உயிர்ப்பன்மைப் பாதுகாப்பு: அழிந்துவரும் உயிரினங்களைக் காக்க, அவை இயற்கையாக வாழும் சூழலைத் துல்லியமாக அறிய இது உதவுகிறது. ஐக்கிய நாடுகள் அவை, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) ஆகியவை பயோஜியோகிரபி நிபுணர்களின் ஆலோசனையையே நாடுகின்றன.
எடுத்துக்காட்டாக, ஓர் அரிய வகைத்தாவரம் அழியும் நிலையில் இருந்தால், அதே போன்ற தட்பவெப்ப நிலை கொண்ட வேறோர் இடத்தில் அதை வளர்த்துப் பாதுகாக்க முடியுமா என இந்த அறிவியல் துறை ஆராய்கிறது.
நோய்ப் பரவல் தடுப்பு: ஒரு குறிப்பிட்ட புவியியல் அமைப் பில் வாழும் பூச்சிகள் அல்லது வௌவால்கள் போன்ற உயிரினங்கள் மூலம் பரவும் நோய்களை (Zoonotic diseases) கட்டுப்படுத்த இந்த அறிவியல் அவசியம். ஸிகா வைரஸ் (Zika), நிபா, கரோனா போன்ற நோய்களைப் பரப்பும் உயிரினங்கள் (Vectors) புவியியல்ரீதியாக எப்படிப் பரவுகின்றன என்பதைக் கண்டறிந்து, நோயைத் தடுக்க இது உதவுகிறது.
ஆக்கிரமிப்பு இனங்கள்: ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்லும் அந்நியக் களைச் செடிகள் அல்லது பூச்சிகள் உள்ளூர் உயிரினங்களை எப்படி அழிக்கின்றன என்பதை ஆராய உதவுகிறது. இந்தியாவில் பரவி, வேளாண்மைக் குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வெளிநாட்டுக் களைகளைக் கட்டுப்படுத்த இது பயன்படுகிறது.
சுவாரசியமான இந்த உயிரினப் புவியியல் படிப்பை கல்வி நிறுவனங்கள் வழங்கும், இத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org