உலக அளவில் சுரங்கவியல் பொறியியல் தற்போது எத்திசையில் பயணிக்கிறது, நவீனத் தொழில்நுட்பங்கள் இத்துறையை எவ்வாறு மாற்றி வருகின்றன, இதில் இந்தியாவின் நிலை என்ன என்பதைப் பார்ப்போம்.
மாறிவரும் துறை
உலகின் முன்னணி சுரங்கவியல் பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவின் கொல ராடோ ஸ்கூல் ஆஃப் மைன்ஸ், தனது ஆராய்ச்சியைப் பூமி, ஆற்றல், சுற்றுச்சூழல், தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் அடிப் படைகள், அறிவியல் - பொறியியல் முன்னேற்றங்கள் என ஆறு முக்கியப் பிரிவுகளாக வகைப் படுத்தியுள்ளது.
இதன் மூலம், சுரங்கவியல் பொறியியல் என்பது வெறும் கனிமங்களைத் தோண்டி எடுப்பது மட்டுமல்ல என்பதையும், பல்வேறு அறிவியல் - நவீனத் தொழில் நுட்பங் களுடன் இணைந்த பரந்த துறையாக வளர்ந்துவருவதையும் அறியலாம்.
பூமியின் அடிப்பகுதியை நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் ஆய்வு செய்வது, புதிய கனிம வளங்களைக் கண்டறிவது, நீர், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, கார்பன் உமிழ்வைக் குறைப் பது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் - ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை உருவாக்குவது எனச் சுரங்கவியல் ஆராய்ச்சியின் பரப்பு விரிவடைந்துள்ளது.
அதோடு, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), தரவுப் பகுப்பாய்வு, ரோபாட் டிக்ஸ், ஜிஐஎஸ், ட்ரோன் தொழில்நுட்பம் போன்றவையும் சுரங்கவியல் துறையில் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளன. எனவே, எதிர்காலச் சுரங்கவியல் பொறி யாளர்கள் சுரங்கத் தொழில்நுட்பத் துடன் மட்டுமன்றி, கணினி, தரவு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளிலும் அறிவைப் பெற வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
புதிய எல்லைகள்
சுரங்கவியல் ஆராய்ச்சி பூமியோடு நின்றுவிடாமல் ஆழ்கடல் சுரங்கம், அண்டார்க்டிகா, விண்வெளி வளங்கள் போன்ற புதிய பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதிகளில் நிக்கல், கோபால்ட், செம்பு, மாங்கனீஸ் போன்ற கனிமங்கள் உள்ளன.
இவற்றை எடுப்பதற்கான தொழில்நுட்பங்கள் உருவாக்கப் பட்டாலும், கடல் உயிர்ச்சூழல் பாதிப்பு குறித்த கவலைகள் தொடர்கின்றன. நிலவின் தென் துருவத்தில் உள்ள பனிக்கட்டிகள் உள்ளிட்ட வளங்களை எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவது குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கொலராடோ ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் கல்லூரியில் தனி ஆராய்ச்சி மையமும் செயல்பட்டு வருகிறது.
வளர்ச்சியை நோக்கி...
இந்தியாவில் நிலக்கரி, இரும்புத் தாது, பாக்சைட் உள்ளிட்ட முக்கியக் கனிம வளங்கள் அதிக அளவில் உள்ளன. ஆனால், சுரங்கவியல் கல்வியும் ஆராய்ச்சியும் இன்னும் பெரும்பாலும் மரபார்ந்த கனிம அகழ்வு, உலோக உற்பத்தியைச் சுற்றியே உள்ளன.
அதேநேரத்தில் புதுப்பிக்கத் தக்க ஆற்றல், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட புதிய தொழில் நுட்பங்களை நோக்கி உலகம் நகர்ந்துவருவதால் லித்தியம், கோபால்ட், நிக்கல், அரிய மண்தனிமங்கள் போன்ற முக்கியக் கனிமங்களின் தேவை அதிகரித்து வருகிறது.
இவற்றைக் கண்டறிதல், மறுசுழற்சி செய்தல் போன்ற பணிகளுக்காகப் புதிய தொழில் நுட்பங்களுக்கான தேவை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும்.
இதனால், அரிய கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், விண்வெளி வளங்கள் போன்ற வளர்ந்து வரும் துறைகளுடன் சுரங்கவியல் பொறியியலை இணைக்கும் புதிய ஆராய்ச்சிகளும் படிப்புகளும் இந்தியா வில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வளங்களைக் கொண்ட நாடாக மட்டுமன்றி, அவற்றை நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் ஆராய்ந்து, பொறுப்புடன் பயன்படுத்தும் நாடாகவும் இந்தியா முன்னேற வேண்டும். அதற் கான முக்கியப் பங்கு எதிர்காலச் சுரங்க வியல் பொறியாளர்களிடம் உள்ளது.
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org