உறக்கம் என்பது வாழும் கலை என்கிறார்கள் உளவியலாளர்கள். இன்றைய தலைமுறை உறக்க மின்மைப் பிரச்சினையால் தவித்துக் கொண்டிருக்கிறது. பணிச்சூழல், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் இந்தத் தலைமுறையின் கண்களைத் தூக்கம் தழுவுவதே இல்லை.
புதிய துறை
மனிதர்களை வதைக்கும் பல பிரச்சினைகளுக்குத் தூக்கமின்மை தான் முக்கியக் காரணம். உறக்கத்தின் போது உடலில் பல வேலைகள் நடைபெறுகின்றன. தனக்குத் தேவையான வேதிப் பொருள்கள், ஹார் மோன்களை உற்பத்தி செய்து உடல் தன்னையே ஆரோக்கியமாகத் தகவமைத்துக்கொள்கிறது.
உறக்கமில்லாவிட்டால் இந்தச் செயல் பாடுகள் தடைபட்டு உடல்நலம் பாதிக்கப்படும். இந்தச் சவால்களை எதிர்கொள்ளவும், பணிச்சுமையால் தூக்கம் கலைவதற்கான அறிவியல் காரணங்களை ஆராயவுமே உறக்க மருத்துவ நிபுணர்கள் உலகெங்கும் இப்போது தேவைப்படுகிறார்கள்.
எதிர்காலத்தில் உறக்கமின்மை மிகப் பெரிய மருத்துவப் பிரச்சினையாக மாறப்போகிறது என்கிறார்கள் மருத்து வர்கள். அதனால் அத்துறை சார்ந்து படிப்பவர்களுக்கு மிகப் பெரிய தேவை உருவாகியுள்ளது.
மருத்துவ உலகிலும் கல்வித் துறையிலும் அதிகம் அறியப்படாத, அதேநேரம் சிறப்பான எதிர்காலம் கொண்ட ஒரு துறையாக ‘உறக்க மருத்துவம்’ (Sleep Medicine) உருவெடுத்துள்ளது.
என்ன படிக்கலாம்?
உறக்க மருத்துவம் சார்ந்த படிப்பை மனித மூளையின் மர்மங்களை அவிழ்க்கும் எதிர்காலப் படிப்பு எனலாம். உறக்க மருத்துவம் என்பது வெறும் மருத்துவச் சிகிச்சையோடு நின்றுவிடுவதில்லை.
உயிரியல், உளவியல், தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் கலந்த ஓர் அற்புதமான அறிவியல் பயணம் அது. ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக்கழகம், சிட்னி பல்கலைக்கழகம் போன்ற சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் இது சார்ந்த படிப்புகள் வந்துவிட்டன. இன்னும் இந்தியாவுக்குள் இந்தப் படிப்புகள் நுழையவில்லை.
உறக்க மருத்துவத் துறையில் சாதிக்க, பிரம்மாண்டமான மருத்துவப் பட்டங்கள் (எம்பிபிஎஸ் / எம்டி) மட்டுமே அவசியம் என்கிற மாயை உள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. மனித மனதையும் மூளையின் செயல் பாடுகளையும் ஆழமாகப் புரிந்து கொள்வதற்கான ஆர்வம் உள்ள எவரும் இந்தத் துறைக்குள் நுழையலாம்.
தூக்கம், மனநிலை, கனவுகள், மன அழுத்தம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள ஆழமான தொடர்பை ஆராய உளவியல் படிப்பு தொடர்பான பின்னணி பெரிதும் உதவுகிறது.
தூங்கும்போது மூளையில் ஏற்படும் மின் அதிர்வுகள், நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள நரம்பியல் (Neuro science) படித்த பட்டதாரிகளுக்கு இது மிகச்சிறந்த தளம்.
பொது சுகாதாரம், செவிலியர், சுவாசச் சிகிச்சை போன்ற மருத்துவம் சார்ந்த பிற இளங்கலைப் படிப்புகளை முடித்தவர்களுக்கும் இத்துறை புதிய கதவுகளைத் திறக்கிறது.
எங்கு படிக்கலாம்?
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத் தில் உறக்க மருத்துவம் தொடர்பான இரண்டு ஆண்டு முதுகலைப் படிப்புபகுதி நேர இணையவழிப் படிப்பாக வழங்கப்படுகிறது. உடலியல், மூளைச் செயல்பாடுகள், சமூகப் பாதிப்புகள் குறித்து இதில் ஆழமாகக் கற்பிக்கப் படுகிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தில் இணைய வழியாகவும் நேரடிப் படிப்பாகவும் இத்துறை சார்ந்து சிறப்பான பாடத் திட்டம் உள்ளது. ஐரோப்பிய தூக்க ஆராய்ச்சி அமைப்பின் (ESRS) ஆதரவுடன் ‘International Master of Advanced Studies (MAS) in Sleep Medicine’ என்கிற படிப்பை சுவிட்சர்லாந்தின் பெர்ன் பல்கலைக்கழகம் வழங்குகிறது.
இதில் உலகின் தலைசிறந்த நிபுணர்களுடன் இணைந்து பல்வேறு சர்வதேச ஆய்வகங்களில் பயிற்சி பெறும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கிறது நோய் பாதிக்கப்பட்ட ஒருவர் தூங்கும்போது அவரது மூளை அலை களைக் கண்காணிப்பது, குறட்டையின் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்களைக் கண்டறிவது என ஒவ்வொரு நாளும் இந்தப் பணியில் புதிய சவால்களும் சுவாரசியங்களும் நிறைந்திருக்கும். இதில் நிபுணத்துவம் பெறுபவர்களுக்குப் பிரகாசமான சர்வதேச வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
என்ன செய்யலாம்?
நோயாளிகள் தூங்கும்போது மூளை, உடல் செயல்பாடுகளைக் கண் காணிக்கும் ‘Polysomnography’ பரி சோதனைகளை மேற்கொள்வது ‘ஸ்லீப் டெக்னாலஜிஸ்ட்’ வேலை.
தூக்கத்துக்கும் பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கும் உள்ள தொடர்பு குறித்த புதிய மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர் ஆவதற்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
இதைத் தாண்டி, இன்று பல பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் மன நலனை மேம்படுத்த ‘ஸ்லீப் கன்சல்டன்ட்' நிபுணர்களைப் பணியமர்த்தத் தொடங்கியுள்ளன.
வழக்கமான படிப்புகளைத் தாண்டி, சமூகத்துக்கு மிகவும் தேவையான, அதே வேளை வருங்காலத்தில் பெரும் வளர்ச்சி அடையப்போகும் ஒரு புதிய பாதையைத் தேடும் இளைய தலை முறையினருக்கு, ‘உறக்க மருத்துவம்' சந்தேகத்துக்கு இடமின்றி ஒரு மாபெரும் வாய்ப்பு!
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org