கல்வி - வேலை வழிகாட்டி

சட்டம் படித்தவர்கள் தவறவிடக் கூடாத படிப்பு - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 25

நெடுஞ்செழியன்.தா

உலகின் 90% வணிகம் கடல் மூலமாகவே நடைபெறுகிறது. உணவு, உடை, பயன்படுத்தும் கருவிகள் உள்ளிட்ட பலவும் கடல் வழியாகத்தான் வருகின்றன. ஏன், எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கும் எரிபொருளும்கூடக் கடல் வழியாகத்தான் நம் வாகனங்களுக்கும் வீட்டுச் சமையல் அறைக்கும் வந்துசேர்கிறது.

தற்போதுகூட ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் போரில் மிக முக்கியமான வழித்தடமாகிய ஹார்முஸ் நீரிணையை ஈரான் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், உலகமே மிகப்பெரும் எரிபொருள் தட்டுப் பாட்டை எதிர்கொள்ளப்போகிறது.

          

நிலத்தில் நடக்கும் குற்றங்களுக்கும் வணிக நடைமுறைகளுக்கும் சட்டம் இருப்ப தைப் போலக் கடலில் நடப்பவற்றுக்கும் தனிச் சட்டம் இருக்கிறது. கடலில் பயணிக்கும் ஒவ்வொரு கப்பலும் கடலில் பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளரும் இந்தச் சட்டத்தின் கீழேதான் வருவார்கள்.

இவர்கள் அனைவரையும் பாதுகாக்கும் சட்ட அமைப்புதான் கடல் சட்டம் (Maritime Law or Admiralty Law) என்று அழைக்கப்படுகிறது. கடல் சட்டம், கடல் வணிகம், கப்பல் போக்குவரத்து, கடல் காப்பீடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல் தொழிலாளர்களின் உரிமைகள் ஆகியவற்றை நிர்வகிக்கும் ஒரு சிறப்புச் சட்டப்பிரிவு இது.

கடல் சட்டம் ஏன் முக்கியம்?

2020களில் உலகம் பல கடல் நெருக்கடிகளைச் சந்தித்தது. ரஷ்யா - உக்ரைன் போர், செங்கடல் ஹூதி தாக்குதல்கள், போக்குவரத்துத் தடைகள், தற்போது 2026இல் ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் போர். இவை ஒவ்வொன்றும் கடல் சட்டத்தின் தேவையை உணர்த்துகின்றன.

கடல்வழி வணிகம் பல்லாயிரம் கோடி மதிப்பிலானது. போர்க்காலங்களில் கப்பல்கள் பல சட்டரீதியான சிக்கல்களைச் சந்திக்கின்றன. காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டை மறுக்கும்போது மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலில் கப்பல் நிறுவ னங்கள் சிக்குகின்றன.

பல நேரம் காப்பீட்டுத் தொகையின் மதிப்பு மிகக்குறைவாக இருக்கும். இந்தச் சிக்கலைச் சட்டரீதியாகத் தீர்க்கக் கடல்சட்ட வல்லுநர்கள் அவசியம். அதேபோலச் சுற்றுச்சூழல் மீறல், மாலுமிச் சட்டங்கள் மீறல், ஆவணக் குறைபாடுகள் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படும் கப்பல்களை மீட்கவும் சிக்கல்களைத் தீர்க்கவும் கடல் சட்ட நிபுணர்கள் தேவைப் படுகிறார்கள். வணிகத்தைக் குறிவைத்து உலகம் முழுதும் பிரச்சினைகளும் போர்களும் ஏற்படத் தொடங்கியுள்ள சூழலில் கடல் சட்ட நிபுணர்களின் தேவை அதிகரித் துள்ளது.

என்னென்ன படிக்கலாம்?

LLM (Master of Maritime Law) என்பது கடல் சட்டத்தை முழுமையாகக் கற்பிக்கும் ஓர் உயர்கல்விப் படிப்பு. கடல் வழியாகச் சரக்குப் போக்குவரத்து (Carriage of Goods by Sea), சரக்கு உரிமை ஆவணம் (Bill of Lading), கப்பல் வாடகை ஒப்பந்தம் (Charter Party), கடல் காப்பீட்டுச் சட்டம் (Marine Insurance Law), கப்பல் நிதி & பதிவு (Ship Finance & Registration), மோதல் விபத்து மற்றும் மீட்புச் சட்டம் (Collision & Salvage Law), சுற்றுச்சூழல் கடல் சட்டம் (Environmental Maritime Law), கடல் தொழிலாளர் சட்டம் (Maritime Labour Law), சர்வதேச வர்த்தகச் சட்டம் (International Trade Law), கடற்கொள்ளை பாதுகாப்புச் சட்டம் (Piracy & Security Law), கடல்சார் ஆற்றல் சட்டத்தைப் (Offshore Energy Law) போன்று இந்தப் படிப்பில் சில பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

சிறந்த பல்கலைக்கழகங்கள்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் க்வா ஜியோக் சூ பட்ட மேற்படிப்பு உதவித்தொகை, தாஹிர் அறக்கட்டளை பட்ட மேற்படிப்பு உதவித்தொகை, பேராசிரியர் பட்ட மேற்படிப்பு உதவித் தொகை, காமன்வெல்த் உதவித்தொகை, ‘NUS ASEAN’ ஆராய்ச்சி உதவித்தொகை போன்ற பல்வேறு உதவித்தொகைகளைப் பெற்றுப் படிக்கும் வாய்ப்பைப் பெறலாம்.

லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி, சௌதாம்ப்டன் பல்கலைக்கழகம், எராஸ்மஸ் ராட்டர்டாம் பல்கலைக்கழகம், டுலேன் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகம், எஸ்.எம்.யூ. யோங் புங் ஹாவ் சட்டப்பள்ளி, ஆஸ்லோ பல்கலைக்கழகம், ஸ்காண்டிநேவிய கடல்சட்ட நிறுவனம், ஷாங்காய் ஜியாவோ டாங் பல்கலைக்கழகம், எஸ்.ஜே.டி.யு. கோகுவான் சட்டப் பள்ளி கடல்சட்ட மையம் போன்ற நிறுவனங்களும் சர்வதேச அளவில் கடல் சட்டம் பயில சிறந்த கல்வி நிலையங்களாகப் பரவலாக அறியப்படுபவை.

கடல் சட்டம் என்பது வெறும் படிப்பு அல்ல; அது ஓர் உலகத் தரமான தொழில் வாய்ப்பு. நீங்காத் தேவையுள்ள துறை அது. தமிழர் மரபணுவில் கடல் வணிகத்தில் உலகை வென்ற பெருமிதம் ஒட்டியிருக்கிறது. ஏராளமான உதவித்தொகைகள் இந்தத் துறையில் கொட்டிக்கிடக்கின்றன. இளநிலை சட்டம் பயின்றவர்கள் உடனடியாக இந்தப் படிப்பு மீது இலக்கு வையுங்கள்.

இந்தியாவில் கடல் சட்டம்

இந்தியன் லா சொசைட்டியில் பதிவுபெற்ற சட்டப் பல்கலைக்கழகங்கள், தேசியச் சட்டப் பள்ளிகளில் மூன்றாண்டு, ஐந்தாண்டு இளநிலை சட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்தப் படிப்பைப் படிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பவர்களுக்குக் கடற்தொழிலில் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் அனுபவம் இருந்தால் அனுமதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பி & ஐ கிளப் சட்ட ஆலோசகர், கப்பல் நிதி வழக்கறிஞர், அரசாங்கக் கடல்சட்ட வழக்கறிஞர், கடல்சார் ஆற்றல் சட்டநிபுணர், கல்வி ஆராய்ச்சி துறைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் வாய்ப்புகள் இந்தத் துறையில் காத்திருக்கின்றன. இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற முக்கியத் துறைமுக நகரங்களில் கடல்சட்ட நிபுணர்களுக்கான தேவை வேகமாக அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு.

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org

SCROLL FOR NEXT