சென்னை ஐஐடியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்ட ‘பிஏஎல்எஸ்’ எனும் அமைப்பு கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இயங்கிவருகிறது. அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்பம் போன்று வெவ்வேறு துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய இந்த அமைப்பு புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளில் ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டி, அவர்களை ஊக்குவிக்கிறது.
அதன் ஒரு பகுதியாக ஒவ்வோர் ஆண்டும் கல்லூரி மாணவர்களுக்கான ‘innoWAH’ போட்டி நடத்தப்படுகிறது. தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் உள்ள 47 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் பங்கேற்ற இந்த ஆண்டின் ‘innoWAH’ இறுதிப் போட்டி, சென்னை ஐஐடி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
ஆக்கபூர்வமான படைப்புகள்
‘innoWAH’ போட்டியின் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘Engineering Solutions with Bytes & Bolts’. பல கட்ட ஆய்வுக்குப் பிறகு இந்நிகழ்வின் இறுதிப்போட்டிக்கு 64 அணிகள் தேர்வாகின.
தொழில்நுட்ப உலகில் உள்ள சவால்களுக்குத் தீர்வு காண்பதற்காகச் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ), இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT), தரவுப் பகுப்பாய்வு, ஆட்டோமேஷன் போன்ற துறைகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட பல்வேறு படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர்.
மருத்துவம், விவசாயம், தகவல் தொழில் நுட்பம் உள்படப் பல துறைகளின்கீழ் ஆக்கபூர்வமான படைப்புகளைச் சமர்ப்பித்த அணிகள் வெற்றியாளர்களாக அறிவிக்கப் பட்டனர். வெற்றி பெற்ற படைப்புகளில் ஒன்றான ‘பயோனிக் ஆர்ம்’ எனும் இயந்திரத்தை சேலம் தீரஜ்லால் காந்தி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.இ. ரோபாட்டிக்ஸ் - ஆட்டோமேஷன் பயிலும் மாணவர்கள் உருவாக்கி இருந்தனர்.
முகுந்தன்.எம், நவீன்.ஜி, லிஷாந்த்.எல், ஸ்ரீவட்சன்.ஏ, கிரிஷ்மா.ஜி, தரணி.கே ஆகியோர் அடங்கிய இந்த அணி கை இல்லாமல் அல்லது விபத்தில் கைகளை இழந்தவர்களுக்குப் பொருத்தப்படும் ‘பயோனிக் ஆர்ம்’ இயந்திரத்தைக் குறைந்த செலவில் தயாரித்துள்ளது.
ஏறக்குறைய ரூ. 1.5 லட்சம் முதல் சந்தையில் விற்பனை செய்யப்படும் இந்தச் செயற்கைக் கை இயந்திரத்தை ரூ. 40,000க்கு விற்பனை செய்யும் வகை யில் தயாரிப்பு மாதிரியை மாற்றி அமைத்துள்ளனர்.
இது குறித்துப் பகிர்ந்து கொண்ட அணித் தலைவர் முகுந்தன், “உறவினர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது அவரைப் பார்க்கச் சென்றேன். அப்போது விபத்தில் கையை இழந்த ஒருவர் உண்பதற்கு மிகவும் சிரமப்படுவதைக் கவனித்தேன். செயற்கைக் கைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் அனைவராலும் வாங்க முடியாத நிலை உள்ளது.
பொறியியல் படித்துவருவதால் எளிய மக்களும் வாங்கும் வகையில் குறைந்த விலையில் ‘பயோனிக் ஆர்ம்’களை உருவாக்கத் திட்டமிட்டோம். நண்பர்களோடு கலந்துரையாடி பல தடைகளைத் தாண்டி குறைந்த விலையில் சந்தையில் விற்பனை செய்யக்கூடிய ‘பயோனிக் ஆர்ம்’ இயந்திரத்தை உருவாக்கினோம்.
வழக்கமாக உலோகத்தில்தான் பயோனிக் ஆர்ம் தயாரிக்கப்படுகிறது. நாங்கள் காம்போசிட் மெட்டீரியல் கொண்டு இதை உருவாக்கியுள்ளோம். இதனால் எடை குறையும். அத்துடன் குறைந்த விலையிலும் உருவாக்க முடியும். இதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் முயற்சியில் உள்ளோம்” என்கிறார் நம்பிக்கையுடன்.
ஆரம்பம் முதல்...
2025ஆம் ஆண்டு ஆக்டோபர் மாதம் இந்தப் போட்டிக்கான அறிவிப்பு வெளியானது. 272 அணிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் போட்டியில் பங்கேற் பதற்காகத் தங்களது படைப்புகளைச் சமர்ப்பித்தனர்.
இந்தப் படைப்புகளை ஆய்வு செய்த நிபுணத்துவம் பெற்ற நடுவர் குழு, 216 அணிகளை அடுத்த கட்டத்துக்குத் தேர்வுசெய்தது. ஆறு கட்டங்களாக நடைபெற்ற இரண்டாம் கட்ட சுற்றுகளை அடுத்து 64 அணிகள் இறுதிப்போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டன.
இறுதிச் சுற்றுக்குத் தேர்வானவர்கள் தங்களின் படைப்புகளை சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற அரங்கில் காட்சிப்படுத்தினர்.
போட்டியில் பங்கேற்ற ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அவர்களின் படைப்புகள், ஆராய்ச்சிகள் பற்றிய கருத்துகளையும் ஆலோசனைகளையும் ‘பிஏஎல்எஸ்’ அமைப்பு வழங்கியது. திறன்மிக்கப் படைப்புகளைச் சமர்ப்பித்த அணிகள் வெற்றிபெற்றன.
இந்நிகழ்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியு மான ஸ்ரீநாத் ரவிச்சந்திரன், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார்.