சென்னையின் பரபரப்பான தெருக்களில் நாம் அன்றாடம் பார்க்கும் ஒரு ஆட்டோ ரிக்ஷாவின் விலை 2 முதல் 5 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம். ஆனால், உலகப்புகழ் பெற்ற ‘Louis Vuitton’ (LV) நிறுவனம் அதே ஆட்டோவின் வடிவில் ஒரு கைப்பையைத் தயாரித்துள்ளது.
அதன் விலை சுமார் ரூ.35 லட்சம்! வேடிக்கை என்னவென்றால், ஆட்டோ வடிவில் ஒரு கைப்பை வாங்கும் விலையில் நீங்கள் நிஜமாகவே 15 புதிய ஆட்டோக்களை வாங்கி ஒரு ஆட்டோ ஸ்டாண்டே நடத்தலாம்.
இது ஏதோ சமூக வலைத்தள நகைச்சுவை அல்ல; ‘லக்சரி பிராண்ட் மேனேஜ்மென்ட்' (Luxury Brand Management - LBM) எனப்படும் ஒரு பிரம்மாண்டமான வணிக உலகின் நிதர்சனம்.
அந்தஸ்தும் பணக்காரர்களின் ரசனையும்: பெரும் பணக்காரர்களின் உலகம் என்பது சாமானியர் களின் கற்பனைக்கு எட்டாதது. அவர்கள் வாங்கும் பொருள்கள் வெறும் பயன்பாட்டுக்கானவை அல்ல. அவை அவர்களின் தனித்துவமான அடையாளங்கள்.
சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்பி லான 7,000க்கும் மேற்பட்ட சொகுசு கார்களைக் கொண்டுள்ள புருனே சுல்தானின் ‘கார் உலக’த்தை ஒருமுறை சுற்றிப்பார்க்கவே இரண்டு நாள்கள் தேவைப்படும். அவரது தனிப்பட்ட போயிங் விமானமோ இன்னும் ஒருபடி மேலே போய், உள்புறம் முழுக்க (கழிவறை உள்பட) சுத்தமான தங்கத் தால் இழைக்கப்பட்டு மினுமினுக்கிறது.
இந்தியாவில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரூ.15,000 கோடி மதிப்பிலான ‘ஆண்டிலியா' இல்லம் முதல் அனந்த் அம்பானி அணியும் ரூ. 15-20 கோடி மதிப்புள்ள ‘ரிச்சர்ட் மில்லே' கடிகாரங்கள் வரை அனைத்தும் இந்த ஆடம் பர வணிகத்தின் அங்கங்களே.
குப்பையைக் கலையாக்கும் ‘பிராண்ட்' - நம் வீட்டுக் குப்பைத் தொட்டியில் இருக்கும் சாதாரண கறுப்பு பிளாஸ்டிக் பையைக் கற்பனை செய்து பாருங்கள். அதே தோற்றத்தில் ‘Balenciaga’ நிறுவனம் உருவாக்கிய ‘Trash Pouch’இன் விலை ரூ.1.4 லட்சம்! ‘பிராண்ட் பெயர் இருந்தால் குப்பையும் கூடக் கலைதான்’ என்று வாடிக்கை யாளர்கள் இதைக் கொண்டாடுவது வியப்பின் உச்சம்.
இதேபோல, மகாராஷ்டிரத்தின் பாரம்பரியமான ரூ. 500 மதிப்புள்ள கோலாபுரி செருப்புகளை ‘Prada’ நிறுவனம் மறுவடிவமைப்பு செய்து ரூ. 1.2 லட்சத்திற்கு விற்பனை செய்ததும் இந்தத் துறையின் வலிமையைக் காட்டுகிறது.
கல்விச் சூழலும் எதிர்காலத் தேவையும்: லக்சரி பிராண்ட் மேனேஜ்மென்ட் என்பது ஒரு பொருளை விற்பதல்ல; கனவையும் வரலாற்றையும் சமூக அந்தஸ்தையும் விற்பனை செய்யும் கலை. உலகளாவிய ஆடம்பரப் பொருள்களின் சந்தை 2035க்குள் 670 பில்லியன் டாலராக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
HEC Paris (பிரான்ஸ்), SDA Bocconi (இத்தாலி), NYU Stern (அமெரிக்கா), ESSEC Business School (பிரான்ஸ்/சிங்கப்பூர்) ஆகியவை இத்துறை சார்ந்த முக்கிய சர்வதேசக் கல்வி நிறுவனங்கள். பொருள்களின் பயன்பாட்டுக்கு அப்பாற் பட்டு, அதன் பின்னால் இருக்கும் ‘கௌரவத்திற்காக' மக்கள் செலவு செய்யத் தயாராக இருக்கும் வரை இந்த ஆடம்பரச் சந்தை வீழ்ச்சி அடையாது.
எதிர்காலத்தில் மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கும் இந்தத் துறையில் நம் இளைஞர்கள் கவனம் செலுத்தினால், இந்தியப் பாரம்பரியப் பொருள்களையும் உலகத்தரம் வாய்ந்த பிராண்டுகளாக உயர்த்த முடியும்.
ஆனால், இந்தியாவின் உயர்கல்விச் சூழலில் இன்றும் சாதாரண மேலாண் மைப் பாடத்திட்டங்களே (Regular Management Courses) முதன்மையாக இருப்பது சற்றே கவலையளிக்கிறது. மாறிவரும் உலகச் சந்தையின் தேவைகளைக் கூர்மையாக அவதானித்து, சர்வதேசத் தரத்திலான நவீன மேலாண்மைப் படிப்புகளை அரசு நிறு வனங்கள் உடனடியாகக் கொண்டுவரவேண்டியது காலத்தின் கட்டாயம்.
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org