கல்வி - வேலை வழிகாட்டி

‘ஃப்ரீலான்ஸர்’களின் கவனத்துக்கு...

ராகா

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலான வழக்கமான வேலை முறைக்கு மாற்றாக, தங்களுக்கான நேரத்தையும் பணியையும் சுதந்திரமாகத் தேர்வுசெய்து பணியாற்றும் 'ஃபிரீலான்ஸ்’ முறையை விரும்புபவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துவருகிறது.

‘ஃபிரீலான்சிங்’ மீதான ஆர்வம் ஜென் ஸீ தலைமுறையினர் இடையே அதிகமாக இருப்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டு கின்றன. ஒரு ‘ஃபிரீலான்ச’ராகப் பணியைத் திறம்பட நிர்வகிக்கக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்:

ஒப்பந்தம்

நீங்கள் ஒப்புக்கொண்டுள்ள வேலையின் தன்மை என்ன என்பதை எழுத்து பூர்வமாக உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அந்த வேலையைத் தொடங்குவதற்கு முன் மின்னஞ்சல் வழியாக ‘புராஜெக்ட் கன்ஃபர்மேஷன்’ செய்வது நல்லது.

வாட்ஸ்-அப் அல்லது திறன்பேசி அழைப்பில் வாய்வழியாக மட்டும் ஒரு வேலையை உறுதிப் படுத்துவதைத் தவிர்க்கலாம். எழுத்து பூர்வமான ஆதாரம் கையில் இருந்தால், பின்னர் ஏதேனும் பிரச்சினை ஏற்படும்போது குழப்பத்தைத் தவிர்க்கலாம்.

ஊதியம்

வேலையைத் தொடங்குவதற்கு முன் அந்த வேலைக்கான ஊதியம், காலக்கெடு உள்ளிட்டவற்றை நிறுவனத்திடம் தெளிவாகப் பேசிவிடுங்கள்.

எடுத்துக்காட்டுக்கு, நீங்கள் ஒரு மொழி பெயர்ப்பாளராக இருந்தால், மொழி பெயர்ப்புப் பணிக்கான ஊதியம், கடைசி நேரத்தில் கேட்கப்படும் அவசரப் பணிகளுக்குத் தனித் தொகை ஆகியவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.

முன்பணம்

அதிக நேரமும் உழைப்பும் தேவைப் படும் பணிகளுக்கு, வேலையைத் தொடங்குவதற்கு முன்பே ஊதியத்தில் ஒரு பகுதியை முன்பணமாகப் பெறுவது நல்லது.

மீதித் தொகையை வேலையை முழுமையாக நிறைவு செய்ததற்குப் பிறகு பெற்றுக்கொள்ளலாம். எடுத்துக்காட்டுக்கு, ஒரு புராஜெக்ட்டுக்கு ரூ.10,000 ஊதியம் என்றால், ரூ.3,000 அல்லது ரூ.5,000ஐ முன்பணமாகப் பெற்றுக்கொண்டு, மீதித்தொகையைப் பணி முடிந்த பிறகு பெற்றுக்கொள்ளலாம்.

ரசீது முக்கியம்

ஃபிரீலான்ஸராகப் பெறும் ஒவ்வொரு வருமானத்துக்கும் தொடர்புடைய நிறுவனத்துக்கு ரசீது (invoice) அனுப்பி, வேலை நிறை வடைந்ததைத் தவறாமல் பதிவுசெய்ய வேண்டும்.

யாரிடம் இருந்து எவ்வளவு பணம் பெறப்பட்டது, எப்போது பெறப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களைத் தனிப்பட்ட முறையில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பணம் செலுத்தியதற்கான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் ஒளிப்படம் எடுத்து, பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதும் அவசியம்.

வாய்ப்புகளைத் தேடி...

திறமைக்கு ஏற்ற பணிகளை உள்ளூரில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தேடலாம். ஆனால், புதிய நிறுவனத்துடன் பணியாற்றும் முன்பு அதன் நம்பகத் தன்மையைச் சரிபார்த்த பிறகு பணியை ஒப்புக்கொள்ளுங்கள். போலி நிறுவனங்களின் மோசடிகளில் சிக்காமல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

SCROLL FOR NEXT