தென்காசி மாவட்டத்தில் அதிக அளவி லான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய பெரிய தொழில் நிறுவனங்கள் இல்லை. இப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்ககான இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகப் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்கின்றனர்.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் அருகே கல்லூரணி கிராமத்தில் இயங்கும் மின்னணுப் பொருள்களை உற்பத்தி செய்யும் ‘சக்சாம் டெக்னாலஜிஸ்’ என்கிற நிறுவனம், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.
சொந்தத் தொழில்
மலையராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த மேகலிங்கம் என்பவரது மகன்கள் சக்திவேல் (31), சமுத்திரம் (29), முத்துக்குமார் (27) ஆகியோர் இந்த நிறுவனத்தை நடத்திவருகின்றனர்.
தொடக்கத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கி, ஐந்து ஆண்டுகளில் நாற்பது பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளனர்.
சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் இந்த நிறுவனத்தில் பணியாற்றிவருகின்றனர். காலையில் நிறுவனத்தைத் திறந்தவுடன் ஊழியர்களுடன் கலந்து ஆலோசித்து, அன்றைய பணிகளைத் திட்டமிட்டுச் சுறுசுறுப்புடன் நிறுவனத்தை நடத்திவருகின்றனர்.
சொந்த நிலத்தை விற்று, இயந்திரங்கள் உள்ளிட்ட முதலீட்டுக்கான பணத்தைத் தந்தை மேகலிங்கம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். ரூ.1.25 கோடியில் 2021ஆம் ஆண்டு சக்சாம் டெக்னாலஜிஸ் என்கிற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.
“நான் டிப்ளமோ இசிஇ படித்துவிட்டுத் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். என் தம்பி சமுத்திரமும் அடுத்த சில ஆண்டுகளில் டிப்ளமோ இஇஇ படித்துவிட்டு, நான் பணியாற்றிய நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார்.
பின்னர், இன்னொரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் நான் வேலைக்குச் சேர்ந்து, மின்னணுப் பொருள்கள் உற்பத்தி குறித்து நல்ல அனுபவத்தைப் பெற்றேன். கரோனா தொற்று பரவிய காலத்தில் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டன.
நான் பணியாற்றிய நிறுவனங்களில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களே அதிக அளவில் பணியாற்றினர்.
மின்னணுப் பொருள்கள் உற்பத்தியில் நானும் என் தம்பியும் நல்ல அனுபவத்தைப் பெற்றதால், கல்லூரணியில் உள்ள எங்கள் நிலத்தில் நிறுவனத்தைத் தொடங்கினோம்.
சக்திவேல், சமுத்திரம், முத்துக்குமார்
பி.எஸ்சி. ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து முடித்த என் மற்றொரு தம்பியும் எங்கள் நிறுவனத்தில் தொழில் கற்றுக்கொண்டார். இப்போது, நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து இந்த நிறுவனத்தை நடத்திவருகிறோம்” என்கிறார் சக்திவேல்.
வேலை வாய்ப்பு
நிறுவனம் தொடங்கியபோது ஏழு பேர் பணியாற்றிவந்த நிலையில், தற்போது நாற்பது பேர் பணியாற்றிவருகின்றனர். அனைவரும் சுற்றுவட்டார கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்கிறார் சக்திவேல்.
“பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு பிசிபி (Printed Circuit Board) எனப்படும் அச்சிடப்பட்ட சர்கியூட் போர்டுகளை உற்பத்தி செய்கிறோம். ரயில்வே துறை, மின்வாரியத்துக்கு சப் கான்ட்ராக்ட் முறையில் பிசிபி தயாரித்து வழங்குகிறோம்.
ஹெச்சிஎல், டிவிஎஸ் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கும் சப்ளை செய்கிறோம். எலெக்ட்ரானிக்ஸ் படித்தவர்கள் மட்டுமன்றி வேறு படிப்புகளைப் படித்த இளைஞர்களையும் எங்கள் நிறுவனத்தில் சேர்த்து, பயிற்சி அளிக்கிறோம்.
நிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தை, இதே தொழிலில் முதலீடு செய்வதோடு இன்னும் கூடுதலாக இயந்திரங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கலாம்” என்கிறார் நம்பிக்கையாக.