

ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதேநேரத்தில், அதன் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்கிற கேள்வி எழுந்திருப்பதும் கவனத்துக்குரியது.
கடந்த அக்டோபர் 27இல், தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்படுவதாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. முதல் 1.8 கி.மீ. தொலைவுக்குக் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.50 என்றும் அதற்குப் பிறகு கூடுதலாகப் பயணிக்கும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.25 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தைவிட ஒன்றரை மடங்கு வசூலிக்கலாம் என்றும் காத்திருப்புக் கட்டணம் ஒரு நிமிடத்துக்கு ரூ.1 என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதேபோல, மலைப்பகுதிகளில் இயக்கப்படும் ஆட்டோக்களின் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.60 என்றும், கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2013 ஆகஸ்ட், 2014 அக்டோபரில் வெளியான அரசாணைகளில் திருத்தம் செய்யப்பட்டுத் தற்போதைய கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.