கல்வி - வேலை வழிகாட்டி

‘கரியர் பிரேக்’குக்குப் பிறகு?

ராகா

குடும்பச் சூழல், உடல்நலம், மனநலம் அல்லது ஏதேனும் தனிப்பட்ட காரணங்களால் பணியில் இருந்து இடைவெளி எடுக்க நேரிடலாம். ஆனால், இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வேலை தேடத் தொடங்கும் போது, முன்பு இருந்த அனுபவம் மட்டும் போதாது.

சமகால வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஏற்பச் சில விஷயங்களை ‘அப்டேட்’ செய்துகொள்வது அவசியம். ‘கரியர் பிரேக்’குக்குப் பிறகு வேலைவாய்ப்பைப் பெற டிப்ஸ்...

திறன்களைப் புதுப்பித்து...

பணியில் இல்லாத காலத்தில் உங்கள் துறையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். புதிய தொழில்நுட்பங்கள், கருவிகள் அல்லது திறன்களைக் கற்றுக் கொண்டு மீண்டும் பணிக்குத் திரும்பும்போது, தற்போதைய பணிச் சூழலுக்கு நீங்கள் முழுமையாகத் தயாராக இருப்பதை நிறுவனங்கள் கவனிக்கக்கூடும்.

‘அப்டேட்’

ரெஸ்யூமில் பணி இடைவெளியை முன்னிலைப்படுத்தாமல், உங்களுடைய அனுபவம், திறன்கள், இடைவெளியின் போது கற்றுக்கொண்ட விஷயங்களை முன்னிலைப் படுத்துங்கள். பகுதி நேரப் பணிகள், பயிற்சிகள், சான்றிதழ்கள் போன்றவற்றுக்கும் கண்டிப்பாக முக்கியத்துவம் கொடுத்து ரெஸ்யூமில் குறிப்பிட வேண்டும்.

படைப்புகள்

தொடர்புடைய துறைசார் படைப்புகளை மின்னஞ்சல் வழியாகவோ அல்லது நேர்காணலின்போதோ சமர்ப்பிக்கலாம். உங்கள் துறையில் மட்டுமல்லாமல், அதனுடன் தொடர்புடைய மற்ற துறைகளில் பணியாற்றிய அனுபவம் இருந்தாலும் அதைக் குறிப்பிடுவது நல்லது.

நெட்வொர்க்கிங்

துறைசார் நிபுணர்கள், முன்னாள் ஊழியர்கள், நண்பர்கள் ஆகியோருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பல நேரம் ஒரு வேலைக்கு நேரடியாக விண்ணப்பிப்பதைவிட, ஏற்கெனவே பணியாற்றும் ஒருவரின் பரிந்துரை மூலம் விண்ணப்பிக்கும்போது வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம்.

உண்மையாக...

நேர்காணலில் பணி இடைவெளி குறித்த கேள்விகள் கேட்கப்படலாம். அதற்கான பதிலைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் முன்கூட்டியே தயாரித்துக்கொள்ளுங்கள். ஏன் பணி இடைவெளி ஏற்பட்டது என்பதற்கான உண்மைக் காரணத்தைத் தெளிவுபடுத்துங்கள்.

அதோடு நிற்காமல், இப்போது ஏன் பணிக்குத் திரும்ப விரும்புகிறீர்கள், அதற்காக உங்களை எப்படித் தயார்படுத்திக் கொண்டுள்ளீர்கள் என்பதையும் நம்பிக்கையுடன் சொல்லுங்கள்.

வாய்ப்புகளைத் தேடி...

முழுநேரப் பணி மட்டுமல்லாமல் ஒப்பந்த அடிப்படையிலான பணிகள், பகுதிநேரப் பணிகள், ஃபிரீலான்ஸ் வேலைகள் போன்ற வற்றுக்கும் விண்ணப்பிக்கலாம். சிறிய வாய்ப்பாக இருந்தாலும் பணிக்குத் திரும்பி மீண்டும் அனுபவம் பெற நல்ல தொடக்கமாக அமையலாம்.

சரியான வழியில்...

ஒரே ரெஸ்யூமை அனைத்து வேலைவாய்ப்பு களுக்கும் அனுப்புவதற்குப் பதிலாக, உங்கள் திறன்களுக்கும் அனுபவத்துக்கும் பொருத்தமான வேலைகளைத் தேர்ந்தெடுங்கள். ஒவ்வொரு வேலை வாய்ப்புக்கும் ஏற்றவாறு பணிவிவரக் குறிப்பையும் உங்கள் விண்ணப்பத்தையும் மாற்றி அனுப்புங்கள்.

SCROLL FOR NEXT