கல்வி - வேலை வழிகாட்டி

மீன்வளத் துறையில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு

Guest Author

மருத்துவம், வேளாண்மை, பொறியியல் உள்ளிட்ட துறைகளுடன் மீன்வளக் கல்வியும் இன்று முக்கியத்துவம் பெற்று வருகிறது. உணவுப் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, வருமானத்தில் முக்கியப் பங்காற்றும் மீன்வளத் துறை, இந்தியாவின் வளர்ந்துவரும் துறைகளில் ஒன்றாக உள்ளது.

பிளஸ் 2 அறிவியல் பிரிவில் (உயிரியல், வேதியியல், இயற்பியல்) பயின்ற மாணவர்கள் மீன்வளப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். சில கல்லூரிகளில் தொழிற் கல்விப் பிரிவில் விவசாயம் அல்லது மீன் வளம் படித்தவர்களுக்குத் தனி இடஒதுக்கீடு உண்டு.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், அண்ணா மலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டப் படிப்புகளையும் தொழில் சார் படிப்புகளையும் வழங்குகின்றன.

மீன்வள அறிவியல், மீன்வளப் பொறியியல், மீன் வளர்ப்பு, மீன் பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் கல்வி கற்று அரசு, தனியார், ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிவாய்ப்புகளைப் பெறலாம்.

மத்திய - மாநில அரசு வேலைகள்

சம்பந்தப்பட்ட பாடங்களில் தேசியத் தகுதித் தேர்வு (NET) தேர்ச்சி பெற்று, முனைவர் பட்டம் பெற்றவர்கள் பேராசிரியர், பாட வல்லுநர், ஆராய்ச்சியாளர் ஆகலாம். தமிழ்நாடு மீன்வளம் - மீனவர் நலத் துறையில் மீன்வள உதவி ஆய்வாளர்/ஆய்வாளர், பண்ணை மேலாளர், மேலாளர், உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்படுகின்றன.

வேளாண் ஆராய்ச்சிப் பணியில் (ARS) தேர்ச்சி பெற்றவர்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் - மீன்வளப் பல்கலைக் கழகங்களின் நன்னீர், உவர்நீர், கடல்நீர் ஆராய்ச்சி மையங்களில் விஞ்ஞானி களாகப் பணியாற்றலாம்.

மேலும், இந்திய மீன்வளக் கணக்கெடுப்பு நிறுவனம் (FSI), கடல்சார் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (MPEDA) ஆகியவற்றிலும் ஆய் வாளர், அதிகாரி பணிவாய்ப்புகள் உள்ளன.

வங்கித் துறை

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வேளாண்மை கடன் அதிகாரி (AFO), தேசிய வேளாண் - ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) போன்றவற்றில் மேலாளர் பணியும் உள்ளது. இதில் மீன்வளப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களில் மீன் - இறால் வளர்ப்புப் பண்ணைகளில் மேலாளர்கள், மீன் தீவனத் தயாரிப்பு நிறுவனங்களில் தொழில்நுட்ப வல்லுநர்கள், கடல் உணவு பதப்படுத்தும், ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பணிகளும் உள்ளன.

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு

சர்வதேச அளவில் கடல் உணவுக்கான தேவை அதிகரித்துவருகிறது. அது தொடர்பான நிறுவனங்களில் மீன்வளப் படிப்பு படித்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

குறிப்பாக நார்வே, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் அதிநவீன மீன்வளர்ப்புப் பண்ணைகளிலும் ஆராய்ச்சி நிறுவனங் களிலும் இந்திய மீன்வளப் பட்டதாரிகளுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைகள் கிடைக் கின்றன.

நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா?

தமிழ்நாட்டில் மீன்வளக் கல்வி படிக்கத்தனியாக நுழைவுத் தேர்வு எதுவும் இல்லை. பிளஸ் 2 வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் (Cut-off Marks) அடிப்படை யிலேயே கலந் தாய்வு மூலம் சேர்க்கை நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி மாணவர் சேர்க்கை நடைபெறு கிறது. மீனவர் சமூக மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலும் சிறப்பு இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் சேர்க்கை வழங்கப்படுகிறது.

ஆனால், மத்திய அரசின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ICAR-AIEEA போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும்.

தொழில் வாய்ப்புகள்

மீன்வளத்தில் பல்வேறு தொழில் வாய்ப்பு கள் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக நன்னீர் மீன் உற்பத்தி, கடல் மீன் உற்பத்தி, இறால் வளர்ப்பு, ஆழ்கடல் மீன் பிடிப்பு, மதிப்பு கூட்டப்பட்ட மீன் உணவுப் பொருள்கள் தயாரித்தல், உயிர்மீன் விற்பனை, மீன் ஏற்றுமதி, மீன் கழிவுகளில் இருந்து உரம் தயாரித்தல், வண்ண மீன் வளர்ப்பு, வண்ண மீன் குஞ்சுப் பொரிப்பகம், வண்ண மீன் விற்பனை அங்காடி, ஜிலேபி மீன் உற்பத்தி - வளர்ப்பு - விற்பனை, கடல்பாசி வளர்ப்பு, மீன்பிடி - வளர்ப்பு தொடர்பான கருவிகள் தயாரிப்பு, மீன் உணவு தயாரித்தல், நண்டு வளர்ப்பு, ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு, கூண்டு மீன் வளர்ப்பு, இணையவழி மீன் விற்பனை எனப் பல்வேறு தொழில் வாய்ப்பு கள் மீன்வளம் சார்ந்து இருக்கின்றன.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மீன்களுக்கான சந்தை வாய்ப்பு மிக அதிகம். இவை தவிர மத்திய, மாநில அரசுகள் மீன்வளம் சார்ந்த ஆராய்ச்சி நிலையங்கள், தேசியக் கூட்டுறவு மேம்பாட்டு கழகம் ஆகியவை மீன் உற்பத்தியாளர்கள், மீனவர்களுக்குத் தொழில் முனைவோர் பயிற்சிகள், வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன. மேலும் விவரங்களுக்கு: www.tnjfu.ac.in

- கட்டுரையாளர், இல. சுருளிவேல், உதவிப் பேராசிரியர், டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையம்; surulivel@tnfu.ac.in

SCROLL FOR NEXT