அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றில் நூறாண்டுகாலப் போரட்டத்துக்குப் பிறகும் பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்ட நிலையில் விடுதலைக்குப் பிந்தைய முதல் பொதுத் தேர்தலிலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. அன்றைய தேசியத் தலைவர்களில் பலர் மத, இன வேறுபாடுகளைக் கடந்த முற்போக்குச் சிந்தனையையும் பாலின பேதமற்ற சமத்துவப் பார்வையையும் கொண்டிருந்ததால் இது சாத்தியமானது.
பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டபோதும் பெண்கள் அனைவருக்கும் அந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கணவரின் இருப்பு - பொருளாதார நிலை, மதம், இனம், தொழில் போன்றவற்றின் அடிப்படையில் பெண்களில் சிலர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். 1921இல் மதராஸ் மாகாணத்திலும் பம்பாய் மாகாணத்திலும் நடைபெற்ற தேர்தல்களில் பெண்கள் வாக்களித்திருக்கின்றனர். 1930க்குள் பிற மாகாணங்களிலும் பெண்களில் குறிப்பிட்ட பிரிவினர் தேர்தலில் வாக்களித்தனர். சில பெண்கள் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடவும் ‘அனுமதிக்கப்பட்டனர்’.
அடையாளமற்றவர்கள்: அன்றைக்கும் பெண்களின் அதிகபட்ச அரசியல் பங்களிப்பு வாக்குரிமையாக மட்டுமே இருந்தது. அன்றைய சமூகத்தில் நிலவிய கடுமையான பாலினப் பாகுபாடு, கல்வியறிவின்மை, அறியாமை, மூடநம்பிக்கைகள் போன்றவை பெண்களிடமிருந்து வாக்குரிமையைக்கூடப் பறித்தன. 8 கோடி பெண் வாக்காளர்கள் இருந்த நிலையில் 1948இல் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணியின்போது 28 லட்சம் பெண்கள் தங்கள் பெயரைப் பதிவுசெய்யக்கூட விரும்பவில்லை.
தனித்த அடையாளம் ஏதுமின்றி, ‘இன்னாரது மனைவி, மகள், தாய்’ என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும் வகையில்தான் அன்றைக்குப் பெண்களின் நிலை இருந்தது. ‘இதனால் அவர்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது. பிஹார், உத்தரப் பிரதேசம், மத்திய பாரதம், ராஜஸ்தான், விந்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் இதுபோன்றவை நிகழ்ந்தன’ என 1955இல் வெளியான ‘முதல் பொதுத் தேர்தல் அறிக்கை’ தெரிவிக்கிறது. அதற்காகப் பெண்களை அப்படியே விட்டுவிடவில்லை இந்திய அரசமைப்பு அவை. விடுபட்ட பெண்களின் பெயர்களைப் பட்டியலில் சேர்க்க ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது.
விழித்துக்கொண்ட வாக்காளர்கள்: 1951-1952 இந்தியப் பொதுத் தேர்தலின்போது 17 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தனர். அவர்களின் 45% பேர் பெண்கள்! ஆனால், குடும்பப் பொறுப்புகள், வீட்டை விட்டு வெளியே செல்வதில் இருந்த தடை, அரசியல் அறிவின்மை போன்றவற்றால் பெண்களின் வாக்குவீதம் ஆண்களைவிடக் குறைவாகவே இருந்தது. 1967 மக்களவைத் தேர்தலில் ஆண் வாக்காளர்களில் 66.7 சதவீதத்தினரும் பெண்களில் 55.5 சதவீதத்தினரும் வாக்களித்திருந்தனர்.
1967இல் பாலின அடிப்படையிலான வாக்குப்பதிவு இடைவெளி 11.2%ஆக இருந்தது 1971இல் 11.8%ஆக அதிகரித்தது. கல்வியறிவு, விழிப்புணர்வு, பெண்களின் பொதுவெளிப் புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றால் 1980க்குப் பிறகு பெண்களின் வாக்குப்பதிவு வீதம் உயரத் தொடங்கியது. 2014 மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இடைவெளி 1.5%ஆகக் குறைந்து, 2019 தேர்தலில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் வாக்களித்து தேர்தல் களத்தில் தங்கள் வாக்குரிமையை நிலைநாட்டினர்.
முந்தும் தமிழ்ப் பெண்கள்: 1990களுக்குப் பிறகு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பெண்களின் வாக்குப்பதிவு வீதம் கணிசமாக உயரத் தொடங்கியது. தமிழ்நாட்டில் 2008 நிலவரப்படி பாலின அடிப்படையிலான வாக்குப்பதிவு இடைவெளி 1%ஆக இருந்த நிலையில் 2011க்குப் பிறகு தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தது. பெண்களின் வாக்குப்பதிவு வீதம் ஆண்களைவிட அதிகரித்தது. 2011இல் ஆண்களைவிடப் பெண்கள் 1.13% அதிகமாக வாக்களித்தனர். இது 2015-2016இல் 2.82%ஆக உயர்ந்தது! ஆண்களைவிடப் பெண் வாக்காளர்கள் குறைவாக இருந்தபோதும் பெண்களின் வாக்குப்பதிவு வீதம் சீராக உயர்ந்திருப்பது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதில் பெண்களுக்கு இருக்கும் அக்கறையைக் காட்டுகிறது.
2025 ஜனவரியில் வெளியிடப்பட்ட வாக்காளர் வரைவுப் பட்டியலின்படி தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், அருணாசலப் பிரதேசம், மேகாலயம் உள்ளிட்ட13 மாநிலங்களிலும் 1 மத்திய ஆட்சிப் பகுதியிலும் ஆண்களைவிடப் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். 22 மாநிலங்களில் வாக்காளர் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 954 பெண்கள் என்கிற தேசிய சராசரியைவிட அதிகம். பெண்களின் வாக்குப்பதிவு வீதம் அதிகரித்திருப்பதாலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாலும் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாகப் பெண்கள் மாறியுள்ளனர்.
விடுபடும் பெண்கள்: வெற்றியைத் தீர்மானிக்கிறவர்கள் பெண்களே என்பதால்தான் பல்வேறு கட்சிகளும் பெண்களின் நலனை முன்னிலைப்படுத்தும் அல்லது பெண் வாக்காளர்களை ஈர்க்கும் வகையிலான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடுகின்றனர். கட்சிகள்தோறும் மகளிர் அணிகள் உருவாக்கப்படுகின்றன, ஆயிரக்கணக்கான பெண்களைத் திரட்டித் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன, விருப்பத்துடனோ, நிர்பந்தத்தின் அடிப்படையிலோ தேர்தலில் போட்டியிடப் பெண்களுக்கும் கணிசமான அளவில் வாய்ப்பளிக்கப்படுகிறது.
இவ்வளவு இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் விடுபடுவது அரசியல் முரண். 2019 மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் 2 கோடிக்கு அதிகமான பெண்கள் விடுபட்டிருந்தனர். தங்கள் பெயரைக் கூறக்கூடப் பெண்கள் அச்சப்பட்ட நிலையில் இருந்து 70 ஆண்டுகள் முன்னோக்கி வந்துவிட்டோம். இப்போதும் பட்டியலில் அதிகமாக விடுபடுகிறவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்துக்குப் பிறகு பல மாநிலங்களில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் 2025 டிசம்பர் நிலவரப்படி கிட்டத்தட்ட 50 லட்சம் பெண்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டிருந்தனர். ஏற்கெனவே பாலின இடைவெளி அதிகமாக இருந்த பிஹாரில் தீவிரத் திருத்தத்துக்குப் பிறகு அது 892ஆகச் சரிந்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
பாலின விகித இடைவெளி அதிகரித்திருக்கிறது. வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்குப் பிறகு தமிழ்நாடு தவிர பிற பெரிய மாநிலங்களில் பாலின விகித இடைவெளி அதிகரித்திருக்கிறது. வேலை, திருமணம் காரணமாகப் பெண்கள் இடம்பெயர்வது இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டாலும் ஆட்சியாளர்களின், அரசியல் கட்சிகளின் அலட்சியமும் இதற்குக் காரணம்.
ஆள்வோரின் கடமை: தங்கள் ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாததாலேயே வாக்காளர் பட்டியலில் இருந்து பெரும்பாலான பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர். படித்த, மேல்தட்டுப் பெண்களாலே இதுபோன்ற நடைமுறைகளைக் கையாள முடியாதபோது குடும்ப அட்டை, நலத்திட்ட உதவி பெறுவதற்கான சான்றுகள் தவிர மற்ற ஆவணங்கள் பெண்களுக்குத் தேவையில்லை என்று நம்பவைக்கப்பட்டிருக்கும் கிராமப்புறப் பெண்கள் எப்படித் தங்கள் ஆவணங்களைச் சமர்ப்பித்திருக்க முடியும்?
பெண்களிடம் வாக்குச் சேகரிப்பதில் அக்கறையோடு செயல்படுகிறவர்கள் இதுபோன்ற நேரத்தில் பெண்களுக்கு உதவாததன் அரசியலையும் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆள்வோரைத் தீர்மானிக்கிறவர்களாகப் பெண்கள் மாறுவதைத் தடுக்க இதுபோன்ற சவால்கள் எல்லாக் காலத்திலும் வெவ்வேறு வடிவங்களில் எழுந்துள்ளன. இனிவரும் தேர்தல்களிலாவது பெண்கள் அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றத் துணைநிற்க வேண்டியது அதிகார அமைப்புகளின் அடிப்படைக் கடமை.